Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவே எமது இதயங்களை உமது இதயம் போல மாற்றும்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
இயேசுவின் திருஇதயம் பெருவிழா
மு.வா:இச: 7: 6-11
ப.பா: திபா 103: 1-2. 3-4. 6-7. 8,10
இ.வா: 1 யோவா: 4: 7-16
ந.வா:மத்: 11: 25-30
இன்று நாம் கொண்டாடுவது இயேசுவின் தூய இதயத்தின் பெருவிழா. இது அன்பை உணர்த்தும் விழா. ஏனென்றால் இயேசுவின் இதயம் இந்த உலகத்தையே தன்னுள் அடக்கும் அளவுக்கு விசாலமானது. பரந்து விரிந்தது. அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. யாரையும் தள்ளி வைக்காதது. இயேசுவின் இதயத்தோடு நம் இதயங்களை ஒப்பிட்டு பார்க்க நினைப்பது கூட அறிவீனமே. இயேசுவின் இதய விழா நமக்கெல்லாம் கூறும் அன்பின் பாடமென்ன? இதயம் திறந்து கேட்போமா!
முதலாவதாக "சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள் " என்ற வார்த்தையை சற்று தியானிப்போம். என்ன ஒரு ஆறுதலின் மொழி இது! சுமை ...என்பது மனப்பாரம். இந்த மனப்பாரம் பலவற்றால் வரலாம். உடல் நோய், கடன் சுமை, ஏழ்மை, தனிமை, பாவம், உறவுச் சிக்கல், பலவீனம், தோல்வி என பல காரணங்கள் இருக்கலாம். இப்படி பலவித பிரச்சினைகளால் அல்லறும் யாராக இருந்தாலும் இயேசுவை அணுகிப் போனால் நிச்சயம் ஆறுதலுண்டு. இயேசு வாழ்ந்த காலத்தில் பலர் அவரை அணுகிச் சென்றார்கள். ஆறுதல் அடைந்தார்கள். அதேவேளையில் பிரச்சனைகளால் ஆறுதலின்றி நம்மிடம் வருபவர்களுக்கு நம் இதயத்தில் இடமுண்டா? எனக் கேட்டால் அதற்கு பதில் நம்மிடம் இல்லை எனலாம்.அதற்கு முதலில் நம் இதயத்தில் இயேசு இருக்க வேண்டும். இயேசுவுக்கு நம் இதயத்தில் இடம் கொடுத்தால் பிறருக்கும் இடம் இருக்கும் அன்றோ!
இரண்டாவதாக "என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் " என்கிறார் இயேசு. சுமையாய் இருப்பவர்களே என்னிடம் வாருங்கள் உங்களுக்கு ஆறுதல் தருவேன் என்கிற இயேசு, அந்த சுமைகளைத் தாங்கிக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தை எவ்வாறு முன்னேற்றி செல்வது என்பதையும் என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என மொழிகிறார். இயேசுவைத் தேடிச் சென்றால் துன்பங்களிலிருந்து நம்மை விலக்கி காப்பாற்றி விடுவார் என்பது பொருளல்ல. மாறாக அத்துன்பங்க ளை எவ்வாறு சந்தித்து வென்றெடுப்பது என்பதை அவர் கற்றுத்தருவார். அதை கற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? கிறிஸ்தவ வாழ்வு சிலுவைகளை சுமக்கக் கூடிய வாழ்வாக இருந்தால் மட்டுமே அதற்கு பொருள் உண்டு. சிலுவைகளே நம்மை இயேசுவின் சீடராக்குகின்றது என்பதை நாம் உணர வேண்டும்.
இயேசுவின் இதயம் எதையும் தாங்கும் இதயம். நம்மிதயமும் அவ்வாறு இருக்க வேண்டுமென்று நாம் விரும்பி இயேசுவை நாடிச் சென்று அவரிடம் கற்றுக்கொண்டால் மட்டுமே இவ்விழா நமக்கு அர்த்தமுள்ளது. சிந்திப்போம்.
இறைவேண்டல்
இயேசுவே! உமது இதயத்தை நாடி வருகிறோம். எம்மை ஏற்றுக்கொண்டு எமக்கு கற்றுத்தந்து எங்களின் இதயங்களை உமது இதயம் போல மாற்றுவீராக. ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய மாதா ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment