இறைவனிடம் நமக்குள்ள அன்பை உறுதிசெய்வோம்! | குழந்தைஇயேசு பாபு | DailyReflection


காலம்-ஏழாம் வாரம் வெள்ளி
I : திப25:13-21
II : திபா 102:1-2,11-12,19-20
III :யோவான் 21:15-19

இறைவனை அன்பு செய்கிறாயா?  என்று யாராவது நம்மிடம் கேட்டால் நம் எல்லாருடைய பதிலும் "ஆம் " என்றுதான் இருக்கும். ஆனால் கஷ்டங்களும் துன்பங்களும் நம்மை வாட்டும் நேரத்தில் இறைவனை அன்பு செய்கிறாயா என யாரேனும் கேட்டால் " ஆம் " என உறுதியாகச் சொல்ல முடியுமா? என்று நாம் இன்று சிந்திக்க வேண்டும்.

இயேசு தம் சாவை அறிவிக்கும் போது பேதுரு இயேசுவைக் கடிந்து கொண்டார். இயேசுவோடு இணைந்து தானும் இறப்பேன் என வீரவசனம் பேசினார். அப்போது இயேசு பேதுருவிடம் அவர் தன்னை மும்முறை மறுதலிப்பார் என்று கூறினார். இன்று அதே பேதுருவிடம் " என்னை  அன்பு செய்கிறாயா ?" என மும்முறை வினவுகிறார். இக்கேள்வி பேதுரு தன்னை மும்முறை மறுதலித்ததை நினைவூட்ட அல்ல. மாறாக அவருடைய அன்பை உறுதிப்படுத்தவே.

பேதுரு இயேசுவோடு தானும் சென்று இறப்பேன் என்று கூறிய தருணத்தில் இயேசுவுக்கும் சீடர்களுக்கும் ஏதும் பிரச்சனைகள்  இல்லாத நிலை இருந்தது.யூதர்களின் எதிர்ப்பு அவ்வப்போது இருந்த போதும் சீடர்கள் இயேசுவுக்கு கிடைத்த பாராட்டுகளிலும் பெருமிதத்திலும் தங்களுக்கும் பங்குண்டு என எண்ணி மகிழ்வோடு இருந்தார்கள். சீடர்களில் மூத்தவரான பேதுருவும் அம்மனநிலையில் இருந்தார். எனவே இயேசுவுக்காக உயிரையும் கொடுப்பேன் எனச் சொன்னார். அந்த அன்பின் உறுதியற்ற தன்மையை இயேசு உணர்ந்திருந்தார். அவர் சொன்னவாறே பேதுரு மறுதலிக்கவும் செய்தார்.

இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்புக்குப் பிறகு சீடர்கள் அடைந்த துயரம் ஏராளம். மூன்று ஆண்டுகளாய் இயேசுவின் பின்னால் சென்றவர்கள் இயேசு இன்றி தனியாக விடப்பட்டனர். தங்கள் தொழிலை மறந்தனர்.என்ன செய்வது?  எப்படி வாழ்வது?  யாரை அணுகுவது? போன்ற ஏமாற்றத்திலும் குழப்பத்திலும் இருந்தனர்.  அத்தகையை மனநிலையைக் கடந்த பின் தங்களுக்கான பணியை அவர்கள் உணர ஆரம்பித்த தருணத்தில்தான்   பேதுரு இயேசுவை அன்பு செய்வதை உறுதிப்படுத்துகின்றார். 

ஆம் அன்புக்குரியவர்களே நாம் கடந்து வந்த பாதையை நாம் அலசி ஆராய்ந்து பார்த்து,நல்லவை, தீயவை என  எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு இனிமேலும் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என புரிந்த கொண்ட பின்னரும் நம்மால் " நான் இயேசுவை அன்புகிறேன் " ," இறைவனை நேசிக்கிறேன் "என பதில் கூற முடிந்தால் நம்முடைய அன்பு உறுதியடையும். உறுதிப்படுத்துவோமா கடவுளின் மேல் நாம் கொண்டுள்ள அன்பை?

இறைவேண்டல் 
அன்பின் பிறப்பிடமே இறைவா!
உம்மீது நாங்கள் கொண்டுள்ள அன்பை ஒவ்வொருநாளும் உறுதி பெறச் செய்யும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்கமங்கலம் பங்கு 

Add new comment

10 + 2 =