உலகே எதிர்த்தாலும் துணிந்து நன்மை செய்வோமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் - ஐந்தாம் வெள்ளி; I: எரேமியா 20: 10-13; II: தி.பா 18 : 1-2a,3. 4-5. 6 ; III: யோ: 10: 31-42

ஒருமுறை ஆசிரியர் தன் வகுப்பில் நன்னெறி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ஒரு வெள்ளைக் காகிதத்தைக் காட்டி என்ன தெரிகிறதென்று கேட்டார். அக்காகிதத்தில் ஒரு கருப்புப் புள்ளி இருந்தது. எல்லோருமே அக்கருப்புப் புள்ளியைத் தான் சுட்டிக்காட்டினர். ஆசிரியர் மிகுந்த ஏமாற்றத்துடன் அக்காகிதத்தில் வெண்மையான இடம் நிறைய இருக்கிறது. யாருமே அதைச் சுட்டிக்காட்டவில்லையே எனச்கூறி அதன் வழியாய் ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக்கொடுத்தார். "உன்னிடம் எவ்வளவு நன்மைத் தனங்கள் இருந்தாலும் உன் குறையை மட்டுமே உலகம் முதன்மைப்படுத்தும் " என்பதே அப்பாடம்.

இத்தகைய நிலை இயேசுவுக்கும் ஏற்பட்டது. அவருடைய போதனையின் உண்மைப் பொருளை  உணர இயலாத யூதர்கள் அவர்மேல் கல்லெறியத் தயாராயினர்." நான் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்திருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காய் என்மீது கல்லெறிகிறீர்கள் "என்று இயேசு கேட்கும் கேள்வி பலருடைய மனநிலையை பிரதிபலிப்பதாய் இருக்கிறது. 

குடும்பம்,நண்பர்கள் வட்டாரம்,பணித்தளம் போன்ற இடங்களில் நாம் நேர்மையாக பணிகள் செய்திருப்போம். பல சமயங்களில் நம் சுயநலத்தை மறந்து அன்போடும் அக்கறையோடும் பணிகள் செய்திருப்போம். ஆனால் என்றாவது ஒரு சிறு சறுக்கல் ஏற்பட்டு விட்டால், அதுவரை நாம் செய்த எல்லா நன்மையானவைகளும் காணாமலேயே போய்விடும். கேள்விக் கணைகளும்,விமர்சனங்களும், ஏச்சுக்களும்,வெறுப்புணர்வுகளும் நம்மீது கற்களாக எறியப்படும்.

இயேசுவை நோக்கி எத்தனை எதிர்மறையான விமர்சனங்கள் கற்களாக எறியப்பட்டாலும் நற்செயல்கள் செய்வதில் உறுதியாக இருந்தார். அதனாலேயே துணிவுடன் எதிரிகளை எதிர்கொண்டார். தனக்காக தானே வாதாடினார்.இத்தகைய மனநிலையைத் தான் இயேசுவின் சீடர்களாகிய நாமும் கொண்டிருக்க வேண்டும். உலகமே நம்மை எதிர்த்தாலும் நன்மை செய்யத் தயங்கக் கூடாது. பழுத்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள். நமது வாழ்வு எதிர்ப்புகளுக்கு நடுவிலும் இறையாட்சிக் கனிதரும் வாழ்வாக அமைய இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

நன்மையின் உற்றே இறைவா!  எங்கள் வாழ்வு ஏமாற்றங்களுக்கும் எதிர்மறையான மனிதர்களுக்கு மத்தியிலும் கனிதரும் வாழ்வாக அமைய வரம் தாரும். ஆமென்.

Add new comment

13 + 3 =