நிலம் சொல்லும் பாடம் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலத்தின் மூன்றாம் புதன்
I: 2 சாமு: 7: 4-17
II : திபா: 89: 3-4. 26-27. 28-29
III: மாற்: 4: 1-20

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த  பாலஸ்தீன மக்கள் மட்டுமல்ல, இன்றளவும்  அகில உலக மக்களும் நிலத்தையே நம்பி வாழ்ந்து வருகிறோம். நிலமின்றி உணவில்லை. அவ்வாறெனில் நாம்  விதைக்கும் விதை நிலத்தின் தரத்திற்கேற்ப  மட்டுமே பலன் தரும் என்ற ஆழமான சிந்தனையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இச்சிந்தனையை பாடமாக சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி.  நிலத்தின் வளத்தை விவசாயிகள் தெளிவாகப் புரிந்துகொண்டு அதைப் பண்படுத்துவது போல மனத்தின் தரத்தை உயர்த்தும்  பணியில் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற பாடத்தை இன்றைய நற்செய்தியின் உவமை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

 இயேசு வாழ்ந்த பாலஸ்தீனப் பகுதி அதிக நிலவளம் இல்லாத ஒரு பூமி. அங்கே திராட்சை, கோதுமை , ஒலிவ மரங்கள் தான் அதிகமாக வளரும். ஆங்காங்கே பாறைகளும் முட்செடிகளும் அதிகம் காணப்பட்டது. அது மலைப்பாங்கான பகுதி.  விவசாயிகள் இத்தகைய சூழலையெல்லாம் மீறி தான் விவசாயம் செய்தனர்.  அத்தகைய ஒருசூழலில்தான் ஆண்டவர் இயேசு இன்றைய உவமையின் வழியாக நான்கு வகையான நிலத்தைப் பற்றி பேசியுள்ளார். 
இயேசு மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் எதார்த்த வாழ்வை மையப்படுத்தி போதனை செய்துள்ளார். விவசாயிகளின் விதைகள் விழுந்த நிலப்பகுதியில் எத்தகைய பலனை பெற்றார்கள் என்பதை பிரித்து உவமைமையாகக் கூறியுள்ளார்.

நிலத்தின்  வழியோரம் விழுந்த விதைகள் பறவைகளால் விழுங்கப்பட்டது. எனவே அவை பலன் தரவில்லை. பாறைப் பகுதியில் விழுந்த விதைகள் ஆழம் இல்லாததால் விரைவில் முளைத்து,விரைவிலேயே காய்ந்து பலன் கொடுக்காமல் போனது. விதைகள் முட்செடி பகுதியில் விழுந்ததால் அவை வளர்ந்து நெருக்கப்பட்டு பலன் கொடுக்காமல் போனது.  இறுதியாக நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் மட்டுமே பன்மடங்கு விளைச்சலைக் கொடுத்தது.

இன்றைய உவமை நாம் நல்ல நிலங்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. நிலத்தில் விளைச்சல் கொடுக்க வேண்டுமென்றால்,  அந்த நிலம் பண்படுத்த பட வேண்டும்.கற்களும் முற்களும் அகற்றப்பட வேண்டும். கடினமான பகுதிகள் நீர்பாய்ச்சப்பட்டு மென்மையாக்கப்பட வேண்டும். அதேப்போல  நம்முடைய வாழ்வு பலன் கொடுக்க வேண்டுமெனில்  நம்மையே முழுமையாக பண்படுத்த வேண்டும்.  அதற்கு நம்முடைய உள்ளத்தையும் ஆன்மாவையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும்.தேவையற்ற கவலைகளையும் பிடிப்புகளையும் அகற்ற வேண்டும்.இறைவார்த்தை உள்நுழைய இயலாவண்ணம் நம் மனங்கள் இறுக்கமாக அல்லாமல் கனிந்த மென்மையான மனமாய் மாறவேண்டும். உலக மாயைகள் நம் மனதை நெருக்காமல் காக்க வேண்டும். அப்பொழுது நிச்சயமாக நாம் பலன் கொடுக்க முடியும். நாம் நம்மையே பண்படுத்தி கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ இறைவார்த்தையின் படி வாழக் கற்றுக் கொள்வோம். அப்பொழுது நம்மிடம்  விதைக்கப்படும் இறைவார்த்தைகள்  பன்மடங்கு பலன் கொடுக்கும். எனவே நல்ல கிறிஸ்தவ மக்களாக வாழ்ந்திடத் தேவையான அருளை வேண்டுவோம்.  

 இறைவேண்டல்
வல்லமையுள்ள  இறைவா!  நல்ல நிலம் பன்மடங்கு விளைச்சலை கொடுப்பதைப் போல, நல்ல வாழ்வு வாழ்ந்து பன் மடங்கு விளைச்சல் கொடுக்க அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

11 + 0 =