செபிக்க தயாரா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


திருக்காட்சி விழாவுக்குப் பின் புதன்
I: 1 யோ:  4: 11-18
II : திபா 72: 1-2. 10-11. 12-13
III: மாற் 6: 45-52

நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் செபம் உயிர் நாடியாக இருக்கிறது. ஒரு மனிதன் உயிர் வாழ இதயம் இவ்வாறு முக்கியமோ, அதே அளவுக்கு உயிர்த்துடிப்புள்ள கிறிஸ்தவ வாழ்வுக்கு செபம் மிகவும் முக்கியம். நம்முடைய வாழ்க்கையில் பலவற்றைத் தேடி பரபரப்பாக இருக்கிறோம். கடினப்பட்டு உழைக்கிறோம். சில நேரங்களில் போதிய தூக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆயினும் வாழ்க்கையில் வளர்ச்சியை விட தளர்ச்சி அதிகமாக இருப்பதை உணர்கிறோம். காரணம் என்னவெனில் கடவுள் கொடுத்த 24 மணி நேரத்தில் அரை மணி நேரம் கூட கடவுளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்காததேயாகும். நாம் கடவுளுக்கு எந்த அளவுக்கு நேரத்தை ஒதுக்குகிறோமோ, அந்தளவுக்கு கடவுளின் அருளையும் ஆசியையும் பெறுகிறோம். இதைத்தான் இன்றைய நற்செய்தியில்  வாசிக்கிறோம். 

ஆண்டவர் இயேசு ஒரு  இறைமகன். அவருக்கு எல்லா அதிகாரமும் சக்தியும் வல்லமையும் உண்டு. ஆனாலும் அவர் தந்தையின் திருவுளத்தை அறிந்து அனைத்தையும் செய்வதில் கவனமாய் இருந்தார். அதற்காக செப வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். தந்தையோடு காலையிலும் மாலையிலும் ஒன்றித்திருந்தார். 5000 பேருக்கு உணவு கொடுத்து வல்ல செயல் செய்த இயேசு தன்னுடைய சீடர்களை பெத்சாய்தாவுக்கு முன்கூட்டியே செல்லுமாறு கட்டாயப்படுத்தினார். அதன்பிறகு அவர் தந்தையிடம் உறவு கொள்வதற்காக மலைக்குச் சென்றார்.

ஆண்டவர் இயேசுவின் செப வாழ்வு நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கிறது. இயேசுவின் ஆன்மீக பலம் அவருடைய செப வாழ்வாகும். ஜெபத்தின் வழியாக அவர் பெற்ற நன்மைகள் ஏராளம். எந்த அளவுக்கு இயேசுவின் செப  வாழ்வு அவருக்கு ஆசீர்வாதத்தை கொடுத்திருக்கிறது என்பதை அறிந்து நாமும் அத்தகைய வாழ்வு வாழ முயற்சி செய்ய அழைக்கப்படுகிறோம்.

முதலாவதாக இயேசுவின் செப வாழ்வு இறைவனின் திருவுளத்தை அறிவதற்கு உதவியது. இறை திருவுளத்தை நிறைவேற்ற வந்த இயேசு ஒவ்வொரு செயலையும் தந்தையின் திருவுளத்தின்படி செய்தார். எனவே தந்தையாம் கடவுளின் ஆசியையும் உடனிருப்பையும் முழுமையாக பெற்றார். நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் தந்தையாம் கடவுளின் திருவுளப்படி வாழ்வதற்கு நாம் செபிக்க வேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்து "தந்தையே உமது  திருவுளப்படி என்னை நடத்தும்" என்று செபிக்க வேண்டும். அப்பொழுது நிச்சயமாக தந்தையாம் கடவுள் நம்மை ஆற்றல் படுத்தி திடப்படுத்துவார். 

இரண்டாவதாக துன்ப துயரங்களை சந்திப்பதற்கு இயேசுவுக்கு செபம் பலமாக அமைந்தது. இயேசு தன்னுடைய இறையாட்சி பணியில் எத்தனையோ சவால்களை சந்தித்தார். ஆதிக்க வர்க்கங்களும் அதிகார வர்க்கங்களும் அவரை சூழ்ச்சியில் தள்ளின. ஏராளமான இடையூறுகளும் மனக் கசப்புகளும் அவருக்கு இருந்தன. இறுதியிலேயே கொடூரமான சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு கொடுமையை அனுபவித்தார். ஆனால் இவற்றையெல்லாம் தாங்கி பொறுத்துக்கொண்டு தந்தையின் திருவுளப்படி வாழ்ந்தது செபம் செய்ததன் வழியாக மட்டும்தான். எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் சோதனைகள் துன்பங்கள் இடையூறுகள் மனக்கசப்புகள் துயரங்கள் வருகின்ற பொழுது மனம் தளர்ந்து விடாமல்,  துணிச்சலோடு இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு செபம் செய்வோம். நிச்சயமாக நம்முடைய செப வாழ்வு     ஆசீர்வாத வாய்க்காலாக நமக்கு மாறும்.

மூன்றாவதாக தந்தையாம் இறைவனின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு இயேசுவுக்கு செபம்  முக்கிய பங்கு வைத்துள்ளது. ஏராளமான அற்புதங்கள் அதிசயங்கள் இயேசு செய்தார். அதற்கெல்லாம் காரணம் செபம். நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் செபிக்கின்ற பொழுது அற்புதங்களை அதிசயங்களை நம் வாழ்வில் காண முடியும். செபம் மிகப்பெரிய ஆயுதம். ஆனால் பல நேரங்களில் அந்த ஆயுதத்தை நாம் பயன்படுத்துவதில்லை. எனவே நம் வாழ்வில் பல துன்பங்களை அனுபவிக்கிறோம். எனவே செபித்து இறைவனின் அருளையும் ஆற்றலையும் முழுமையாகப் பெற முன்வருவோம். கொரோனா போன்ற தொற்றுநோய்கள் என்னதான் நம்மை தாக்க வந்தாலும்,  நாம் பாதுகாப்பாக இறைவனிடம் வேண்டி செபத்தின் வழியாக அனைத்துத் தீய சக்திகளையும் தொற்று வியாதிகளையும் விரட்டியடிக்க முயற்சி செய்வோம். நிச்சயமாக செப வாழ்வு நமக்கு புது வாழ்வு அளிக்கும். செபிக்க தயாரா?

இறைவேண்டல்:
வல்லமையுள்ள இயேசுவே! உம்மைப்போல எங்களுக்கு செபிக்க நல்ல மனதைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 13 =