Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தவக்காலம் தூய்மையின் காலமா! | குழந்தை இயேசு பாபு | Sunday Reflection
தவக்காலம் - மூன்றாம் ஞாயிறு - I. விப: 20:1-17; II. திபா: 19:7.8.9.10; III. 1 கொரி: 1:22-25; IV. யோ: 2:13-25
தவக்காலம் ஒரு தூய்மையின் காலமாகும். தவக்காலத்தில் கடவுளின் அருளும் இரக்கமும் நமக்கு நிறைவாகக் கிடைக்கின்றது. கடவுளின் அருளையும் இரக்கத்தையும் முழுமையாக நாம் பெற்றுக் கொள்வதற்கு தூய்மை நிறைந்த வாழ்வு மிகவும் அவசியமான ஒன்றாகும். தூய்மை என்பது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல; மாறாக, உள்ளம் சார்ந்ததும் கூட. தூய வாழ்வு வாழுகின்ற பொழுது நாம் கடவுளோடு நெருங்கி வாழுகின்றோம். தூய்மையற்ற வாழ்வு வாழ்கின்ற பொழுது கடவுளை விட்டு விலகி வாழ்கின்றோம். கடவுளோடு இணைந்து வாழும் பொழுது நாம் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் நிறைவாக பெறுகின்றோம். கடவுளை விட்டுப்பிரிந்து வாழ்கின்ற பொழுது நாம் கடவுளின் இரக்கத்தையும் அருளையும் இழந்து விடுகிறோம். கடவுளின் இரக்கத்தையும் அருளையும் பெறுவது நாம் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கின்றது.
மனிதர்கள் இயல்பிலேயே பலவீனமானவர்கள். பாவம் செய்யக்கூடாது என்று என்னதான் முடிவு எடுத்தாலும் பலவீனத்தின் காரணமாக பற்பல பாவங்கள் செய்யக்கூடிய சூழல் ஏற்படும். ஆனால் சூழலின் காரணமாக பாவம் செய்தாலும் அவற்றிலே விழுந்து கிடக்காமல், எழுந்து கடவுளிடம் திரும்பி வருவதுதான் உண்மையான நிறைவைக் கொடுக்கும்.
தவக்காலத்தில் சிறப்பான விதத்தில் நாம் கடவுளுக்கு உகந்த வாழ்வை வாழ அழைக்கப்பட்டுள்ளோம். அறச்செயல்களான இறைவேண்டல், நோன்பு, மற்றும் தானம் போன்றவற்றின் வழியாக நம்மையே தூய்மைப்படுத்திக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்.
புனித ஜான் மரிய வியான்னி என்ற புனிதர் தூய்மையான நிறைந்த வாழ்வுக்குச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கின்றார். ஆர்ஸ் என்ற நகரத்தில் பங்குப்பணியாளராகச் சென்ற பொழுது, அந்த நகர மக்கள் பாவத்திலும் இவ்வுலக மாய கவர்ச்சிகளிலும் சிக்குண்டு கடவுளின் அருளையும் இரக்கத்தையும் உணராதவர்களாக இருந்தனர். இப்புனிதர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இறைப்பணியைச் சிறப்பாகச் செய்தார். ஒப்புரவு அருள்சாதனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இறைவேண்டல் வழியாகத் தன்னை முழுமையாகத் தூய்மைப்படுத்தி பிறரும் தூய்மை பெற வழிகாட்டினார்.
ஒரு கட்டத்தில் இந்த ஆர்ஸ் நகரம் தூய்மையின் நகரமாக மாறியது. நிறைவான விண்ணக வாழ்வை பெற்றுக்கொள்ள பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் ஆர்ஸ் நகரத்திற்கு வந்தனர். அந்த இடத்திற்கு வந்த புனித ஜான் மரிய வியான்னியின் வழியாக விண்ணகத்தில் புனிதர் கூட்டத்தோடு இணைய மக்கள் தெளிவையும் தகுதியையும் பெற்றுக்கொண்டனர். இதற்கு மனமாற்றமும் ஒப்புரவும் அடிப்படையாக இருந்தது. புனித ஜான் மரிய வியான்னியைப் போல ஒவ்வொரு குருவும் தூய்மையோடு வாழ அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கு மிகச்சிறந்த ஒரு ஆயுதமாக ஒப்புரவு என்ற அருள்சாதனத்தைப் பயன்படுத்த அழைக்கப்பட்டுள்ளனர். இறைமக்களும் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் நிறைவாகப் பெற்றுக் கொள்ள ஆர்ஸ் நகர மக்களைப் போல் மனமாற்றம் பெற்று ஒப்புரவு அருள்சாதனத்தின் வழியாக தங்களையே தூய்மைப்படுத்திக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த தவக்காலம் தூய்மை வாழ்வை வாழ கடவுளின் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளும் காலம். இன்றைய வாசகங்கள் தூய்மையான வாழ்வைப் பெற்று கடவுளின் பிள்ளைகளாக வாழ அழைப்பு விடுக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோசேயின் வழியாக கட்டளைகளை வழங்குகிறார். திருஅவை கடவுள் தந்த பத்து கட்டளைகளையே மிகவும் ஆழமாக வலியுறுத்துகிறது. கடவுள் தந்த இப்பத்து கட்டளைகள் கடவுளையும் பிறரையும் தூய்மையான உள்ளத்தோடு அன்பு செய்ய அழைப்பு விடுக்கின்றன. கடவுள் இயல்போடு வாழத் தூய்மையான மனம் வேண்டும். கடவுள் இஸ்ராயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த பொழுதும், கடவுளைப் பல நேரங்களில் மறந்து கடவுளுக்கு எதிராக பல பாவங்களைச் செய்தனர். கடவுளையும் அவர்களை வழிநடத்திய மோசேயையும் சினமூட்டினர். இருந்தபோதிலும் கடவுள் அவர்களை அன்பு செய்தார். எனவேதான் கடவுள் மோசேயின் வழியாக பத்து கட்டளைகளை வழங்கி தூய உள்ளத்தோடு வாழ வழிகாட்டினார்.
இன்றைய நாள் பதிலுரைப் பாடல் ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது ; அது தேனினும் இனிமையானது என்ற கருத்தினை சுட்டிக்காட்டுகிறது. ஆண்டவரின் வார்த்தையை தூய்மையான உள்ளத்தோடு உள்வாங்கி, அவற்றை வாழ்வாக்கும் பொழுது நிறைவான வாழ்வை பெற்றுக் கொள்ளமுடியும். இந்த நிறைவான வாழ்வு தான் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் நமக்கு கொடுக்கும்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார் என்று நாம் வாசிக்கிறோம். யூதர்கள் அடையாளத்தை அதிகமாகக் கேட்டுப் பெரும்பாலும் இறை அனுபவத்தை பெறத் தவறினர். கிரேக்கர்கள் ஞானம் தான் இந்த உலகத்திலே சிறந்தது எனக் கருதினர். ஆனால் உண்மையான ஞானம் கிறிஸ்து இயேசுவிடம் தான் இருக்கின்றது என்பதை அவர்கள் தேட மறந்தனர். கிறிஸ்துவே நம்முடைய ஞானம் என்பதை ஏற்றுக்கொண்டு, அந்த ஞானத்தை முழுமையாக பெற்றுக்கொள்ள நம்மையே தூய உள்ளத்தோடு ஆயத்தப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம். தூய்மை நிறைந்த வாழ்வு தான் இறையச்சத்தை கொடுக்கும். இறையச்சம் தான் நமக்கு ஞானத்தை கொடுக்கும். எனவே இந்தத் தவக்காலத்தில் இறை ஞானத்தை சாலமோன் அரசரைப் போல பெற்றுக்கொள்ள தூய உள்ளத்தோடு வாழ முயற்சி செய்வோம்.
இன்றைய நற்செய்தி வாசகமானது இயேசு எருசலேம் ஆலயத்தை தூய்மைப்படுத்திய நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசு ஒரு யூதர் என்ற முறையில் பாஸ்கா விழாவினை கொண்டாட எருசலேம் வந்தார். ஆனால் எருசலேம் கோவில் ஆன்மீகத் தளமாக இல்லாமல் ; வியாபாரத் தளமாக இருந்தது .சட்டத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் சாதாரண பாமர மக்களை ஒடுக்கிய யூதக் குருக்கள் தங்களுடைய சுயலாபத்திற்காகக் கோவிலை வியாபாரச் சந்தையாக மாற்ற அனுமதித்தனர். கடவுளுக்கு மக்கள் பலி செலுத்த வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியதே, வியாபாரம் செய்ய வேண்டும் என்ற மனநிலையில்தான். இயேசு எருசலேம் கோவிலை நோக்கி வந்த பொழுது ஆடு, மாடு, புறா விற்பவர்களும் , நாணயம் மற்றவர்களும் கோவிலில் இருந்தனர். கடவுளை உண்மையாக வழிபட வந்தவர்களுக்கு இத்தகைய வியாபாரம் தடையாக இருந்தது. அன்பை அதிகம் போதித்த ஆண்டவர் இயேசு, இன்று அறச்சினத்தின் வழியாக தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அங்கு பலிக்கான மிருகங்களை விற்பவர்களையும், நாணயம் மாற்றுபவர்களையும் சாட்டையால் அடித்து வெளியேற்றினார்.
இயேசு கோவிலில் கோபப்பட்டது அவரின் இறைவாக்கினர் பணியினைச் சுட்டிக்காட்டுகிறது. இறைவாக்கினர்களைப் போல இங்கு செயல்பட்டு ஆன்மீக வாழ்வில் இருக்கும் இருளை தூய்மைப்படுத்தினார் இயேசு. உண்மையான ஆலயம் என்பது நம் உள்ளம் தான். அதில் கடவுளைக் கண்டால் மட்டுமே, நாம் செல்லும் ஆலயத்திலும் கடவுளைக் காண முடியும். "யூதர்கள் அவரைப் பார்த்து, 'இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார். இயேசு கூறிய கோவில் தனது உள்ளமே. நம் உள்ளம் தூய ஆவியாரின் உறைவிடம். அந்தத் தூய ஆவியின் உறைவிடத்தைத் தீய ஆவியின் உறைவிடமாக மாற்றுவது நம் பாவம். தூய ஆவி நம்மில் செயல்பட, நாம் தூய வாழ்வை வாழ வேண்டும். நம் உள்ளத்தை அசுத்தம் செய்யாமல், தூய்மைப்படுத்த வேண்டும்.
இந்த தவக்காலம் தூய வாழ்வை பெற்றுக்கொள்ள வழிகாட்டும் சிறப்பான காலம். தூய்மையாக இருப்பவர்கள் கடவுளுக்கு நெருக்கமாய் இருக்கின்றனர்.நாம் கடவுளுக்கு நெருக்கமாய் இருக்கும்பொழுது, கடவுளின் அருளையும் இரக்கத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். தூய வாழ்வு மட்டுமே நம்மைப் புனிதர்கள் கூட்டத்தோடு இணைத்து கடவுளை முகமுகமாய் தரிசிக்க வழிகாட்டும். தூய வாழ்வு மட்டும்தான் நமக்கு நிறைவான மகிழ்ச்சியை கொடுக்கும். எனவே இந்த தவக்காலத்தில் வெளிப்புற அடையாளங்களை மட்டும் தூய்மைப்படுத்தாமல், கடவுளுக்குப் பயந்து ஊதாரி மைந்தனுக்கு இருந்த மனமாற்ற மனநிலையில் கடவுளிடம் முழுவதுமாக மன்னிப்பு கேட்கமுயற்சி செய்வோம். ஒப்புரவு அருட்சாதனம் திருஅவையால் நமக்கு கொடுக்கப்பட்ட உன்னதமான கொடை. இந்த உன்னதமான கொடையை முழுவதுமாக பயன்படுத்தித் தூய வாழ்வு வாழ முயற்சி செய்வோம். அதன் வழியாகக் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் நிறைவாகப் பெறுவோம். தூய உள்ளத்தோடு கடவுளை சந்திக்க தயாரா?
இறைவேண்டல்
தூய வாழ்வு வாழ வழிகாட்டும் இறைவா! நாங்கள் எங்களுடைய வாழ்வைத் தூய உள்ளத்தோடு வாழத் தேவையான அருளைத் தாரும். அதற்கு தடையாயுள்ள பாவ வாழ்வை விட்டொழிக்கும் நல் மனதைத் தாரும். சோதனைகளை அறச்செயல்கள் வழியாக வென்று தூய வாழ்வுக்குச் சான்று பகர அருளைத் தாரும். ஆமென்.
Add new comment