நம்பிக்கையால் இறைவனின் நண்பர்களாவோம் | திலகராஜா | Sunday Reflection


அன்பு நண்பர்களே! தவக்காலம் இரண்டாம் ஞாயிறில் இருக்கிறோம். கடந்த வாரம் ஆண்வர் என்றும் நம்மோடு இருக்கிறார் எனும் நம்பிக்கை மொழி தந்தார். இந்த வாரம் இன்றைய இறைவாக்கு வழிபாடு வழியாக நம்மை நமது நம்பிக்கையினால் இயேசுவுக்கு நண்பர்களாக அழைப்பு விடுக்கிறார். இந்த புனிதமான காலத்தை, பயனுள்ள வகையில் பயன்படுத்தி இயேசுவின் நண்பர்களாவோம். 

இவ்வுலகில் வாழும் நாம் நமக்கு நண்பர்களாக இருக்க பல்வேறு நிலைகளை உருவாக்கி வைத்துள்ளோம். பணக்காரன் பணக்காரர்களுடனே நண்பர்களாக இருக்க விரும்புவார். படித்தவர் தனக்கேற்றவாறு இருப்பவருடனே நண்பராக இருக்க விரும்புவார். ஆனால் நம் ஆண்டவர் இயேசு எல்லோருடனும் உறவு பாராட்டினார். எல்லோருடனும் அவர் நட்பு பாராட்ட காரணம், அவர்கள் அவரை நம்பினர். தொழு நோயாளர்,  நீர் விரும்பினால் என்னை நலமாக்க முடியும் என்று கூறியதற்கு காரணம் இயேசுவை நம்பியதே. செப்கூடத் தலைவரின் இறந்த மகளை இயேசு உயிர்ப்பிக்கச் சென்றதற்கு அவரின் நம்பிக்கையே. இவ்வாறு நம்பிக்கை என்பது இயேசுவின் வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இன்று நாமும் இதே நம்பிக்கையினால் இயேசுவோடு நண்பர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். 

நம்பிக்கை என்பது என்ன? இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவைகளுக்கு நாம் கொடுக்கும் பதில்மொழியே நமது நம்பிக்கை. அப்படியென்றால் என்ன எனும் கேள்வியெழலாம். அதைத்தான் இன்றைய முதல் வாசகம் விளக்குகிறது. ஆபிரகாம் கடவுளுக்கு முழுவதும் கீழ்படிந்தார். எனவேதான் விசுவாசத்தின் தந்தையென அழைக்கப்படுகிறார். வயதான ஆபிரகாம், பிள்ளைப்பேறு இல்லாதவர், தன் சொத்துக்களுக்கு வாரிசு இல்லாதவருக்கு இறைவன்தாமே வாக்களித்து ஈசாக்கை பிறக்கச் செய்கிறார். ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு என வைத்திருந்த அவனின் மழலை மொழிகேட்டு; மகிழ்ந்த ஆபிரகாமை இறைவன் அழைத்து, நீ அன்பு கூறும் உன் ஒரே மகனை அழைத்துக் கொண்டு…. எரி பலியாக நீ அவனை எனக்குப் பலியிட வேண்டும் என்கிறார். தள்ளாதா வயதில் தான் பெற்றாலும், அவர் தந்தார், அவர் கேட்கிறார் என்பது போலவும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 12:5-11-ன்படி “இறைவன் யாரை அன்பு செய்கிறாரோ அவர்களையே சோதிக்கிறார், கண்டிக்கிறார்” எனும் படிப்பினைக்கேற்ப தன் மகனையே கடவுளுக்காக பலியாகச் செலுத்த முன்வருகிறார். இறைவனின் திருவுளத்திற்கு நாம் கொடுக்கும் பதிலே நம்பிக்கை என்பதை நமக்கு பாடமாக கொடுத்து நாமும் அவரைப் போல நமது நம்பிக்கையினால் இறைவனுக்கு நண்பர்களாவோம். 

அதுபோல, எலியா கடவுளின் திருவுளத்துக்கு கீழ்படிந்து நடந்த இறைவாக்கினர் ஆவார். எலியா வாழ்க்கையில் இறைவனுக்கும் எலியாவுக்கும் இடையேயான உறவு
நம்பிக்கையிலான உறவு. அரசர்கள் நூல் முதல் புத்தகம் 18ம் அதிகாரத்தில் எலியா பாகாலின் பொய் இறைவாக்கினர்களை வெட்டி வீழ்தியதனால், அரசன் ஆகாபு, ஈசபேல் அரசி அவரை கொலை செய்ய ஆணையிட்டதால் பயந்து ஓடி சீனாய் மலையில் தஞ்சம் புகுகிறார். அங்கு 1அரசர் 19: 4 – “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்: என் உயிரை எடுத்துக் கொள்ளும்: நான் என் மூதாதயரைவிட நல்லவன் அல்ல” என மன்றாடினாலும் இறைவனை மெல்லிய காற்றில் சந்தித்த பின் இறைவனின் அழைப்பிற்கு பின் அவர் கடவுளின் பணியை முன்பை விட இன்னும் துணிந்து செய்யக் காரணம் என்ன? அவரின் நம்பிக்கை சார்ந்த பதில்மொழிகள். நாமும் இந்த எலியா போல நமது வாழ்க்கையின் மூலம் நாம் நம்பிக்கை நிறைந்த செயல்களால் இறைவனுக்கு பதிலளிக்க முடியாதா! 

இயேசுவும் இன்று தன்னுடைய சீடர்களுக்கு அவர் நம்பிக்கை பயிற்சி அளிக்கிறார். அவர் தனக்கெனத் தேர்ந்தெடுத்தது மிகப் பெரிய மேதாவிகள் அல்ல. எளிய பாமர மக்கள்.
எளிய பாமர மக்களின் நம்பிக்கை மிகப் பெரியது எனினும் அதை முறைப்படுத்தும் நோக்குடனும், அவர் அவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்க இருந்த பொறுப்புகளின் அடிப்படையில் அவர்களின் நம்பிக்கையை இன்னும் மிகுதியாக்க அவர்களை மலைக்கு அழைத்துச் சென்று நம்பிக்கையால் இறைவனுடன் நெருக்கமான மோசேஇ எலியாவோடு உரையாடி அவர்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தகிறார். இதன்பொருள், திருச் சட்டத்தின் நிறைவும், இறைவாக்கின் நிறைவும் இயேசுவே. எனவே வரவிருப்பவர் இவரே என்று எடுத்துக்கூறி அவர்களின் நம்பிக்கையை ஆழப்படுத்த இயேசு எடுக்கும் இன்னொரு முயற்சி.

இவர்களின் நம்பிக்கையை ஆழப்படுத்த, இவர்கள் சரியாக இயேசுவைப் புரிந்து கொள்ளவே இயேசு இவர்களை தபோர் மலை அனுபவம், யாயீர் வீடு, கெத்சமணித் தோட்டம்  போன்றவற்றுக்கு தன்னுடன் அழைத்துச் செல்வதைப் விவிலியத்தில் வாசிக்கிறோம். இந்த நிகழ்வுகள் இவர்களின் வாழ்வை மாற்றியது. ஒரு புரிதலில் இருந்து இன்னொரு
புரிதலுக்கு கடந்து செல்ல முடிந்தது. நாமும் நமது நம்பிக்கை தளர்வுகளால் புரிதலில்லாமையால் பல நேரம் கடவுளிடமிருந்து விலகி போகின்றோம். இந்த தவக்காலம்
இரண்டாம் ஞாயிறின் வழி நமக்கு கொடுக்கும் அழைப்பு கடவுளை நம்பவும் அதனால் அவரின் சீடராகவும். 

நாம் செபிக்கிறோம் ஆனால் அவை நம்பிக்கையினால் உந்தப்பட்ட செபங்களா? அல்லது வீண் வார்த்தைகளா? சிந்தித்துப் பார்ப்போம். நமது செயல்பாடுகள் இறைவன்
விரும்பும் வழியிலான செயல்களா? சிந்தித்துப் பார்ப்போம். நமது நம்பிக்கை தளர்வுகளாலே நாம் பல நேரங்களில் இறைவனிடமிருந்து விலகி விடுகிறோம். அவரை நம்புவோம். அந்த
நம்பிக்கையை அவர் விரும்புவதுபோல செயலில் காட்டுவோம். இறைவன் விரும்பும் வழி நமது நம்பிக்கையினால் அவரின் நண்பர்களாக வாழ முயற்சிப்போம். இறையாசிர் நம்மோடு…

Add new comment

5 + 0 =