தவக்காலம் தியாகத்தின் காலமா! | குழந்தை இயேசு பாபு | Sunday Reflection


தவக்காலம் - இரண்டாம் ஞாயிறு - I. தொநூ: 22:1-2,9-13,15-18; II. தி.பா: 116:10,15.16-17.18-19; III. உரோ: 8:31-34; IV. மாற்: 9:2-10

ஏழை மாணவர் ஒரு ஊரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது படிக்க பொருளாதார வசதி இல்லாமல் இருந்தார். அதைக் கண்ட ஒரு அருள்பணியாளர் அந்த மாணவரை தொடர்ந்து படிக்க வைக்க ஒரு வெளிநாட்டு உபகாரியை அறிமுகம் செய்து வைத்தார். நல்ல உள்ளம் படைத்த அந்த வெளிநாட்டு உபகாரியின் உதவியோடு அனைத்து படிப்பை முடித்துவிட்டு பெரிய வேலையில் அமர்ந்தார். நல்ல வருமானம் ஈட்டி பொருளாதாரத்தில் முன்னேறினார். அவர் பொருளாதாரத்தில் முன்னேற முன்னேற பிறரைப் பற்றி அக்கறை கொள்ளாமல், சுயநலத்தோடு வாழத் தொடங்கினார். அதேபோல வெளிநாட்டிலிருந்து வந்த அந்த உபகாரியின்   உதவியையும் தன்னுடைய ஆடம்பரத்திற்காகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். படிக்க வசதி இல்லாமல் இருக்கக்கூடிய ஏழை மாணவர்களை உற்சாகப்படுத்தி உதவி செய்யவேண்டும் என்ற மனநிலை இல்லாமல் இருந்தார்.  

ஒருமுறை அவர் வெளிநாட்டிற்கு தன்னு டைய உபகாரியை சந்திக்கச் சென்றார்.  இவருக்கு உபகாரியின் பொருளாதாரத்தைப் பார்க்கவேண்டும் என்பது ஒருவிதமான ஆசையாகும். அந்த ஆசையோடு வெளிநாட்டில் அந்த உபகாரியின்  முகவரியைத் தேடி  சென்றார். ஒரு நபரிடம் உபகாரியின் முகவரியை காட்டி வழி கேட்டபொழுது, ஒரு சாதாரண குடிசை வீட்டை காட்டினார். அந்த வீட்டிலே நுழைந்து பார்த்தபொழுது, இவரின் புகைப்படம் இருந்தது. அந்த புகைப்படத்தின் கீழ் "என்னுடைய உழைப்பு முழுவதும் என் அன்பு மகனுக்கு. நான் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டும் உணவு உண்டு பணத்தை சேமிப்பேன். கடின உழைப்பில் பெற்ற பணத்தை சேமிப்பேன்" என்று எழுதப்பட்டிருந்தது. இதை கண்டவுடன் அந்த நபர் ஒரு ஏழைத்தாயின் உதவியையும் உழைப்பையும் சுயநலத்தோடு பயன்படுத்தியதற்காக கண்ணீர் விட்டு அழுது உபகாரியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு உதவி செய்வதற்கு பணம் தேவையில்லை; மாறாக, தியாகம் நிறைந்த மனமேபோதும் என்பதைப் புரிந்து கொண்டார். பின்பு தன்னுடைய நாட்டிற்கு வந்து ஒவ்வொரு ஆண்டும் இரண்டு ஏழை மாணவர்களைத் தேர்தெடுத்து படிக்க வழிகாட்டினார். அந்த மாணவர்களும் உண்மையான உழைப்பையும் தியாகத்தையும் சுட்டிக்காட்டி பிறர் நலத்தோடுபிறரை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்துனார். தியாகம் நிறைந்த மனநிலைதான் கல்லான இதயத்தை கூட கனிவான இதயமாக மாற்றும். தவக்காலம் தன்னலமற்ற தியாகம் நிறைந்த வாழ்வை வாழத்தான் சிறப்பான விதத்தில் அழைப்பு விடுக்கின்றது. ஏனெனில் தவக்காலம் ஒரு தியாகத்தின் காலம்.

தவக்காலத்தில் அறச்செயல்களில் வழியாக இறை அனுபவத்தை பெற அழைக்கப்படுகிறோம். இறைவேண்டல், நோன்பிருத்தல் மற்றும் தானம் செய்தல் போன்றவற்றின் வழியாக இறை அனுபவத்தை முழுமையாகப் பெற முடியும். இந்த இறை அனுபவம்த நம்மைத் தியாகம் நிறைந்த வாழத் தூண்டுகின்றது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆபிரகாம். இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமிடம் கடவுள் அவருடைய ஒரே மகன் ஈசாக்கை பலியாகக் கேட்டார். ஒரு தந்தையாக அவர் மிகுந்த துன்பம் அடைந்தாலும், கடவுளின் சிறந்த நம்பிக்கையாளராக கடவுளின் வார்த்தைக்குக் கீழ்படித்தார். அவர் மனதில் எண்ணற்ற கேள்விகள் இருந்திருக்கலாம். ஆனால் எதையும் அவர் கடவுளிடம்  கேட்காமல், கடவுள் கொடுத்தார் கடவுள் வழிநடத்துவார் என்று உறுதியாக நம்பினார். கடவுளை நம்பும் பொழுது எண்ணற்ற துன்பங்கள் நம் வாழ்வில் வரும். அவற்றை கடந்து கடவுளை உறுதியாக நம்பும் பொழுது நம் வாழ்வின் முழுமையை அடைய முடியும். இத்தகைய தியாகம் நிறைந்த நிலையை அடைவதற்கு இறை அனுபவத்தை நாம் பெற வேண்டும். இறை அனுபவம் மட்டுமே தியாகம் நிறைந்த வாழ்வுக்கு வழிகாட்டும்.

பழைய ஏற்பாட்டில் பல நபர்கள் தியாகம் நிறைந்த வாழ்வுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்து வழிநடத்திய தியாகம் நிறைந்த தலைவர் மோசே. இவர் அந்த மக்களை வழி நடத்துகின்ற பொழுது, எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். ஆனால் தியாகம் நிறைந்த உள்ளத்தோடு கடவுளுக்கும் மக்களுக்கும் மிகச்சிறந்த பணியினை செய்தார். இதற்கு  அவர் பெற்ற இறை அனுபவமே அடிப்படையாக இருந்தது. எல்லா இறைவாக்கினர்களும் தியாகம் நிறைந்த வாழ்வுக்கு முன்னோடிகளாக இருக்கின்றனர். கடவுள் அழைத்த பொழுது தொடக்கத்தில் சற்று தயக்கம் காட்டினாலும், இறை அனுபவத்தை முழுமையாகப் பெற்றபிறகு, தியாக உள்ளத்தோடு மிகச் சிறப்பான இறைவாக்கு பணிகளைச் செய்து மக்களை இறைவன் பக்கம் திருப்பினார்கள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசுவோடு நாம் உடனிருக்க வேண்டும். ஏனெனில் "கடவுள் நமக்காக" என்ற சிந்தனையை வலியுறுத்தியுள்ளார். நம்மைப் படைத்து நம்மை முழுவதும் அன்பு செய்யும் கடவுளை, நாம் முழுமையாக அன்பு செய்து   இறை அனுபவத்தை பெற அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவோடு நாம் இருக்கும் பொழுது இவ்வுலகம் சார்ந்த சாத்தானையும் சோதனைகளையும் வேதனைகளையும் வெற்றி கொள்ள முடியும். கிறிஸ்துவோடு உடனிருந்து அவரை முழுமையாக நம்பும்  பொழுது, தீய சக்தியோ, பயமோ, துன்பமோ, தொல்லையோ நம்மை அணுகாது என்ற வாக்குறுதியை புனித பவுல் தன்னுடைய திருமுகத்தின் வழியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். தியாகம் நிறைந்த மனநிலையில் வாழும் பொழுது, வருகின்ற அனைத்து சோதனைகளையும் இடையூறுகளையும் எதிர்கொள்ள இறையனுபவம் மட்டுமே வழிகாட்ட முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகமானது  இறை அனுபவத்தின் உச்சத்தை சுட்டிக்காட்டுகிறது. இயேசு ஒரு உயரமான மலையில் உருமாற்றம் அடைந்த நிகழ்வை வாசிக்கிறோம். இயேசுவின் உருமாற்றம் தாபோர் மலையில் நிகழ்ந்தது என்பது என்ற கருத்து பாராம்பரிய வழக்கத்தில் இருக்கின்றது . இயேசுவின் உருமாற்றத்தின் போது  அவருடைய ஆடை வெண்மையாக ஒளி வீசியது. அப்போது மேகம் வந்து அவர் மேல் நிழலிட அந்த மேகத்திலிருந்து கடவுளின் குரல் "இவரே என் அன்பார்ந்த மகன்" என்று ஒலித்தது. இயேசுவின் இந்த இறை அனுபவம் சிலுவையின் வழியாக விண்ணக மகிமையைக் கொடுக்க ஆயத்தப்படுத்தும் அனுபவம். இந்த நிகழ்வைகக் கண்ட பேதுரு அந்த இடத்தில் தங்கி இறை அனுபவத்தோடு மட்டும் இருக்கலாம் என்று இயேசுவிடம் வெளிப்படுத்தினார். ஆனால் இயேசு சிலுவையின் வழியாகத்தான் இறை அனுபவத்தை பெற்று விண்ணகத்தின் முன் சுவையை அனுபவிக்க முடியும் என்று தன் சீடர்களுக்கு விளக்கினார். இந்த இறை அனுபவம் தான் இயேசவுக்கு தியாகம் நிறைந்த வாழ்வு வாழ வழிகாட்டியது.

இயேசுவின் வாழ்வை இரண்டு வகையான அனுபவங்களாக வகைப்படுத்தலாம். முதலாவதாக மலை அனுபவம் (இறை அனுபவம்), இரண்டாவதாக   மக்கள் அனுபவம் (இறையாட்சிப் பணி). இந்த இரண்டு அனுபவங்கள் தான் இயேசு தியாகம் நிறைந்த மனநிலையோடு பற்பல போதனைகளையும் வல்ல செயல்களையும் செய்ய அடிப்படையாக இருந்தன. ஏழைகள், பாவிகள், ஒடுக்கப்பட்டோர், நோயாளர்கள், சமூகத்தில் புறந்தள்ளப்பட்டோர்போன்றோர் வாழ்வு பெற மனித நேயத்தோடு இயேசு இறையாட்சி பணி செய்தார். இது இயேசுவின் தியாக மனநிலை வெளிப்படுத்துகிறது. தன் வாழ்வையே முழுமையாக  நம்முடைய வாழ்வு மீட்புப் பெற  தியாகம் செய்தார் இயேசு. யூத சமூகத்தில் கொடூரமான அடையாளமாகக் கருதப்பட்ட சிலுவைச் சாவை ஏற்று, இரத்தம் சிந்தி தியாகத்தோடு தன் உயிரைத் துறந்தார். 

நம்முடைய அன்றாட வாழ்வில் தியாகம் நிறைந்த மனநிலையோடு வாழும் பொழுது பல்வேறு துன்பங்களும் இடையூறுகளும் வரும். ஆனால் நம்முடைய அறச்செயல்கள் வழியாக இறை அனுபவத்தைப் பெற்று, வாழ்வில் பயணிக்கின்ற பொழுது வெற்றியை அடைய முடியும். துன்பத்தின் வழியாகத்தான் இன்பத்தை அடைய முடியும். தோல்வியின் வழியாகத்தான் வெற்றியை அடைய முடியும். சோதனைகளின் வழியாகத்தான் சாதனைகளை பெற முடியும். தியாகம் நிறைந்த வாழ்வின் வழியாகத்தான், மறுகிறிஸ்துவாக மாறமுடியும். எனவே இந்த தவக்காலத்தில் இறை அனுபவத்தை பெற்று, தியாக உள்ளத்தோடு பிறரின் வாழ்வை முன்னேற்ற பாதையில் வழிநடத்த முயலுவோம். அப்பொழுது தவக்காலம் நமக்கு ஒரு அருளின் காலமாகவும் மீட்பின் காலமாகவும் மகிழ்ச்சியின் காலமாகவும் நிறைவின் காலமாகவும் மாறும். தியாகம் நிறைந்த மனநிலையோடு பயணிக்கத் தேவையான இறை அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள நம்மையே கடவுளிடம் அர்ப்பணிப்போம்.

இறைவேண்டல் 
தியாகத்தின் திருவுருவே எம்  இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் தியாகம் நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்து எந்நாளும் உம்முடைய இறையாட்சி மதிப்பீட்டிற்க்குச் சான்று பகர தேவையான அருளைத் தாரும்.  நாங்கள் வாழ்வில் முன்னேற எங்கள் பெற்றோர்கள் தொடங்கி எண்ணற்றவர்கள் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களை நிறைவாக ஆசீர்வதித்தருளும். நாங்கள் தொடர்ந்து தியாகம் நிறைந்த வாழ்வின் வழியாக கிறிஸ்தவ மதிப்பீட்டிற்குச் சான்று பகர தேவையான அருளையும் ஞானத்தையும் தாரும். ஆமென்.

Add new comment

11 + 5 =