Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தவக்காலம் ஓர் அருளின் காலமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் - திருநீற்று புதன் - I. யோவே: 2:12-18; II. தி.பா: 51:1-2.3-4.10-11.12,15; III. 2 கொரி: 5:20-6:2; IV. மத்: 6:1-6,16-18
பங்கில் ஒரு அருட்பணியாளர் மறைக்கல்வி மாணவ மாணவியர்களுக்கு தியானம் கொடுக்க சென்றிருந்தார். அப்போது அந்த அருட்பணியாளர் "தவக்காலம் என்றால் என்ன?" என்ற கேள்வியை கேட்டார். அதற்கு அந்த மாணவ மாணவியரில் ஒருவர் "கோவில் கோவிலாக சுற்றுலா செல்வது" என்று பதிலளித்தார். மற்றொருவர் "தவக்காலம் என்பது திருமணம் வைக்க முடியாத காலம்"என்று கூறினார். இக்கேள்விகளுக்கான பதிலை கேட்ட அருள்பணியாளர் சற்று அதிர்ந்து போனார். இறுதியாகத் அருட்பணியாளர் "நோன்பு என்றால் என்ன?" என்ற கேள்வியை கேட்டார். அதற்கு ஒருவர் "இஸ்லாமியர்களைப் போல நாமும் உணவு உண்ணாமல் இருப்பது" என்று பதில் கூறினார். இவற்றைக் கேட்ட அருட்பணியாளர் இறுதியாக "தவக்காலம் என்பது உண்மையான கடவுளின் அருளை அடைய உகந்த காலம். இயேசுவோடு இணைந்து பயணிக்கும் சிறப்பு காலம்" என கேள்விக்கு பதில் கொடுத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தைத் தொடங்கி ஆண்டவர் இயேசு உயிர்ப்பு பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். அந்த விழாவானது நம்மில் மாற்றத்தை தரவேண்டும். உண்மையாக தவக்காலம் என்றால் என்ன? இந்த புரிதலை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். தவக்காலம் சுட்டிக்காட்டும் மதிப்பீடுகளை நாம் அறிந்து கற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்.
தவக்காலம் அருளின் காலம். அப்படியென்றால் மற்ற காலங்களில் கடவுளின் அருள் கிடைக்காதா என்ற கேள்வி எழலாம்.அப்படியல்ல. தவக்காலம் கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்ள முக்கியமாக காலமாக இருக்கின்றது. கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்வதற்கு இந்தத் தவக்காலத்தில் மூன்று முக்கியமான செயல்களை செய்து நம் நம்மையே ஆயத்தப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.
முதலாவதாக தவக்காலத்தில் முக்கியமான பண்பு நோன்பிருத்தல். நோன்பிருத்தல் என்பது எல்லா மதங்களிலும் இருக்கக் கூடிய புனிதச் செயல்பாடு. நோன்பிருத்தல் நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. மேலும் நோன்பு என்பது இறைவேண்டலின் மற்றொரு பரிமாணம். நோன்பு இருத்தலின் வழியாக நாம் நம்மை ஆய்வு செய்ய முடிகிறது. நம்முடைய வாழ்வு எப்படி இருக்கின்றது என்பது பற்றிய தெளிவைப் பெற முடிகின்றது. நம்மையே நாம் முழுமையாக அன்பு செய்து ஏற்றுக்கொள்ள நோன்பிருத்தல் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. நோன்பிருத்தல் நம்மை தூய வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறது. இத்தகைய தூய்மை நிறைந்த வாழ்வுதான் நமக்கு பாவத்தையும் தீய சக்திகளையும் வெல்ல உதவிசெய்கிறது. எந்த மதத்திலும் நோன்பிருத்தலுக்கு மாதிரிகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் நம் முன்மாதிரி இயேசு தானே நோன்பிருந்து நோன்பின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் நோன்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இயேசு இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். நோன்பு இருக்கும் பொழுது மக்கள் பார்க்க வேண்டும் என்று தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொண்டு இருப்பது தவறு என்று கூறியுள்ளார். நோன்பு இருக்கும் பொழுது நம் தலையில் எண்ணெயைத் தேய்த்து முகத்தை அழகாக வைத்துக் கொள்ள இயேசு பணித்துள்ளார். இது எதை சுட்டி காட்டுகிறது என்றால் நாம் நோன்பு இருப்பது வெறும் சடங்கு அல்ல; மாறாக, இது நம்மோடும் இறைவனோடும் கொண்டிருக்கக் கூடிய நல்லுறவு.
எனவே இந்த தவக்காலத்தில் நாம் முடிந்தவரை நோன்பிருந்து இறை ஒன்றிப்பில் சிறந்து விளங்க அழைக்கப்பட்டுள்ளோம். நாம் உண்ணாமல் நோன்பிருந்து சேமித்த பணத்தை நம்மோடு வாழக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கின்ற பொழுது, இந்த தவக்காலம் பொருள் நிறைந்ததாக மாறும். உணவை மட்டுமல்லாது நம்முடைய ஆடம்பரங்கள், தேவையற்ற உணர்வுகள், வெறுப்புக்கள் போன்றவற்றைக் களைவதும் சுய கட்டுப்பாட்டோடு வாழ்வதும் சிறப்பான நோன்புதான். எனவே நாம் இறைவனோடு ஒன்றித்து அவரின் அருளைப் பெறத் தவக்காலத்தின் நற்செயல்களில் ஒன்றான நோன்பிருத்தல் பண்பினை நாம் வாழ்வாக்க முயற்சி செய்வோம்.
இரண்டாவதாக இறைவேண்டல் கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தத் தவக்காலத்தில் மிகவும் உதவியாக இருக்கின்றது. இறைவேண்டல் நமக்கும் கடவுளுக்கும் உள்ள நல்லுறவை வலுப்படுத்துவம் பாலமாக இருக்கின்றது. இறைவேண்டல் கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் உதவியாக இருக்கின்றது. இறைவேண்டலைப் பற்றியத் தெளிவைப் பெற இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு வழிகாட்டுகிறார். இறைவேண்டல் என்பது வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவதல்ல; மாறாக, இறைவனின் உடனிருப்பை ஆழமாக உணர்வது. இறைவேண்டல் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்ற ஆழமான கருத்தினை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு எடுத்துரைத்துள்ளார். "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும், வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (மத்: 6:5) என்கின்ற வசனம் வழியாக மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இறைவேண்டல் செய்யக்கூடாது என்ற இயேசுவின் எதிர்பார்ப்பை அறியமுடிகின்றது. இன்றைய நாளில் நம்முடைய இறைவேண்டல் வாழ்வை சற்று ஆய்வு செய்து பார்ப்போம். நாம் உண்மையிலேயே கடவுளோடு உறவு கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவேண்டல் செய்திருக்கிறோமா? அல்லது தன்னை ஒரு புனிதராக மற்றவர்கள் பார்க்க வேண்டுமென்று இறை வேண்டல் செய்திருக்கிறோமா? இந்த தவக்காலம் முழுவதும் இறைவேண்டல் செய்ய சிறப்பான விதத்தில் அழைக்கப்பட்டுள்ளோம். அந்த இறைவேண்டல் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செய்தோமென்றால் விண்ணகத் தந்தையின் அருளைப் பெற முடியாது.
மேலும் நாம் இறைவேண்டல் செய்யும் போது உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்து இறை வேண்டல் செய்யவும் பிற இனத்தாரை போல பிதற்றி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே இறைவேண்டல் செய்யாமல் இருக்கவும் இயேசு நமக்கு கற்பித்துள்ளனர். உண்மையான இறைவேண்டல் என்பது மற்றவரின் குற்றங்களை மன்னிப்பதாகும்.இதைத்தான் இயேசு "மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்" (மத்: 6: 4-15) என்று கூறியுள்ளார். பிறரின் குற்றங்களை மன்னிப்பதே இறைவேண்டல்தான். எனவே இந்த தவக்காலத்தில் நமக்கு எதிராக தீங்கு செய்தவர்களை வெறுக்காமல், அவர்களை மன்னித்து அன்பு செய்ய முயற்சி செய்வோம். திருஅவை வரலாற்றில் எண்ணற்ற புனிதர்களை நாம் அறிந்திருக்கின்றோம். அவர்கள் இறைவனோடு ஒன்றித்து நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர்ந்ததற்கு இறைவேண்டல் தான் அடிப்படையாக இருந்தது. இறைவேண்டல் நமக்கு ஆற்றலையும் கடவுளின் திருவுளத்தையும் ஞானத்தையும் தருகின்றது.
இயேசு தன்னுடைய மூன்றாண்டு இறையாட்சி பணியில் தன்னுடைய பணியை செய்வதற்கு முன்பாக 40 நாட்கள் அலகையால் சோதிக்கப்பட்டு, மனம் தளராமல் இறைவேண்டலில் ஈடுபட்டார். இறுதியில் அனைத்து சோதனைகளையும்வென்று சிறப்பான இறையாட்சிப் பணியினை செய்தார். அதேபோல பணி செய்கின்ற பொழுது இயேசு அதிகாலையில் இறைவேண்டல் செய்ததாக விவிலியத்தில் அறிய வருகிறோம். எனவே நாமும் இறைவேண்டலில் நிலைத்திருக்கும் பொழுது கடவுளின் திருவுளத்தை அறிந்து அதற்கேற்றார்போல் நம்முடைய வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும். அதேபோல இயேசு தன்னை கல்வாரியில் கையளிப்பதற்கு முன்பாக கெச்தமனி தோட்டத்தில் இறைவேண்டல் செய்தார். ஒரு மனிதராக கொடூரமான துன்பத்தை ஏற்கத் தயங்கினாலும் இறைமகனாகத் தன் தந்தையின் திருவுளப்படி அனைத்தும் நிகழட்டும் என முழுவதுமாக ஒப்படைத்தார். இறைவேண்டல் மட்டுமே இயேசுவுக்கு ஆற்றலையும் துணிவையும் தந்தது. இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் தொங்கிய பொழுது தன் கனிவான இதயத்தால் கல்லான இதயத்தை கொண்ட படை வீரர்களுக்காக இறைவேண்டல் செய்தார். இத்தகைய மனநிலையைத் தான் இந்த தவக்காலத்தில் பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். எனவே இந்த 40 நாட்களும் முடிந்தவரை இறைவேண்டலின் வழியாக இறைவனோடு நல்லுறவு கொண்டு அவரின் அருளை நிறைவாகப் பெற முயற்சி செய்வோம். அதை வாழ்நாள் முழுவதும் தொடர முயற்சி செய்வோம்.
மூன்றாவதாக பிறரன்பு பணி செய்தல். பிறரன்பு பணி செய்தல் என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஆன்மீகமாக இருக்கின்றது. நாம் இறைவனோடு கொள்ளுகின்ற நல்லுறவு பிறரன்பில் தான் நிறைவடைகிறது. நாம் ஒவ்வொருவருமே மனித சேவையில் புனிதம் காண அழைக்கப்பட்டுள்ளோம். இந்த உலகத்தில் எத்தனையோ நபர்கள் உண்ண உணவில்லாமலும் இருக்க இடமில்லாமலும் உடுத்த உடையில்லாமலும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்டுபுது வாழ்வைப் பெற்றுக் கொள்ள வழிகாட்டுவதுதான் உண்மையான இயேசுவின் மனநிலை. இத்தகைய மனநிலையைத் தான் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இந்தத் தவக்காலத்தில் வளர்த்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். ஆண்டவர் இயேசு கொடூரமான சிலுவைச் சாவை ஏற்று தன்னுடைய இரத்தத்தை சிந்தி மீட்பளித்தது, பிறரன்பின் உச்சத்தைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. எனவே இயேசுவின் சகோதர சகோதரிகளாகிய நாம் பிறர் நலத்தோடு வாழ முயற்சி செய்வோம். நம்மாலான உதவிகளைப் பிறருக்குச் செய்ய முயற்சி செய்வோம்.உதவி என்பது பொருளாதாரத்தை மட்டும் மையப்படுத்தியது அல்ல; மாறாக, நம்முடைய உடனிருப்பு, ஆறுதலான வார்த்தை, ஊக்கமூட்டும் மனநிலை, பிறரைப் பற்றிய நேர்மறை எண்ணம், பிறருக்கு வழிகாட்டும் மனநிலை போன்ற அனைத்துமே பிறரன்பு வாழ்வுக்கு சான்று பகர்கின்றது. இந்த தவக்காலம் முழுவதும் நம்முடைய தவ முயற்சியின் வழியாகச் சேமித்தப் பணத்தை ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக கொடுக்க முன்வருவோம். அதேபோல பிறருக்கு உயிர் கொடுக்கக்கூடிய இரத்தத்தை இரத்ததானத்தின் வழியாக கொடுக்க முயற்சி செய்வோம். ஆளுமை இழந்து தவிக்கின்ற மக்களுக்கு ஆளுமை உணர்வை கொடுப்போம். இவ்வாறான பிறரன்பு பணிகளைச் செய்கின்ற பொழுது இத்தவக்காலம் அருளின் காலமாகவும் மகிழ்ச்சியின் காலமாகவும் இரக்கத்தின் காலமாகவும் அமையும்.
நோன்பிருத்தல், இறைவேண்டல் மற்றும் பிறரன்பு பணிகள் போன்ற இம் மூன்று நற்செயல்பாடுகளும் நம்மைக் கிறிஸ்தவ ஆன்மீக உச்சத்திற்கு அழைத்துச் செல்கின்றன. நாம் புரட்சிகரமான ஆன்மீக வாழ்வை வாழ்ந்திட இவை நமக்கு வழிகாட்டுகின்றன. இந்த நாற்பது நாட்களும் நம்மையே முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைத்து, இறையருளை நிறைவாகப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்வோம். அதற்கு தேவையான இறைபயத்தையும் பிறர் நலம் பேணும் எண்ணங்களையும் தியாகம் செய்யும் மனநிலையையும் இறைவனிடம் கேட்போம். இறையருளை நாமும் பிறரும் பெற்றுக்கொள்ள, நாம் கருவிகளாகப் பயன்பட இந்த தவக்காலம் முழுவதும் நம் பயணத்தைத் தொடர்வோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! இந்த தவக்காலம் முழுவதும் நாங்கள் நோன்பின் வழியாகவும் இறைவேண்டலில் வழியாகவும் பிறரன்புப் பணிகளின் வழியாகவும் உமக்கு சான்று பகர்ந்து, உம்முடைய அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்ளத் தேவையான ஆற்றலையும் ஞானத்தையும் தந்தருளும். ஆமென்.
Add new comment