திறந்த உள்ளத்தை நம் வாழ்வாக்குமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் ஆறாம் திங்கள் - I. தொநூ: 4:1-15,25; II. தி.பா: 50:1,8.16-17.20-21; III. மாற்: 8:11-13

இன்றைய நாள் திருவழிபாட்டு வாசகங்கள் வழியாக நாம் திறந்த உள்ளத்தோடு கடவுள் விரும்பும் வாழ்வை வாழச் சிறப்பான விதத்தில் அழைக்கப்பட்டுள்ளோம். ஒரு ஊரில் அண்ணன் தம்பி இருவர் இருந்தனர். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு வயல் இருந்தது. இரண்டு பேருக்கும் ஒரு முறை விவசாய நேரத்தில் வரப்பு சண்டை ஏற்பட்டது. அப்பொழுது அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி "வரப்பு எனக்குத்தான் சொந்தம்" என்று சண்டை போட்டுக்கொண்டனர். இந்த சண்டையானது ஒரு கட்டத்தில் உச்சத்திற்கு சென்றது. உடனே இவர்கள் நீதி கேட்டு வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கானது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் சென்றது. இந்த வழக்கில் எப்படியாவது வெற்றி அடைய வேண்டுமென்று தாங்கள் வைத்திருந்த ஒரே வயலை கூடவிற்க முன்வந்தனர். இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமாய் இருந்த வயலை அந்த ஊரிலுள்ள வசதி படைத்த ஒரு நபரிடம் விற்றனர். அந்த பணத்தை வைத்து தொடர்ந்து வழக்குகளை சந்தித்தனர். இறுதியில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த வரப்பு இருவருக்கும் பொதுவானது என்று தீர்ப்பு வந்தது. இருவரும் வரப்பில் நின்று கொண்டிருந்த பொழுது "இந்த வரப்பு எனக்கு தான் சொந்தமானது என்று இரு வயல்களையும் விலை கொடுத்து வாங்கிய அந்த நபர்" கூறினார். அப்போதுதான் அவர்கள் தங்களுடைய புரிதலற்ற குறுகிய மனப்பான்மையை நினைத்து மனம் வருந்தினார்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் இதுபோன்றுதான் பல நேரங்களில் திறந்த மனநிலையோடு இல்லாமல் இல்லாத ஒன்றிற்காக இருப்பவற்றை இழக்கக்கூடிய சூழல் ஏற்படுகின்றது. அவற்றை திறந்த மனநிலையோடு புரிந்து கொண்டோமென்றால், வாழ்வில் வசந்தத்தைக் காணமுடியும்.

இன்றைய முதல் வாசகம் நாம் திறந்த மனநிலையில் இல்லாவிடில் என்ன நடக்கும் என்பதற்குப் பாடமாக இருக்கின்றது. ஆண்டவரின் அருளால் முதல் பெற்றொருக்கு ஆபேல் மற்றும் காயின் பிறந்தனர். ஆபேல் ஆடு மேய்ப்பவனாகவும் காயின் நிலத்தைப் பண்படுத்துபவனாகம் மாறினர். சிறிது நாட்களுக்குப் பிறகு இருவரும் உழைப்பின் பலனிலிருந்து காணிக்கை செலுத்த முன்வந்தனர். ஆபேல் தன் மந்தையில் கொழுத்த தலையீறுகளைக் கொண்டுவந்தான். காயினும் தன்னுடைய நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்கு காணிக்கை கொண்டு வந்தான். கடவுள் ஆபேலின் காணிக்கையை மட்டும் கனிவுடன் நோக்கியதாகவும் காயீனின் காணிக்கையை கனிவுடன் நோக்கவில்லை என்பதையும் நாம் வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு நமக்கு மிகச்சிறந்த ஒரு வாழ்வியல் பாடத்தை கொடுக்கின்றது. கடவுளின் கனிவை பெறுவதற்கு நாம் காத்திருக்க வேண்டும். கடவுள் காயீனின் காணிக்கையை உதாசீனப்படுத்த வில்லை. நிச்சயமாக மீண்டுமொருமுறை காணிக்கை செலுத்துகின்ற போது கடவுள் காயீனின் காணிக்கையை ஏற்றிருக்கலாம். ஆனால் காயின் தண்ணீர் குறைவாக மதிப்பிட்டு திறந்த மனநிலையோடு இல்லாமல் தன் உடன்பிறந்த சகோதரரையே கொன்றான். எனவே கடவுளின் அருளை இழந்து தண்டனையைப் பெற்றான்.  

கடவுளின் இயல்போடு வாழ்வது தான் நம் அடையாளம். கடவுள் நம்மைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்தார் என்பதை கடந்த வாரம் முழுவதும் தியானித்து வந்தோம். அப்படிப்பட்ட கடவுளின் பிள்ளைகளாகிய நாம் பல நேரங்களில் நம்முடைய அடையாளத்தை இழந்து காயினைப் போல குற்றங்கள் பல செய்து கடவுளின் அருளைக் இழந்து வருகிறோம். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் காயீனைப் போல பொறாமை உள்ளம் கொள்ளாமல் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். பொறாமை தான் நாம் திறந்த மனநிலையோடு வாழத் தடையாக இருக்கின்றது.

இத்தகைய பொறாமை நிறைந்த மனநிலையைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்திலும்  நாம் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியில் பரிசேயர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டனர். யூதர்கள் மெசியாவை எதிர்பார்த்து காத்திருந்தனர். மெசியா வரும்போது சில அடையாளங்களும் அறிகுறிகளும் தோன்றும் என்றும் நம்பினர். இது நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால் ஆண்டவர் இயேசு தன்னைத் தன்னுடைய போதனைகளின் வழியாகவும் வல்ல செயல்களின் வழியாகவும்  மெசியாவின் மதிப்பீடுகளோடு  வெளிப்படுத்திய பிறகும் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். இதற்கு அடிப்படை காரணம் பரிசேயர்களால் இயேசுவின் அதிகாரம் நிறைந்த போதனைகளையும் வல்லச்செயல்களையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது பரிசேயர்களின் பொறாமைக் குணம்.இயேசுவின் செல்வாக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்த நிலையில் தங்களுடைய செல்வாக்கு குறைந்துவிடுமோ, மக்கள் தங்களுக்கு மதிப்பளிக்க மாட்டார்களோ என்ற பயம் இயேசுவைத் திறந்த மனதுடன் மெசியா என்று ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையை உருவாக்கியது.

"கண்ணிருந்தும் குருடர்கள்" என்ற சொல்லானது பரிசேயர்களுக்கு நிச்சயம் பொருந்தும் விதமாக இருக்கின்றது. இயேசுவின் பற்பல புதுமைகளையும் போதனைகளையும் கண்டும் அடையாளம் கேட்டனர். ஒருவேளை ஆண்டவர் இயேசு அவர்களுக்கு அடையாளம் காட்டி இருந்தாலும் நிச்சயமாக நம்பி இருப்பார்களா என்றால்? அது மிகப்பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கின்றது. ஏனெனில் பரிசேயர்கள் திறந்த மனநிலையோடு இல்லை; மாறாக, இயேசுவிடம் குற்றம் மட்டுமே காண வேண்டும் என்ற குறுகிய மனநிலையில் இருந்தனர். எனவே தான் ஆண்டவர் இயேசு "இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறியுள்ளார்.

நம்முடைய அன்றாட வாழ்வை சற்று அலசிப் பார்ப்போம். நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற அடையாளத்தை மறந்து வாழுகின்றோமா? என்பதை இன்றைய நாளில் சுயஆய்வு செய்வோம். அதேபோல நமக்கு ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் நம்பவும் பல வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை முழுமையாகப் பயன்படுத்தி அவரை நம்புகிறோமோ? அல்லது நம் வாழ்வில் வல்லசெயல்கள் போன்ற அடையாளங்கள் நடந்தால் மட்டும்தான் நம்புகிறோமோ? என்பதைச் சிந்தித்து ஆண்டவர் இயேசுவை முழுமையாக நம்பி திறந்த மனநிலையோடு இறையாட்சியின் மதிப்பீட்டிற்குச் சான்று பகரத் தேவையான அருளை வேண்டுவோம். 

இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் எங்கள் அன்றாட வாழ்வில் குற்றம் காணும் மனநிலையை விட்டுவிட்டு திறந்த மனநிலையோடு அனைவரையும் உம் மகன் இயேசுவைப் போல ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை தாரும். ஆமென்.

Add new comment

7 + 11 =