கடவுளின் திருவுளத்தை அறிந்து  வாழ்வு பெற! | | குழந்தை இயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு - I. லேவி: 13:1-2,44-46; II. தி.பா: 32:1-2.5.11; III. 1 கொரி: 10:31-11:1; IV. மாற்: 1:40-45

ஒரு ஊரில் இரண்டு நபர்கள் இருந்தனர். அது இரண்டு நபர்களில் ஒருவர் துன்பத்தின் மத்தியிலும் மகிழ்ச்சியுடன் இருந்தார். எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு தனது வாழ்க்கையை பொறுமையோடு வாழ்ந்தார். மற்றொரு நபர் எல்லா வகையான வசதிகளும் இருந்தும் இன்னும் நிறைய சேகரிக்க வேண்டும் என்ற மனநிலையோடு இருந்தார். வாழ்வில் பல சாதனைகள் பெற்று நற்பெயரைப் பெற வேண்டும் என்ற மனநிலையோடு இருந்தார். ஆனால் அவர் பலவற்றை முயற்சி செய்ததால் எதிலும் நிறைவு இல்லாமல் மகிழ்ச்சி இழந்து  வாழ்ந்தார். வாழ்வின் முழுமை எது என்பதை  அறிய வேண்டும் என முயற்சி செய்தார். எனவே அவர் மகிழ்ச்சியோடு வாழக்கூடிய அந்த நபரிடம் "பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் எவ்வாறு உங்களால் மகிழ்வோடும் நிறைவோடும் வாழ முடிகின்றது?" என்று வினவினார். அதற்கு அந்த நபர் "எனக்கு எவ்வளவு துன்பங்களும் இடையூறுகளும் வந்தாலும் அதை  கடவுளின் திருவுளமென்று ஏற்று வாழ்வை  நிறைவோடு வாழ முயற்சி செய்கின்றேன். கடவுள் நமக்கு சோதனை கொடுக்கிறார் என்றால் அவர் அதற்கென ஒரு திட்டம் வைத்திருப்பார்" என்று பதில் கூறினாராம். இதைக் கேட்டவுடன் தான் அந்த நபருக்கு கடவுளின் திருவுளப்படி வாழ்வதுதான் உண்மையான மகிழ்வும் நிறைவும் என்பது புரிந்தது. 

நம்முடைய வாழ்வில் கடவுளின் திருவுளத்தை அறிந்து அதன்படி செயல்படும் பொழுது நம் வாழ்வில்  துன்பத்தின் மத்தியிலும் மகிழ்வையும் நிறைவையும் பெறமுடியும்.  இன்றைய நற்செய்தியில் தொழுநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை இயேசு குணப்படுத்தும் நிகழ்வைப் பார்க்கிறோம். நலம் பெற விரும்பிய அந்த தொழுநோயாளர் கடவுளின் திருவுளத்தை அறிந்து நம்பிக்கையோடு நலம்பெற விரும்பியதை, நற்செய்தியை ஆழமாக தியானிக்கும் பொழுது நம்மால் அறிய முடிகிறது தொழுநோயாளர் இயேசுவிடம் வந்து "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" ( மாற்: 1:40) என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். தொழுநோயாளரின் இம்மனநிலை இயேசு மற்றும் அன்னை மரியாவின் மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கின்றது.

இயேசு கெத்சமெனித் தோட்டத்தில் ஜெபிக்கும் போது “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார் என மத்தேயு 26:39 ல் வாசிக்கிறோம். கடவுளின் திருவுளத்தை ஏற்று இயேசு அது துன்பத்தைத் தருவதெனினும் அதை ஏற்றுக்கொள்ளத் துணிகிறார். ஏனெனில் கடவுளின் திருவுளம் அனைவருக்கும் நன்மையையே தரும் என அவர் உணர்ந்திருந்தார்.

அதே போல அன்னை மரியா கூறிய “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்கா 1:38) என்ற வார்த்தைகள் அவர் கடவுளின் திருவுளத்தை ஏற்ற உளப்பாங்கை எடுத்துரைக்கிறது. அக்கடவுளின் திருஉளம் உலகிற்கு மீட்பு தருவதை அவர் அழமாக உணர்ந்ததை எடுத்துரைக்கிறது. தொழுநோயாளர் தனக்கு நம்பிக்கை இருந்தும் கடவுளின் திருவுளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இயேசு தன்னைக் குணப்படுத்த வேண்டும் என அவர் வற்புறுத்தவில்லை. மாறாக 'நீர் விரும்பினால்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இது எதைச் சுட்டி காட்டுகிறது என்றால் கடவுளின் திருவுளம் இருந்தால் மட்டுமே தன்னுடைய நோய் முழுவதும் குணமடையும் என்று ஆழமாக நம்பினார் என்பதையே. இன்னும் ஆழமாக சிந்தித்தால் இயேசுவின் இறையாட்சி பணி என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கானது என்பதில் தொழுநோயாளர் தெளிவாக இருந்தார். இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் தொழுநோயாளர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தனர். இயேசுவின் போதனைகளும் அருஞ்செயல்களும் ஒடுக்கப்பட்டோருக்கு சார்பாக இருந்ததை அத்தொழுநோயாளர் அறிந்திருந்தார். எனவே தன் மேல் இயேசுவுக்கு அன்பும் இரக்கமும் நிச்சயமாக உண்டு என்பதில் தெளிவாய் இருந்தார். இந்த மனநிலையோடும் நம்பிக்கையோடும் கடவுளின் திருவுளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவும் நீர் விரும்பினால் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

ஒரு வேளை இயேசு தான் குணம் பெறுவதை விரும்பாவிட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை அவர் கொண்டிருந்தார் என்பதையும் இவ்வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன. ஆம் வாழ்வின் எதார்த்தங்களை இறை நம்பிக்கையோடு நாம் ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்பதற்கு இத்தொழுநோயாளர்  நமக்கெல்லாம் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.இது இயேசு மற்றும் அன்னை மரியாவின் மனநிலையை பிரதிபலிப்பதை நம்மால் உணரமுடிகிறது.

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் விரும்பிய அனைத்தும் நிறைவேறுவதில்லை. நம்முடைய இறைவேண்டல்களில் நம்முடைய எண்ணங்களையும் விருப்பங்களையும் கடவுள் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. அவை நிறைவேறாத நேரங்களில் ஒருவித சோர்வும் அழுத்தமும் நம்மை முடக்குகிறது. கடவுள் தன்னுடைய பிள்ளைகள் அனைவரும் நலமான வளமான வாழ்வு வாழ வேண்டும் என்றே திருவுளம் கொண்டுள்ளார். நம்முடைய தேவைகள் ஒவ்வொன்றையும் அறிந்த அவரிடம் நீர் விரும்பினால் அதை நிறைவேற்றும் என அவருக்கு நாம் பணிந்தால் அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார். ஆனால் அதைத் தகுந்த நேரத்தில் அவர் விருப்பப்படி நமக்கு செய்வார். அதற்கிடையில் நாம் சந்திக்கும் இடையூறுகளும் துன்பங்களும் நம்மை நம்பிக்கையில் திடப்படுத்தவே. அவையே வாழ்வின் எதார்த்தம் என்ற உண்மையை இன்று நாம் உணர வேண்டும். எனவே வாழ்வின் எதார்த்தங்களை இறை விருப்பம் என்ற நம்பிக்கையோடு இயேசு, அன்னை மரியா மற்றும் தொழுநோயாளருடைய மனநிலையில் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வேண்டுவோம். இறைவன் நமக்கு வளமும் அருளும் நல்குவார்.

இறைவேண்டல்

நாங்கள் நலமோடு வாழ வேண்டும் என்று திருஉளம் கொண்ட ஆண்டவரே! வாழ்வின் எதார்த்தங்களை உமது திருவுளம் என்ற நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு இயேசு, அன்னை மரியா மற்றும் தொழுநோயாளரின் மனநிலையை பிரதிபலிப்பவர்களாக வாழும் வரம் தாரும். ஆமென்.

Add new comment

6 + 8 =