Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைவனின் விருப்பமே நமது விருப்பமாகட்டும் | பணி. திலக ராஜா சி. | Sunday Reflection
ஆண்டின் பொதுக்காலம் 6ம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இன்றைய நாளில் நாம் இறைவனின் விருப்பமே நமது விருப்பமென நமது வாழ்வை அமைத்துக்கொள்ள அழைக்கப்படுகிறோம். நமது வாழ்வில் நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தால் பெரும்பாலான பக்கங்கள் நமது ‘நான்’என்ற விருப்பங்களே இடம்பிடிக்கின்றன. தோல்விக்கான பக்கங்களை ஆராய்ந்தாலும் நமது விருப்பங்களுக்கு நாம் நாம் கொடுத்த அதீத முக்கியத்துவங்களே காரணங்களாக அமையும். இன்னும் சொல்லப்போனால் அழியாமையுடன் படைக்கப்பட்ட மனித இனம்அழிவுக்குட்பட்டதுகூட மனிதர்கள் கடவுளின் விருப்பத்தை ஒதுக்கி, தனது விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இறுதியில் ஒட்டு மொத்த மனித இனமே சபிக்கப்பட்டது. இறைவிருப்பத்தை ஒதுக்கி நமது விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இது போன்றே நடக்கும் என்பதற்கு விவிலியத்தில் இன்னும் பிற நிகழ்வுகள் உள்ளன்.
எரேமியா இறைவாக்கினர் புத்தகம் அதிகாரம் 36 முதல் 39 வரையிலான பகுதி எவ்வாறு அரசன் செதேக்கியா இறைதிருவுளத்தை மீறினான், அதனால் அவன் பொருட்டு எருசலேம் வீழ்த்தப்பட்டது என்பதைக் கூறும் பகுதி இன்னும் தெளிவாக நமக்கு விளக்குகிறது. எருசலேமை கல்தேயர்கள் முற்றுகையிட்டபோது, பார்வோனின் படையும்எருசலேமை நோக்கி வருகிறதென்று அறிந்து கல்தேயர்கள் படைபின் வாங்குகிறது.பின்மறுபடியும் முற்றுகையிடும்போது, 38:17-ல் நீர் உடனே பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் சரணடைந்தால் உயிர்வாழ்வீர், இந்நகர் தீக்கிரையாகாது. நீரும் உம் வீட்டாரும் பிழைத்துக்கொள்வீர்கள். பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் நீர் சரணடையாவிட்டால், இந்நகர் கல்தேயரிடம் கையளிக்கப்படும். அவர்கள் அதை தீக்கிரையாக்குவார்கள், நீரோ அவர்களது கைக்குதப்பமாட்டீர் என்று எரேமியா வழியாக தனது விருப்பத்தை இறைவன் எடுத்துரைத்தார். நடந்ததோவேறு. செதேக்கியா பாபிலோனியப் படைகளிடம் சரணடையமறுத்து இரவோடு இரவாக மதிலேறி தப்பிக்க முயலும்போது, கல்தேயர்கள் அவர்களைசிறைப்பிடிக்கின்றனர். அதன்பின் பிணைக்கைதியாகிறார். 39:7 – அவர் கண்கள் பிடுங்கப்படுகிறது. 39:8 – அரச மாளிகையையும் மக்களின் வீடுகளையும் கல்தேயர்கள் தீக்கிரையாக்கினர் என்னும் பகுதி இறைதிருவுளத்திற்கு எதிராகவோ அல்லது மறுத்தாலோ நாமும் இதுபோன்ற நிலைகளை எதிர்கொள்வோம் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது.
அதுபோல இறைவாக்கினர் யோனாவைப் பற்றி அறிந்திருப்போம். யோனா நினிவேநகர் சென்று இறைவனின்வாக்கை அறிவிக்கவேண்டுமென்பது இறைவனின்விருப்பம். ஆனால் யோனா நம் நாட்டு சாதிய எண்ணம்போல புறஇனத்தவருக்கு அறிவிக்கமறுத்து ஓடினார். இறுதியில் என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம்.
அப்படியெனில் இறை திருவுளத்துக்கு நம்மை திறந்து கொடுப்பதால் என்ன கிடைக்கும்? என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவுப்படுத்தகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இயேசுவிடம் “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றுகூற இயேசுவும் விரும்புகிறேன் உமது நோய் நீங்குக என்றுகூறி வாழ்வுகொடுக்கிறார். யூத சமூகத்தில் தொழுநோய் எவ்வளவு மோசமானது என்றால் அவர்கள் ஊருக்குள் வரமுடியாது, மக்களைக் கண்டால் தீட்டு தீட்டு எனக் கத்தவேண்டும். இப்படியிருந்த நிலையிலும் அவர் நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்கிறார். விளைவு நோய் நீங்குகிறது. இறைவன் விருப்பம் நம்மிடம் நிறைவேற வேண்டுமென்பதே நமது அன்றாடசெபம். உம்முடைய திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக என்றுதானெ ஒவ்வொரு நாளும் செபிக்கிறோம். நம்மாண்டவர் இயேசுகூட தனது துன்ப நேரத்தில் தந்தையே முடிந்தால் இந்த துன்பக்கிண்ணம் என்னைவிட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உமது விருப்பப்படியே நிகழட்டும் என்று தந்தையின் விருப்பத்திற்கு தன்னை முழுவதும் கையளித்தார். இயேசுவின் சொற்களே நமது செபத்துக்கும் மாதிரியாக அமையவேண்டும். பல தருணங்களில் நம் செயங்களில் உம் விருப்பமன்று என் விருப்பமே செயல்படவேண்டும் என்று வேண்டுவது இல்லையா? நமது தேவை என்னவென்பது நம் தந்தைக்கு தெரியாதா? (மத் 6:8). எனவே கேட்போம். மனம்திறந்து கேட்போம். கேட்டுக்கொண்டேயிருப்போம். ஆனால் தந்தையின் விருப்பபடி அனைத்தும் நடக்குமாறு கேட்போம். உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் (மத் 7:11). எனவே இறைவன்மீது நம்பிக்கை வைத்து அவரின் திருவுளத்துக்கு நம்மை ஒப்பக்கொடுப்போம். அனைத்தும் நல்லதென நடக்கும்.
Add new comment