அதிகாரத்தோடு நாம் போதிக்க முடியுமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு - I. இ.ச :18:15-20; II. திபா: 95:1-2.6-7.8-9; III. 1 கொரி: 7:32-35; IV. மாற்கு: 1:21-28

அதிகாரம் என்பது நம்முடைய பணம், பட்டம், பதவி போன்றவற்றால் வருவதல்ல; மாறாக, நம்முடைய வாழ்வால் வருவது. யார் அதிகாரத்தோடு பேச முடியும் என்றால் தன் வாழ்வில் தூய்மை இருப்பவர்கள் மட்டுமே. தன் வாழ்வில் உண்மை, நேர்மை, தூய்மை போன்றவைகள் இல்லாத மனிதரால் அதிகாரத்தோடு பேசமுடியாது. இன்றைய நற்செய்தி நம்மை அதிகாரத்தோடு போதிப்பவர்களாக வாழ அழைப்பு விடுக்கின்றது.  யாருடைய வாழ்வில் சொல்லும் செயலும் இணைந்து செல்கின்றதோ அவர் அதிகாரத்தோடு போதிக்க முடியும். கல்விக்கண் திறந்த காமராஜர் அதிகாரத்தோடு அனைத்து நல திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு வர முடிந்தது. ஏனெனில் அவரின் அரசியல் வாழ்வு உண்மையும் நேர்மையும் தூய்மையும் நிறைந்ததாக இருந்தது. ஐஏஎஸ் சகாயம் அவர்கள் அதிகாரத்தோடு ஊழலுக்கு எதிராகவும் இயற்கைச் சுரண்டலுக்கு எதிராகவும் துணிச்சலோடு குரல் கொடுக்க  முடிந்தது. அதனால் அவர் வாழ்வில் பலவற்றை இழந்தாலும் எண்ணற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அவர் இருக்கின்றார். அவருடைய வார்த்தையும் வாழ்வும் முன்மாதிரியாகவும் அதிகாரத்தோடு நம் குரலை எழுப்பும் தகுதியையும் கொடுக்கின்றது. கறுப்பின மக்களுக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா அவர்கள் உண்மையோடும் பிறர் நலத்தோடும் நேர்மையோடும் தன்னுடைய மக்களுக்காக போராடியதால் அவர் அதிகாரத்தோடு தன்னுடைய குரலை எழுப்ப முடிந்தது . இத்தகைய நிலைப்பாடுகளுக்காக துன்பங்கள் பல அவர் அடைந்தாலும் தன்னுடைய இலக்கில் வெற்றி கண்டார்.

ஆண்டவர் இயேசுவும் மூன்று ஆண்டு இறையாட்சி பணி செய்த பொழுது அதிகாரத்தோடு போதனைகள் செய்தார்.  இயேசு கப்பர்நாகும் என்ற ஊரில் நுழைந்ததும் ஓய்வுநாள் என்று கூட பார்க்காமல் தொழுகைக் கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். "இயேசுவின் போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்" (மாற்: 1:22). அதே போல இயேசு தொழுகைக் கூடத்தில் தீயஆவி பிடித்திருந்தவரிடமிருந்து அதிகாரத்தோடு தீய ஆவியை விரட்டி நலமாக்கினார். அதிகாரம் கொண்ட இயேசுவை தீய ஆவி "நாசரேத்து இயேசுவே,  உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிட வா வந்தீர்?  நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" (மாற்: 1:24) என்று அடையாளம் கண்டு கத்தியது. ஆண்டவர் இயேசு அதிகாரத்தோடு "வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ" (மாற்: 1:25) என்று அதட்டினார். இயேசுவின் இறை அதிகாரத்திற்குப் பயந்து அந்த தீயஆவி  அந்த மனிதருக்கு வலிப்பு உண்டாக்கி பெரும் கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. இயேசுவின் அதிகாரத்தைக் கண்டு மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள். இயேசுவால் இவ்வாறு இவ்வளவு அதிகாரம் மிகுந்தவராக இருக்க முடிந்தது.

இயேசுவின் போதனை அதிகாரம்கொண்ட போதனை. இயேசு அதிகாரத்தோடு தொழுகைக் கூடத்தில் கற்பித்து வந்தார். மனிதனையும் மனித மாண்பையும் ஒடுக்கிய தேவையில்லாத சட்டங்களை அதிகாரத்தோடு எதிர்த்தார். இத்தகைய நிலையை அவர் எவ்வாறு அடைய முடிந்தது என்பது பற்றி நாம் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

 யார் அதிகாரத்தோடு பேசமுடியும்? "எந்த ஒரு மனிதர் உண்மையுள்ளவனாக இருக்கின்றானோ,  மனச்சான்றுக்கு பயந்து நேர்மையோடு, நீதியோடு வாழ்கிறானோ அவனால், துணிவோடு, அதிகாரத்தோடு பேச முடியும்". அதுதான் இயேசுவின் வாழ்வில் வெளிப்படுகிறது. இயேசு எதற்காகவும், யாருக்காகவும் உன்மையை, நேர்மையை, நீதியை விட்டுக் கொடுக்கவில்லை. "இயேசு  போதித்ததை வாழ்ந்தார்; வாழ்ந்ததைப் போதித்தார்". எனவே தான் அவரால் அதிகாரத்தோடு போதனை செய்ய முடிந்தது. மேலும் அதிகாரத்தோடு தீய ஆவிகளை விரட்ட முடிந்தது. இயேசுவின் அதிகாரத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு:

 1. இயேசு இயற்கையின் மீது அதிகாரம் கொண்டிருந்தார்.
"காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படுகின்றனவே! இவர் யாரோ" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். (மாற்: 4:41) என்ற வசனம் இயேசு இயற்கையின் மீது அதிகாரம் கொண்டிருந்தார் என்பதைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. இறைமகனாகிய  இயேசுவுக்கு இயற்கையின் மீது அதிகாரம் இருந்தது. இந்த அதிகாரம் இயற்கையை அழிக்க கூடிய அதிகாரம் அல்ல; மாறாக, இயற்கையை அன்பு செய்யக்கூடிய அதிகாரம். ஒரு தந்தைக்குரிய பாசத்தோடு காற்றை கடிந்துகொண்டார். "இரையாதே, அமைதியாயிரு" என்று இயேசு சொன்ன போது  "காற்று அடங்கியது ; மிகுந்த அமைதி உண்டாயிற்று" (மாற்: 4:39). இயேசு இயற்கையை முழுமையாக அன்பு செய்தார். நாமும் நம் அன்றாட வாழ்வில் இயற்கையை அன்பு செய்கின்ற பொழுது புனித பிரான்சிஸ் அசிசியாரைப் போல இயற்கையை சொந்த உறவினர்களை போல பெயர் சொல்லி அழைக்க முடியும். இன்று  ஆளும் அதிகார வர்க்கத்தினர் சுயநலத்தோடு இயற்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றனர். தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இயற்கையை அசுத்தப்படுத்தி வருகின்றனர். எனவேதான் பல்வேறு தீநுண்மிகளால் துன்பப்பட்டு வருகின்றோம். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் கொரோனா தீநுண்மி போன்ற நோய்கள் ஆகும். எனவே இயேசு இயற்கையை அன்பு செலுத்துவதன் வழியாக அதிகாரம் கொண்டிருந்ததைப் போல நாமும் இயற்கை அன்பு செய்வதன் வழியாக இயற்கையின் மீது அதிகாரம் செலுத்துவோம். 

 2. இயேசு மனிதர்கள் மீதும் அதிகாரம் கொண்டிருந்தார்.
"நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்" (யோ: 17:2). இயேசுவுக்கு கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர் அனைவர் மீதும் அதிகாரம் உண்டு என்பதை இந்த விவிலியப் பகுதி நமக்குச் சுட்டிக் காட்டியுள்ளது. இயேசு மனிதனின் மீது அதிகாரம் கொண்டது அவர்களை ஒடுக்கி அடிமைப்படுத்த அல்ல; மாறாக, அவர்களை கடவுளின் பிள்ளைகளாக உருமாற்றி கடவுள் தரும் மீட்பை அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தான் அவர்கள் மீது அதிகாரம் கொண்டார். அவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே செய்த மூன்றாண்டு இறையாட்சி பணியில் அதிகாரத்தோடு போதித்தார். அவருடைய போதனைகள் உண்மை, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற தலையாகிய பண்புகள் இருந்தன. எனவே நாமும் ஆண்டவர் இயேசுவைப் போல மனிதநேய பணிகள் வழியாகப் பிறர்மேல் அன்புவழி அதிகாரம் செலுத்த அழைக்கப்பட்டுள்ளோம். 

 3. இயேசு தீய ஆற்றல்கள்  மீதும் அலகையின் மீதும் அதிகாரம் கொண்டிருந்தார். 
"வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ" (மாற்: 1:25)  என்று இயேசு தீய ஆவியை அதட்டி தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதருக்கு குணமளித்தார். தீய ஆவியின் மீது நாம் அதிகாரம்  கொண்டிருக்க இயேசுவைப் போல மூன்று முக்கிய செயல்பாடுகளில் நாம் இணைந்து இருக்க வேண்டும். அவை மூன்றும் பின்வருமாறு: இறைவேண்டல், நோன்பு மற்றும் மக்கள் மையப் பணி. இயேசு இறை வேண்டலில்   தந்தையின் திருவுளத்தை  அறிந்து தந்தையின் வல்லமையை முழுமையாகப் பெற்று மீட்பின் திட்டத்திற்கு தன்னையே தகுதிப்படுத்தினார். தீய ஆவியின் மீது அதிகாரம் கொண்டிருக்க நோன்பு மிகவும் அவசியம் என்பதை தன் சீடர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். மேலும்  நோன்பின் வழியாக தன்னையும் அவர் தகுதிப்படுத்தியுள்ளார். இறைவேண்டலின் வழியாக இறைத்தந்தையின் அனுபவத்தைபப் பெற்ற இயேசு, அந்த அனுபவத்தை மக்கள் மையப்பணியின்  வழியாக வெளிப்படுத்தினார். இத்தகைய மூன்று முக்கியப் பண்புகள் வழியாக தீயசக்திகள் மீதும் சமூக அநீதிகளின் மீதும் அதிகாரம் கொண்டிருந்தார். எனவே நாமும் நமது அன்றாட வாழ்வில் தீய ஆற்றல்கள் மீது அதிகாரம் கொண்டிருக்க இயேசுவைப் போல இறைவேண்டலிலும் நோன்பிலும் மக்கள் மையப்பணியிலும் நம்மையே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முயற்சி செய்வோம்.

 4. இயேசு இறைவார்த்தையின் மீது அதிகாரம் கொண்டிருந்தார்.
மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் மறைநூலை அறிவார்ந்த வகையில் கற்றுக் கொண்டாலும் அவர்கள் அனுபவம் சார்ந்த வகையில் கற்றுக்கொள்ளவில்லை. மறைநூலை அவர்கள்  அறிவிலிருந்தான் போதித்தார்கள். ஆனால் அவர்கள் உள்ளத்திலிருந்து  போதிக்கவில்லை. எனவேதான் அவர்களுடைய  சொல்லும் செயலும் தொடர்பில்லாமல் இருந்தது. ஆனால் இயேசு இறைவார்த்தையின் மீது அதிகாரம் கொண்டிருந்ததால் அவர் உள்ளத்திலிருந்து வல்லமையோடு போதித்தார். எனவே அந்தப் போதனை மக்களை வியப்பில் ஆழ்த்தியது. எனவே ஆண்டவர் இயேசுவைப் போல நாமும் நம்முடைய அன்றாட வாழ்வில் இறைவார்த்தையை நம் உள்ளத்திலே தியானித்தவர்களாய்  வாழ்ந்து அதை அனுபவித்து பிறருக்கு அதிகாரத்தோடு அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளோம். 

இவ்வாறாக இயேசுவின் அதிகாரத்தை நான்கு வகைகளாக வகைப்படுத்தலாம். இயேசுவின் அதிகாரத்தை நாமும் கொண்டிருக்க நம்முடைய வாழ்வை அவரின் வழியில் அமைத்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவைப் போல உண்மை, நேர்மை, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், அன்பு, இரக்கம் போன்ற இறையாட்சி மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை நம் வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழும் பொழுது நாமும் இயேசுவைப் போல அதிகாரத்தோடு போதிக்க முடியும். அதிகாரத்தோடு தீய ஆற்றல்களையும்  சமூக அநீதிகளையும் விரட்ட முடியும். இயேசுவைப்போல் அதிகாரத்தோடு போதிக்க நாம் தயாரா.....!

இறைவேண்டல் 
வல்லமையுள்ள இயேசுவே !  நாங்கள் உம்மைப் போல அதிகாரத்தோடு உம்  போதனைகளை பிறருக்கு அறிவிக்கத் தேவையான அருளையும் ஞானத்தையும் தாரும். ஆமென்.

Add new comment

1 + 4 =