இளமையில் பயனுள்ளவற்றை தேடுவோம் | பணி. திலக ராஜா சி. | Sunday Reflection


அன்பு நண்பர்களே! இன்று ஆண்டின் பொதுக்காலம் 2-ம் ஞாயிறு வழிபாட்டிற்கு நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாசகங்கள் நமது இளமையையும் இளமைப்பருவத்தில் நமது உடலைப் பேணவும் அழைப்புவிடுக்கிறது. இளமைப் பருவம் என்பது நமது வாழ்வில் மிக முக்கியமான பருவம். இன்று தொலைத்துவிட்டு நாளைத் தேடுவது சரியானத் தேடலாக அமையாது. தேடவேண்டிய நேரத்தில் சோம்பேறிகளாக இருந்துவிட்டு பின்னாளில் தேடுவதில் எந்த பயனும் இல்லை. இளையோருக்கான கூடுகை ஒன்றில் இளையோரின் சுறுசுறுப்பை சோதிக்கவேண்டி அவர்களிடம் காலையில் எழுவது பற்றிகேட்கப்பட்டதாம். காலை 3 மணிக்கு எழுந்தால் அவர் முனிவர், 4 மணிக்குஎழுந்தால் அவர் ஞானி, 5 மணிக்குஎழுந்தால் அவர் அறிஞர், 6 மணிக்குஎழுந்தால் அவர் சாதாரணமனிதர் என்றார். அப்போது ஒரு இளவல் 7 மணிக்கு எழுபவர்கள் யார்? எனக் கேட்டான். இவ்வாறாக நம் இளைஞர்கள் சோம்பேறிகளாக மாறிக்கொண்டு வருகின்றனர். அதுபோக அவர்கள் பயன்படுத்தும் அலைபேசிகளும் சாபக்கேடுகளாக மாறிக்கொண்டே இருக்கின்றன. அண்மையில் ஒரு கணக்கெடுப்பின்படி 1000 மாணவர்களிடம் அவர்கள் கைப்பேசியை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என வினவியபோது மாணவர்களில் 67 பேரும், மாணவியரில் 39 பேரும் அதை ஆபாசபடங்கள் பார்க்கப் பயன்படுத்துகிறார்கள் எனதெரியவந்தது. 

இதுபோன்ற சின்னசின்ன காரணங்களால் நம் இளையோரின் மனமானது சிதறடிக்கப்படுகிறது. இதனால் இளமையில் பயனுள்ளதை தேடுவோம் எனும் மனநிலை மாறி இருப்பதை கொண்டு வாழ்வோம் எனும் குறுகிய மனநிலைக்கு மாறிவருகிறார்கள். ஆனால் இன்றைய முதல் வாசகம் பயனுள்ளதைத் தேடவும், அதற்கு நம்மை முழுமையாக திறந்துகொடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. சாமுவேலை இறைவன் அழைத்தபோது அவர் முழுமையாக முன் வந்ததை பார்க்கிறோம். இது அவரின் தேடலுக்கு கிடைத்த வெகுமதி. எனவேதான் ஆண்டவர் அவரோடு இருந்தார். அதுபோல பல விவிலிய மாந்தர்கள் உள்ளார்கள். அவர்களில், தொடக்க நூலில் வரும் யோசேப்பு கடவுளுக்கு அஞ்சினார் பதினேழாவது வயதிலேயே அவர் மற்ற எல்லாச் சகோதரர்களைவிட சிறந்துவிளங்கினார் என விவிலியம் சான்றுபகர்கிறது.

நாமானின் வேலைக்காரச் சிறுமி கடவுள் மீதுகொண்டிருந்த நம்பிக்கையை அவர் நாமான் வழியாக செயல்படுத்திக் காட்டுவதையும் பார்க்கிறோம். இவ்வாறு நாம் காணும் விவிலிய மாந்தர்கள் தங்கள் தேடுதலின் வழி தங்களையும் தங்கள் எதிர்கால வாழ்வையும் மேம்படுத்திக் கொண்டவர்கள். தேடுபவர்கள் பலனின்றி போவதில்லை. ஆனால் தேடுகின்ற நாம் துடிப்புடன் தேடவேண்டும். வாழ்வின் மீது பேரார்வம் கொள்ளும் போது அந்த பேரார்வம் நம் வாழ்வில் நாம் வெற்றியடைய வழிவகுக்கும். நாம் சோம்பேறிகளாக இருந்தால் நம் வாழ்வுசீர்குலையும். அதற்கும் நம் உடலைக் காத்தக் கொள்ளவேண்டும் என இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துக் கூறுகிறது. நமதுஉடல் தூய ஆவிஉறையும் ஆலயம் எனில் நாம் அதனைப் பாதுகாக்கவேண்டும். அவரின் உந்துதல் நாம் பெற,அதற்குஏற்பநம் வாழ்வை பாதுகாக்க வேண்டும். சோம்பேறிகளாக இருத்தல் கூடாது. அவ்வாறு இருந்தால் நீதிமொழிகள் நூல் பதில் தருகிறது 6:10-11 - இன்னும் சிறிதுநேரம் தூங்குங்கள், இன்னும் சிறிதுநேரம் உறங்குங்கள், கையைமடக்கிக் கொண்டு இன்னும் சிறிதுநேரம் படுத்திருங்கள். வாழ்க்கை உங்கள்மீது வழிப்பறிக் கள்வரைப்போல பாயும். ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப் போல் தாக்கும் என்கிறது. கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டவாழ்வைப் பயன்படுத்தாவிடில் நாம்தான் வீழ்வோம். 

தேடல் உள்ளமனங்களிலேதினமும் பசியெடுக்கும். சோம்பேறிகளாக இருந்தால் பசியெடுக்கவாய்ப்பில்லை. இன்றையநற்செய்தியில் வரும் சீடர்களின் பின் தொடர்வும், தேடுதலும் அவர்கள் மெசியாவைக் காணச் செய்தது. அவர்களே நமக்கு சிறந்த முன்மாதிரிகள். இளைமைப் பருவத்தை அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் பலனை சுவைக்கிறார்கள். அவர்கள் தேடலின் பலனை பிறரோடு பகிர்ந்து பிறரும் தேடலின் அருமையை உணரச் செய்வதைப் பார்க்கிறோம். நாமும் இவர்களைப் போலமாறலாமே. முடியாது என்று எதுவும் இல்லை. நம் முயற்சி மலையையே தகர்க்கும். ஆனால் தேவை நமது சிறு தேடுதல் அல்லது முயற்சியே.

இதைத்தான் திருத்தந்தை பிரான்சிஸ் தனது அன்பின் மகிழ்சி எனும் திருத்தூது ஊக்கவுரை எண் 260-261-ல் நமது குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள். மிண்ணனுசாதனங்கள் வழி யாரிடம் பேசுகிறார்கள்? உடலவில், மனதளவில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்பதை பெற்றோரிடம் கேட்கின்றார். நீங்கள்தான் உங்கள் குழந்தைகள் சோம்பேறிகளாக, மந்தமாக, மந்தைகளாக இருக்க காரணம். நீங்கள் சரிவர வளர்காததே காரணம். அவர்களின் வாழ்வை சரிவர அமைத்துக் கொடுப்பதும் உங்கள் கடமையே.

அதுபோல கிறிஸ்து வாழ்கிறார் எனும் திருத்தூது ஊக்கவுரையின் வழி இளையோர் தேர்ந்துதெளிய அழைப்புவிடுக்கிறார். அதற்கு இந்த சமூகம் என்ன செய்யலாம் என்பதையும் சுட்டிக்காட்டி இளந்தலைமுறைக்கு வழிவிட, உருவாக்க கூறுகிறார். முரண்பாடுகளை எதிர்கொண்டு சென்று புதிய வாழ்வை வாழ்ந்துகாட்ட அழைக்கிறார். சிந்தித்துப் பார்ப்போம். நமது இளையோரை எப்படி உருவாக்கலாம்?

1.    ஞாயிறு திருப்பலிகளில் முழுமையாக பங்கெடுக்கத் தூண்டலாமே
2.    அலைபேசி, இணையதளங்கள் போன்றவற்றால் ஏற்படும் தீமைகளை உணரச் செய்து அவாற்றின் தேவையை குறைக்கச் சொல்லலாம்.
3.    பங்கின் பொறுப்புகளில் அமரவைக்கலாம்.
4.    அவர்களை குழுவாக உருவாக்கி அவர்களின் ஆற்றலைவெளிக் கொணரலாம்.
5.    இளையோரின் குரலுக்கு செவிகொடுக்கலாம்.
இது போன்றபலவற்றை நாம் செய்யலாம். அதன் வழி பயனுள்ளதை தேட இளமைக் காலத்தை பயன்படுத்தலாம்.

பணி. திலக ராஜா சி., புனிதயாகப்பர் ஆலயம், மணப்பாடு, தூத்துக்குடி

Add new comment

9 + 3 =