இறைவனின் பேரொளியில் மகிழ்வோமா?| குழந்தை இயேசு பாபு | Daily Reflection


God's light

திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள் - I. 1 யோவான் 3:22-4:6; II. திபா: 2: 7-8.10-11; III. மத்: 4:12-17,23-25

நேற்றைய நாளில் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தோம். இறைவனே வழிகாட்டும் விண்மீன் என்ற சிந்தனையைத் தியானித்தோம். இறைவனின் வழிகாட்டுதலை நம்பி அவர் பாதையில் பயணிக்க அருள் வேண்டினோம். மீண்டுமாக இறைவனுடைய பேரொளியில் மகிழ இன்றைய வார்த்தை வழிபாடு நம்மை அழைக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு நப்தலி, செபுலோன், கலிலேய பகுதிகளுக்குச் சென்று நற்செய்தியை பறைசாற்றியதையும் மக்களிடையே இருந்த நோய் நொடிகளையை எல்லாம் குணமாக்கினார் என்பதையும், மக்கள் அனைவரும் அவரை நம்பிக்கையோடு பின்தொடர்ந்தனர் என்பதைப் பற்றியும் வாசிக்கிறோம். இந்நற்செய்தியில் நாம் சிறப்பாக உற்று நோக்கவேண்டிய செய்தி என்னவென்றால் இயேசு யூதர்களுக்கு மட்டுமல்லாமல் யூதர் அல்லாத பிற இனத்தாருக்கும் நற்செய்தியை, தந்தையின் அன்பைப் பறைசாற்றினார் என்பதே. 

இயேசு பிறந்தது முதலே பிறஇனத்தவருக்கும் தந்தையின் அன்பை வெளிப்படுத்தினர். கீழ்த்திசை ஞானிகளுக்கு இயேசுவின் மாட்சி வெளிப்படுத்தப்பட்ட நிகழ்வு இதற்கு ஒரு அடையாளம். அதே போல தன்னுடைய குணமளிக்கும் வல்லமையை நூற்றுவர்த்தலைவரின் மகன் மற்றும் கனானியப் பெண்ணின் மகளுக்கு வெளிப்படுத்தியது, சமாரியப் பெண்ணுடனான உரையாடல், நல்ல சமாரியன் உவமை மற்றும் நன்றிகூற வந்த குணமடைந்த சமாரிய தொழுநோயாளரைப் புகழ்தல் போன்ற அனைத்து நிகழ்வுகளும் தந்தையின் அன்பு அனைவருக்கும் உண்டென்பதை இயேசு வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. "காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்" என்ற வார்த்தை இதற்கு பொருளளிக்கும் விதமாய் உள்ளது. அதாவது புறவினத்தார் யாவே இறைவனை வழிபடாது வேற்று தெய்வங்களை வழிபட்டு தவறுதலான பாவ இருளில்  வாழ்ந்தாலும், கடவுளின் அன்பு இயேசுவின் மூலம் ஒளியாக அவர்களது வாழ்வில் வீசப்பட்டது. அதாவது தேந்தெடுக்ப்பட்ட  மக்களுக்கு மட்டுமல்ல கடவுளின் பேரோளி முழு உலகின் மீதும் உள்ளது என்ற ஆழமான உண்மையை இதன் மூலம் நாம் உணர வேண்டும்.

யூதர்கள் தாங்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ,தங்களுக்கு மட்டும் தான் மீட்பு என்ற எண்ணத்தில் வாழ்ந்தனர். அதனால் தாங்கள் விரும்பிய வாறெல்லாம் சட்டங்கள் அமைத்து வாழ்ந்ததோடல்லாமல், புறவினத்தார்களை சகமனிதர்களாகக் கூட மதிக்கவில்லை. இதே மனப்போக்கு நம்மில் பலருக்கு இருக்கலாம். இந்த மனநிலை நிச்சயமாக கடவுளின் ஆவியாரிடமிருந்து வந்ததல்ல. இயேசுவின் படிப்பினையும் அல்ல. இயேசு அனைவரையும் ஏற்றுக்கொண்டார். அன்பு செய்தார். நாமும் அவ்வாறு வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.

அனைவரையும் அன்பு செய்யும் இறைவனின் பேரொளியை முழுமையாக அனுபவிக்க, மகிழ நாம் என்ன செய்ய வேண்டும்? மனம் மாறவேண்டும். "விண்ணரசு நெருங்கி விட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்பதே இயேசுவின் அறைகூவல். மனம் மாற நமக்கு விடுக்ப்படும் அழைப்பு ஏதோ திருவருகைக் காலத்திற்கும், தவக்காலத்திற்கும் மட்டுமல்ல. நம் வாழ்நாள் முழுமைக்கும் நாம் செய்ய வேண்டிய ஒரு செயல். ஒவ்வொரு நொடியும் தவறும் இயல்புடையவர்கள் நாம். எனவே ஒவ்வொரு நொடியும் நாம் மனமாற்றம் பெற்றவர்களாய் வாழ வேண்டும். அப்போது தான் நம் அகக் காரிருள் விலகி இறை பேரொளியில் நம்மால் மகிழ இயலும்.

திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களாகிய நம்மெல்லோருக்கும் கடவுளின் ஒளி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒளியை மறந்து தேவையற்றவையை நம் வாழ்வில் அனுமதித்து இறைஒளியில் நடக்க மறுக்கிறோம். நம் ஆன்மீக வாழ்வை காரிருள் சூழ்ந்து கொள்வதால் உடல் உள்ள ஆன்ம நோய்களால் வாடுகிறோம். இயேசுவின் அழைப்பை ஏற்று மனம் மாறுவோம். தந்தையின் அன்பும் அருளும் நம் அனைவருக்கும் உண்டு என்பதை நம்புவோம். அவ்வாறு செய்யும் போது இறைவனின் பேரொளியில் நம்மாலும் நிச்சயம் மகிழ இயலும். அதற்கான வரத்தை கடவுளிடம் கேட்போம்.

இறைவேண்டல்

பேரோளியே இறைவா! உம்முடைய அன்பு அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து, எங்கள் மெத்தனப்போக்கான பாவ வாழ்வை விட்டு மனம்மாறி, உம் பேரொளியில் நாளும் மகிழ வரம் தாரும். ஆமென்.

Add new comment

11 + 9 =