Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஒளி - பார்த்தலும் பதிலிறுத்தலும் | யேசு கருணா | Sunday Reflection | Epiphany
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா - I. எசாயா 60:1-6; II. எபேசியர் 3:2-3,5-6; III. மத்தேயு 2:1-12
கீழைத்தேய திருஅவைகளின் கிறிஸ்து பிறப்பு விழா என்று சொல்லப்படும் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். 'பிற இனத்தாருக்கு ஒளியாகிய கிறிஸ்துவில் எமது மீட்பின் மறைபொருளை இன்று வெளிப்படுத்தினீர். சாவுக்கு உரிய எங்களது மனிதத்தன்மையில் அவர் தோன்றியபோது அவருக்கு உரிய சாகாத்தன்மையின் மாட்சியால் எங்களைப் புதுப்பித்தீர்' என்று இன்றைய நாளை இறையியலாக்கம் செய்கிறது திருப்பலியின் தொடக்கவுரை.
லூக்கா நற்செய்தியாளரின் பதிவின்படி இடையர்கள் என்னும் யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்திய கிறிஸ்து, இன்று, மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி ஞானியர் என்னும் புறவினத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் சமகாலத்தவருக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 'யூதர்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு. யூதர்கள் மட்டுமே கடவுளால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். யூதர்கள் மட்டுமே தூய்மையானவர்கள். யூதர்களுக்கு மட்டுமே மெசியா' என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில், புறவினத்தாருக்கும் மீட்பு, புறவினத்தாரும் தெரிவுசெய்யப்பட்டவர்கள், புறவினத்தாரும் தூய்மையானவர்கள், அவர்களுக்கும் மெசியா தோன்றுவார் என்று முன்வைக்கப்படும் கருதுகோள் அவ்வளவு ஏற்புடையதாக இருந்திருக்காது. இந்தக் கருதுகோளையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3,5-6) நாம் வாசிக்கின்றோம். யூதர்களுக்கு மட்டுமே மீட்பு என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலத்தில், பவுல் எபேசுநகர் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலில், 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்' என எழுதுகின்றார். இந்த ஒற்றை வரியால்தான் நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம். ஏனெனில், நாம் பிறப்பிலேயே யூதர்கள் அல்லர். ஆக, இன்றைய நாள் நம்முடைய கிறிஸ்து பிறப்பு பெருவிழா.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 60:1-6) எசாயா இறைவாக்கினர் நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் திரும்பி வர அனுமதி பெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்டது இப்பகுதி. இன்றைய வாசகப் பகுதியில், 'எழு! உலகிற்கு ஒளி வீசு!' என்று எருசலேமைத் தூண்டி எழுப்புகிறார் எசாயா. ஏனெனில், 'உன் ஒளி தோன்றியுள்ளது,' 'ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.' ஒளியும் மாட்சியும் ஆண்டவரின் காணக்கூடிய வெளிப்பாடுகள் (காண். எசே 1:4, விப 24:15-17). இவ்வாறாக, இருளடைந்து பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த நகரம் கடவுள் வந்ததால் ஒளிர்கிறது. இவர்கள் அடிமைகளாக்கப்படும் முன் இருந்த ஒளி அடிமைத்தனத்தால் இருண்டு போனது. இப்போது நகரம் ஒளிருமாறு மக்களைக் கவ்வியிருந்த இருளை அகற்றுகிறார் கடவுள். கடவுள் வந்ததை ஒரு பெரிய ஒருங்கிணைவாக முன்வைக்கிறார் எசாயா: (அ) பிற இனத்தார் எருசலேம் நோக்கி வருவர், (ஆ) நாடுகடத்தப்பட்ட, இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர், புதல்வியர் தோளில் தூக்கிவரப்படுவர், (இ) கடலின் திரள் செல்வம், சொத்துக்கள், ஒட்டகத்தின் பெருந்திரள் எருசலேம் வரும், (உ) 'பொன்' (அரசனுக்கு), 'நறுமணப்பொருள்' (கடவுளுக்கு) ஏந்தி வருவர் மக்கள். இவ்வாறாக, கடவுளே அரசனாகவும் இருப்பார் என்பது குறிக்கப்படுகிறது. இக்கடவுள் எருசலேமிற்கு மட்டும் கடவுள் அல்ல. மாறாக, அனைத்து நாடுகளுக்கும் கடவுளாகவும் அரசனாகவும் இருப்பார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 2:1-2) 'ஞானிகள் வருகை' பற்றிப் பேசுகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த வாசகப் பகுதிதான். இவர்கள் ஏன் வர வேண்டும்? இவர்கள் இறையியல் தேவையையும், இலக்கியத் தேவையையும் நிறைவு செய்ய வருகின்றனர். 'இயேசுவை புதிய மோசே' என்ற இறையியலாக்கம் செய்ய விரும்புகிறார் மத்தேயு. ஆக, பாலன் இயேசுவை எகிப்திற்கு அனுப்பினால்தான் அவரை அங்கிருந்து அழைத்து வர முடியும். இப்போது திருக்குடும்பம் இருப்பது பெத்லகேமில். பெத்லகேமில் நடக்கும் இலக்கிய நிகழ்வு எகிப்துக்கு நகர்ந்தால்தான் இறையியல் சாத்தியமாகும். எனவே, குழந்தையை எகிப்திற்கு அனுப்ப வேண்டியதன் இறையியல் மற்றும் இலக்கியத் தேவையை நிறைவு செய்ய வருகின்றனர் 'ஞானிகள்.'
இவர்கள் யார்? இவர்கள் 'ஞானியரோ,' 'அரசர்களோ' அல்லர். இவர்களை, பிரிவினை சபை சகோதரர்களின் விவிலியம், 'சாஸ்திரிகள்' என சரியாக மொழிபெயர்க்கிறது. இவர்கள் வானியல் பண்டிதர்கள். நட்சத்திரங்களையும், அவற்றின் நகர்வுகளையும், பறவைகள் மற்றும் விலங்குக் கூட்டங்களின் இடம் பெயர்தலையும் வைத்த வருங்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான்! ஏனெனில், இவர்கள் அரசர்களாக இருந்திருந்தால், 'நீங்கள் போய்ப் பாருங்கள்' என்று ஏரோது அரசன் இவர்களை அனுப்பியிருக்க மாட்டான். 'நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறுங்கள். நான் காவலாளிகளை அனுப்பி விசாரிக்கிறேன்' என்று இவர்களை அரண்மனையில் அமர்;த்தியிருப்பான். மேலும், இவர்கள் மூன்று பேர் அல்லர். இவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களை வைத்து நாம் 'மூன்று நபர்கள்' வந்ததாகச் சொல்கிறோம். நம் நிகழ்வின்படி அவர்கள் அரண்மனைக்குத்தான் செல்கிறார்கள். ஏனெனில், இத்தகையோரின் சேவை அரசர்கள் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆகவேதான், இவர்கள் அரசனிடம் செல்கிறார்கள். மேலும், இவர்கள் எதையும் மூடி மறைக்காத, அதே நேரத்தில், துணிச்சல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
'அவரது விண்மீன் எழக் கண்டோம்' - இதுதான் அவர்கள் பெற்றிருந்த அடையாளம்.
ஏரோது தன் குள்ளநரித்தனத்தால், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று குழந்தையை வணங்குவேன்' என்று சொல்லி அவர்களை அனுப்பிவைக்கின்றான்.
அந்த நேரத்தில்தான் இரண்டாம் முறை அந்த விண்மீன் தோன்றுகின்றது. அரண்மனையின் உயரமான சுவர்கள் அதை மறைத்ததா? அல்லது ஏரோதின்முன் இவர்கள் மண்டியிட்டதால் விண்மீன் இவர்களுக்கு மறைவாயிருந்ததா? - தெரியவில்லை நமக்கு. ஆனால், 'அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.' மத்தேயு முதல் முறையாக அவர்களின் மகிழ்ச்சி என்ற உணர்வைப் பதிவு செய்கின்றார். வீட்டிற்குள் செல்லும் அவர்கள் குழந்தைக்கு தங்கம் (அரச நிலையின் அடையாளம்), தூபம் (இறை நிலையின் அடையாளம்), வெள்ளைப் போளம் (மனித நிலையின் அடையாளம்) பரிசளிக்கின்றனர். கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், எருசலேம் நகரம் ஒளி வீசுகிறது. அதைக் காணுகின்ற இஸ்ரயேல் மக்களும், புறவினத்து மக்களும் பதிலிறுப்பு செய்கின்றனர். அவர்களது பதிலிறுப்பு திரும்பி வருதலில் இருக்கின்றது.
இரண்டாம் வாசகத்தில், 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த எபேசு நகர மக்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறார்கள். அவர்கள் ஒளிபெற்ற மக்களாக வாழ வேண்டும்' (காண். எபே 5:8). புறவினத்தாருக்கு கிறிஸ்துவின் மீட்பு என்னும் ஒளி வழங்கப்பட, அவர்களும் அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.
நற்செய்தி வாசகத்தில், ஒளியைக் காணுகின்ற கீழ்த்திசை ஞானியர், அந்த ஒளியைப் பின்தொடர்ந்து வந்து, ஒளியாம் கிறிஸ்துவைக் கண்டுகொள்கின்றனர்.
ஒளியைப் பார்த்தலும் பதிலிறுத்தலும் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?
1. இருவகைக் காணுதல்
கீழ்த்திசை ஞானியரின் ஞானம் நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது. ஏன்? அவர்கள் தங்களுக்கு வெளியே இருக்கின்ற விண்மீனின் ஒளியைக் காண்கின்றனர். அதே வேளையில், தங்கள் கனவில் வெளிப்படுத்தப்பட்ட ஒளியைக் கண்டு, வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகின்றனர். ஆக, தங்களுக்கு வெளியே நடப்பது பற்றிய அறிவும், தங்களுக்கு உள்ளே இருக்கின்ற உள்ளுணர்வு பற்றிய அறிவும் அவர்களுக்கு ஒருங்கே அமைந்திருந்தது. இதுதான் ஞானம். பல நேரங்களில் அறிவார்ந்த பலர் தங்களுக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகள் பற்றித் தெளிவாக இருப்பர். ஆனால், அவர்கள் தங்கள் உள்ளங்களில் வீசும் ஒளியைக் கண்டுகொள்ள மறந்துவிடுவர். சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் உள்ளத்தின் ஒளி பற்றி இப்படி எழுதுகிறார்: 'உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில். அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை. காவல் மாடத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகின்றது ... உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்' (சீஞா 37:13-15). இன்றைய திருநாளின் ஞானியர் தங்கள் உள்ளத்தின் அறிவுரையை ஏற்றனர். அதற்கேற்ற பதிலிறுப்பு செய்தனர். இன்று நாம் புறக் காணுதல் மற்றும் அகக் காணுதல் நிலைகளில் எப்படி இருக்கிறோம்?
2. மூவகை பதிலிறுப்புகள்
ஏரோது ஒளியைக் கண்டு அஞ்சுகிறார், எருசலேம் நகரத்தவர் ஒளியைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர், ஞானியர் ஒளியைப் பின்தொடர்கின்றனர். ஒளி அல்லது உண்மை பல நேரங்களில் நமக்கு அச்சத்தை விளைவிக்கலாம். நம்மில் சிலர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மருத்தவரிடம் செல்வதைத் தவிர்ப்போம். ஏனெனில், நம்மிடம் உள்ள நோயை மருத்துவர் கண்டுபிடித்துவிட்டால், அல்லது நம் நோய் பற்றிய உண்மைநிலை நமக்குத் தெரிந்துவிட்டால், அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மக்கள் ஒளியைக் கண்டு அஞ்சுவதை இயேசுவும் நிக்கதேமிடம் சொல்கின்றார்: 'ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர் ... தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்' (காண். யோவா 3:19-21). ஏரோதுவின் அரியணை ஒளியை அவரிடமிருந்து மறைத்தது. எருசலேம் நகர மக்கள் ஒளியைக் கண்டனர். ஆனால், அன்றாட கவலைகளுக்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்ததால் அவர்கள் ஒளியைக் கண்டுகொள்ளவில்லை. தங்கள் வாழ்வின் இன்ப துன்பங்களிலிருந்து எழுந்து பார்க்கவோ, அந்த ஒளியைப் பின்பற்றவோ அவர்களுக்குத் தோன்றவில்லை. சில வேளைகளில் நமக்கும் இதே மனநிலை வரலாம். 'பின்னர் பார்த்துக்கொள்ளலாம்!' என்று தள்ளிப் போடலாம். ஆனால், ஞானியர் உடனடியாகப் பதிலிறுப்பு செய்கின்றனர். ஒளியைப் பின்தொடர்தல் கடினமாக இருந்தாலும் பின் தொடர்கின்றனர். ஏனெனில், அவர்களுடைய பயணம் பெரும்பாலும் இரவில்தான் நடந்திருக்கும்.
3. இரண்டாம் முறை விண்மீன்
நம் பாதையும் பதிலிறுப்பும் தெளிவாக இருந்தால், நாம் தீயவனின் அரண்மனையில் இருந்தாலும் விண்மீன் மீண்டும் தோன்றும். விண்மீன் இரண்டாம் முறை தோன்றுவதைக் கண்ட ஞானியர் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களின் பயணமும் பாதையும் சரியானது என்பது உறுதி செய்யப்பட்டதன் அடையாளமாக அதைக் காண்கின்றனர். நாம் நம் கனவுகள் நோக்கிச் செல்லும்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நம்முடன் சேர்ந்து ஒத்துழைக்கிறது என்ற இரசவாதமும் (காண். பவுலோ கோயலோ, தி ஆல்கெமிஸ்ட்) இதுவே. இன்று நம் இலக்குகள் அல்லது நட்சத்திரங்கள் நோக்கி நாம் வழிநடக்கும்போது இதே அனுபவத்தை நாமும் பெற்றிருக்கலாம். அப்படி இருக்க நம் இலக்குகளை நோக்கி நகர்வதிலிருந்து நாம் பின்வாங்குவது ஏன்?
இறுதியாக,
'அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக. நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக!' எனப் பாடுகின்றார் திபா ஆசிரியர் (காண். 72). நிலவின், கதிரவனின், விண்மீனின் ஒளி உள்ளவரை அதைப் பார்த்தலும், அதற்குப் பதிலிறுத்தலும் தொடரும். பாதையிலும் பாதையின் இறுதியிலும் நம் கண்கள் அவரைக் காணும்.
திருக்காட்சிப் பெருவிழா நல்வாழ்த்துகள்!
Add new comment