Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மண்ணக வாழ்வு விண்ணை நோக்கிய பயணமா! ! குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 31 ஆம் திங்கள் - இறந்த நம்பிக்கையாளர்களின் நினைவு - I. சா.ஞா: 3:9; II. திபா: 27:1,4,7-8,9,13-14; III. உரோ: 5:5-11; IV. யோவான் 6:37-40
ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே. விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பயன் தானே. நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நில வாழ்வு பயன் காண வா" என்று அமைகிறது அழகான கிறிஸ்தவ பாடல் வரிகள்.
இன்று நாம் இறந்த நம்பிக்கையாளர்களின் நினைவைக் கொண்டாடுகிறோம். நம்முடைய திருஅவையின் அனைத்து வழிபாட்டு முறைகளிலும் இறந்த ஆன்மாவிற்காக செபிப்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. நம்முடன் வாழ்ந்து இறந்த நம் அன்பர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்யக்கூடிய ஒரு உன்னதமான தினம் இது. மனிதராகப் படைக்கப்பட்ட நாம் எல்லாருமே இறுதியில் கடவுளைச் சென்று அடைய வேண்டும். ஆனால் மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் மனிதப் பலவீனங்களால் செய்த தவறுகளால் ஆன்மாக்கள் கடவுளை அடைய இயலாத நிலை ஏற்படுகிறது. ஆயினும் இரக்கம் நிறைந்த இறைவன் இறந்த நம்பிக்கையாளர்களின் பிழைகளைப் பொறுத்து மன்னித்து அமைதியை அளிப்பதற்காக மண்ணுலகில் வாழும் நாம் இறைவனிடம் இறைஞ்சும் தருணமே இது.
"ஆண்டவர் உதவாவிட்டாலும் ஆன்மாக்கள் உதவுவார்கள்" என்ற சொல்வழக்கிற் கேற்ப அவர்களும் நமக்காக இறைவேண்டல் செய்கிறார்கள். பரிந்து பேசுகிறார்கள் என்ற நம்பிக்கையையும் திருஅவை நமக்குத் தருகிறது.இவ்வாறு நம்மை விட்டுப் பிரிந்த நம் அன்பர்கள் இவ்வுலகில் நம்மோடு இல்லாவிட்டாலும் அவர்களுக்காக நாம் இறைவேண்டல் செய்யும்போதும் நமக்காக அவர்கள் இறைவேண்டல் செய்யும் போதும் நம்மோடு உறவில் இருக்கிறார்கள் என்பதை உணந்து கொள்ள இன்றைய நாள் நமக்கு அழைப்புவிடுக்கிறது.
அத்தோடு நின்றுவிடாமல் மண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவருடைய வாழ்வையும் சீர்ப்படுத்த நம்மை அழைக்கும் நாளாகவும் இந்நாள் அமைகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் என்னிடம் வரும் எவரையும் நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன் என்று இயேசு கூறும் வார்த்தைகள் நம் அனைவருக்கும் ஆறுதலாய் அமைகிறது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவரையும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வதே தன்னை அனுப்பிய தந்தையின் திருவுளம் என்று இயேசு கூறுகிறார். இவ்வார்த்தைகள் மூலம் கடவுள் தன் பிள்ளைகளில் ஒருவரையேனும் இழக்கத் தயாராக இல்லை என்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறார்.
இச்செய்தியை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக புனித பவுல் நாம் பாவிகளாக இருந்து கடவுளைவிட்டுப் பிரிந்த போதும் கிறிஸ்து தன் உயிரை ஈந்து நம்மை கடவுளோடு ஒப்புரவாக்கியுள்ளார் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். கிறிஸ்துவின் மூலம் கடவுள் நன் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார். நாம் நம் பலவீனங்களால் கடவுளோடு கொண்டுள்ள உறவை சேதப்படுத்தியிருந்தாலும் கிறிஸ்துவின் மூலம் மீண்டும் ஒப்புரவாக்கப்பட்டுள்ளதால் நிச்சயமாக நிலைவாழ்வை அடைவோம் என்பதில் ஐயமில்லை. ஆம் நம் அனைவருக்கும் நிலைவாழ்வு உண்டு.
ஆயினும் பலவீனங்களில் வீழ்ந்த தருணங்களுக்காக புனிதப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த தருணத்தில் தான் இரக்கம் நிறைந்த இறைவன் பொன்னை நெருப்பிலிட்டு புடமிடுவதைப்போல தம் மக்களையும் தம் அன்புத்தீயால் புடமிட்டு சுத்தீகரிக்கிறார்.இப்புடமிடுதல் ஏற்றுக்கொள்ள கடினமானதாக இருந்தாலும், இறுதியில் கடவுளின் ஒளியை பிரதிபலிக்கும் மக்களாக மாற்றுகிறது. இத்தகைய புனிதநிலைக்கு மாறக் காத்திருக்கும் நம் அன்பர்களுடைய ஆன்மாக்களுக்காக கடவுளை வேண்டுவதும், அதற்காக இரக்கச்செயல் செய்வதும் நம்முடைய தலையாய கடமை.
சாவிலிருந்து உலகத்தில் யாரும் தப்பிக்க இயலாது. இறப்பு என்ற ஒன்றை எல்லோரும் சந்தித்தே ஆக வேண்டும். ஒரு மனிதனின் இறப்பு இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றது. நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கை ஒரு கலை. அந்த வாழ்க்கையை ஒரு கலைநயத்தோடு அனுபவித்து வாழ்பவர்கள் ஒருபோதும் சாவை கண்டு அஞ்சுவதில்லை. நம் ஆண்டவர் இயேசு தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னுடைய வாழ்வை ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் அனுபவித்தார். எனவே தான் அவரால் பிறர் நலம்பெற தன்னையே முழுவதுமாக கையளிக்க முடிந்தது. எனவே இன்றைய நாளில் இறப்புக்கு பின் என்ன நடக்கும் என்பதை யோசிப்பதை விட நாம் வாழுகின்ற வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கின்றது என்பதை பற்றி யோசிக்க அழைக்கப்பட்டுள்ளோம். நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கை நிலையற்றது என்பதை எப்பொழுதும் முழுமையாக அறிகின்றோமோ, அப்பொழுது நாம் சாவை கண்டு அஞ்சமாட்டோம். நம் வாழ்வும் பொருளுள்ளதாகவும், பயனுள்ளதாகவும், நன்மை தருவதாகவும், எனவே கிறிஸ்துவுக்கு சான்று பகர்வதாகவும் அமையும்.
நாம் வாழும் இந்த வாழ்க்கையில் இவ்வுலகம் சார்ந்தவை அனைத்தும் நிலையற்றவை என்பதை உணர்ந்து வாழ்கின்ற வாழ்க்கையை சிறப்பான விதத்தில் வாழ்வோம். இவ்வுலகத்தில் நாம் சேர்க்க நினைக்கும் பணம், பட்டம், பதவி நிலையற்றது; மாறாக பிறர் நலமும் மனித நேயமும் தான் நிலையான வாழ்வுக்கு வழிகாட்டும். எனவே வாழுகின்ற வாழ்க்கையை தூய்மையோடு வாழும் பொழுது நாம் இறைவனை நேருக்கு நேராக காண முடியும். நாம் வாழ்கின்ற வாழ்க்கையை பாவம் மோக எண்ணங்களோடும்,
செயல்களோடும் வாழுகின்ற பொழுது, நம் ஆன்மா இறந்த பிறகு இறைவனை அடைவதற்கு அது தடையாக மாறிவிடும்.
எனவே இறந்த நம் அன்பர்களுக்காக இன்று சிறப்பாக இறைவேண்டல் செய்வதோடு நம்முடைய வாழ்வையும் ஆராய்ந்து பார்த்து, விண்ணை நோக்கிய பயணமாக நம் வாழ்வை வாழ முயற்சிப்போம். நம்பிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல பாவ மன்னிப்பையும் இறந்தோரின் உயிர்பையும் மறுஉலக வாழ்வையும் எதிர்நோக்கி நம் வாழ்வு அமையட்டும்.
இறைவேண்டல்
முடிவில்லா வாழ்வு தரும் கடவுளே! என் ஆடுகள் நிலைவாழ்வு பெறும்பொருட்டு நான் உலகிற்கு வந்தேன் என்று கூறி தன்னைக் கையளித்த இயேசுவின் மூலம் பாவிகளான எம்மை உம்மோடு ஒப்புரவாக்கினீர். உம்மீது நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து இறந்த உம் அடியார்களின் பிழைபொறுத்து நிலைவாழ்வைத் தாரும்.மேலும் மண்ணிலே வாழும் நாங்கள் எங்கள் வாழ்வைச் சீரமைத்து விண்ணை நோக்கிப் பயண செய்ய வரம்தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment