Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மனிதமா? சட்டமா? | குழந்தைஇயேசு
பொதுக்காலத்தின் 30 ஆம் வெள்ளி - I. பிலி: 1:1-11; II. திபா 111: 1-2.3-4.5-6; III. லூக்: 14:1-6
சட்டம் என்பது ஒரு மனிதனை மாண்போடு வாழவைக்க வேண்டும். எந்தச் சட்டம் ஒரு மனிதனின் மாண்பை சிதைக்கின்றதோ அது சட்டமே கிடையாது. நம்முடைய இந்திய நாட்டிலே, பல மதவாத சக்திகள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு மனிதர்களிடையே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டை ஏற்படுத்துகின்றனர். இவை மனித மாண்பை சிதைக்கக் கூடியதாக இருக்கின்றது. பிறப்பால் ஒவ்வொரு மனிதரும் மாண்பு மிக்கவர்கள் தான். ஆனால் காலப்போக்கில் இந்தச் சமூகம் கொடுக்கும் அடையாளம் அந்த மனிதரை மாண்பு இல்லாத மனிதராக மாற்றுகின்றது. மனுதர்ம நூலும் ஒரு மனிதரை உயர்ந்தவராகவும், தாழ்ந்தவராகவும் அடையாளம் காட்டுகின்றது. இதுவா உண்மையான கடவுள் காட்டும் மனுதர்ம நீதி? இல்லை.
உண்மையான மனுதர்ம நீதி என்பது எல்லா மனிதரையும் மாண்பு உள்ள மனிதர்களாக மாற்றுவதே. அப்படிப்பட்ட புரிதல் நம் மத்தியில் இருக்கும் பொழுது நாம் சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியும். மனிதத்தையும், மனித நேயத்தையும் வளர்த்தெடுக்கக் கூடிய ஒரு மாற்றுச் சமூகத்தை உருவாக்க முடியும். இன்றைய அரசியல் சட்டங்கள் பல நேரங்களில் மனிதர்களைக் கெடுக்கக் கூடியதாகவும், சுதந்திரத்தைப் பறிக்கக் கூடியதாகவும், மனித மாண்பை இழக்கச் செய்வதாகவும் இருக்கின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, மனிதநேயத்தை வாழ்வாக்கச் சட்டம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்துகின்றார். உளவியல் அறிஞர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு நெறிகளைக் கடைபிடிக்கும் மனிதர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றனர். ஒரு வகையினர் சட்டங்களை கடைப்பிடிக்காதவர்கள். மற்றொரு வகையினர் சட்டங்களை அப்படியே கடைபிடிப்பவர்கள். இந்த இரண்டு வகையினருமே மனித மாண்பை இழக்கச் செய்ய எண்ணற்ற வாய்ப்புகள் உண்டு. சட்டங்களைக் கடைப்பிடிக்காதவர்களால் இச்சமூகத்திற்கு தீங்கு விளைகின்றது. கடைபிடிக்க வேண்டிய ஒரு சில சட்டங்களை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். உதாரணமாக, சாலையில் செல்லும் பொழுது இடதுபுறமாக நடக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் அவ்வாறு நடக்காமல் வலதுபுறமாக நடப்பது தீங்கை விளைவிக்கக் கூடும். மனித மாண்பை இழக்கச் செய்யும் சட்டங்களை எதிர்ப்பதும் நமது கடமை. உதாரணமாக Neet தேர்வு எழுதினால் தான் மருத்துவப் படிப்பைப் படிக்க முடியும் என்றச் சட்டம் மனித மாண்புக்கு எதிரானது. ஏழை எளிய மாணவர்களின் கனவிற்கு எதிரானது என்பதை உணர்ந்து அதை எதிர்க்க வேண்டும். ஆண்டவர் இயேசுவும் தான் வாழ்ந்த அந்த காலத்தில் மழைப்பொழிவின் வழியாக மனிதத்தை மேம்படுத்தும் புதிய திருச்சட்டங்களை வழங்கியுள்ளார்.
இரண்டாவது வகையினர் சட்டங்களை அப்படியே கடைபிடிப்பவர்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள், சட்டங்கள் மனிதர்களுக்காக உண்டாக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ளாமல் சட்டங்களுக்காகத் தான் மனிதர்கள் என்ற கருத்தியலை கொண்டிருப்பவர்கள். அவர்கள்தான் இயேசு காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் ஆவர். யூத சமூகத்தில் தாங்கள்தான் அறிவாளிகள் எல்லாம் தெரிந்தவர்கள் சட்டத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் என்ற ஆணவத்தோடு, தங்களோடு வாழ்ந்த பாமர மக்களை சட்டத்தின் பெயரால் ஒடுக்கினார்கள். மோசே மக்களை ஒழுங்குபடுத்த சட்டங்களைக் கடவுள் வழியாகக் கொடுத்தார். ஆனால் அந்தச் சட்டங்களை இவர்கள் சுயநலத்தோடு கையில் எடுத்து மக்களை ஒடுக்கினர். இத்தகைய நிலையைச் சுட்டிக்காட்டும் விதமாகவே, இன்றைய நற்செய்தி நிகழ்வானது நடக்கின்றது.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஓய்வு நாளில் ஒரு வல்லச்செயலை செய்தார். இயேசுவின் அச்செயல் மனித மாண்பு இல்லாத மனிதர்களுக்கு மாண்பைக் கொடுத்து, புதிய வாழ்வை வழங்கியது. ஆனால் இதைக்கண்ட பரிசேயர்கள் விமர்சனம் செய்தனர். இந்தக் கூட்டத்தினர் ஒரு மாட்டிற்கு கொடுக்கும் மரியாதையைக் கூட மனிதருக்குக் கொடுக்கவில்லை. அவர்களுக்குச் சவுக்கடி கொடுக்கும் பொருட்டே, இயேசு ஓய்வு நாளில் நற்செயலைச் செய்தார்.
நம்முடைய அன்றாட வாழ்விலும், இவ்வுலகம் சார்ந்த சட்டங்களுக்கும் பொருட்களுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து விட்டு, மனித மாண்புக்கும் மனித நேயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் பல நேரங்களில் இருந்து இருக்கின்றோம். இத்தகைய நிலையைக்கண்டு ஆண்டவர் இயேசு நிச்சயமாக கடுமையாகச் சாடுவார். சட்டங்கள் மனிதர்களை ஒழுங்குபடுத்தப் பயன்பட வேண்டுமே தவிர அவர்களை ஒடுக்கக்கூடாது. இத்தகைய நிலையைத் தான் ஆண்டவர் இயேசு கொண்டுவர விரும்பினார். நாம் சட்டங்களை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அச்சட்டங்கள் மனிதனையும், மனித மாண்பையும் சிதைத்தால் நிச்சயமாக எதிர்க்க வேண்டும். ஏனெனில் ஆண்டவர் இயேசு மனித மாண்பை இழக்கச் செய்யும் சட்டங்களை எதிர்த்தார்.
ஒரு ஊரில் ஒரு இளைஞர் ஒருவர் நேர்மையாகப் படித்து வந்தார். அவர் படித்து ஆசிரியர் படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு செல்வந்த இளைஞனும் ஆசிரியர் படிப்பைப் படித்து முதுகலைப் பட்டம் பெற்றார். முதலாவது இளைஞர் நேர்மையாக ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று வேலைக்காகக் காத்திருந்தார். இரண்டாவது இளைஞர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்று வேலைக்காகக் காத்திருந்தார். இந்த நேரத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்த அந்த இளைஞர் தன்னிடமுள்ள செல்வாக்கப் பயன்படுத்திக் குறுக்கு வழியில் வேலையைப் பெற்று விடுகிறார். நேர்மையாகக் காத்திருந்தவருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த அநீதியைப் பார்த்த அந்த முதலாவது இளைஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பு அமையவில்லை. இந்நிலையைக் கண்டு அவர் மனஉளைச்சலுக்கு உள்ளாகி உளவியல் ரீதியான பிரச்சினையில் பாதிக்கப்பட்டார்.
இப்படிப்பட்ட நிலைதான் இன்றைய சமூகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. சட்டங்கள் மனிதனையும், மனிதமாண்பையும், மனித நேயத்தையும் சீர்குலைக்கிறது. இத்தகைய சமூக அநீதி இந்த சமூகத்திலிருந்து ஒழிய இயேசுவைப் போல மனிதநேயப் பாதையில் பயணிக்க வேண்டும். மனித மாண்பையும் மனிதநேயத்தையும் போற்றுவது ஒரு மிகச்சிறந்த ஆன்மீகம். அந்த ஆன்மிகத்தை வாழ்வாக்க இயேசுவின் பாதையில் பயணிப்போம். சட்டங்கள் மனிதர்களுக்காகவே; மனிதர்கள் சட்டங்களுக்காக அல்ல என்ற கருத்தைப் புரிந்து கொள்வோம். அப்பொழுது மனிதம் மதிக்கப்படும்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! சட்டத்தின் பெயராலும், ஒழுங்கு முறைகளின் பெயராலும் பிறரை ஒடுக்காமல் இருக்கவும், மனிதம் மாண்புற உழைக்கவும் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment