ஆண்டவரோடு இணைந்து இருப்பதே வலிமை! | குழந்தைஇயேசு


Jesus - My Strength

பொதுக்காலத்தின் 30 ஆம் வியாழன் - I. எபே: 6:10-20; II. திபா 144:1-2.9-10; III. லூக்: 13:31-35

சகோதர சகோதரிகளே நீங்கள் ஆண்டவரோடு இணைந்து அவர் தரும் வல்லமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள். (எபேசியர் 6:10-20). இன்றைய முதல் வாசகம் நம்மை கடவுளோடு இணைந்து வலிமையுடன் பணிபுரிய நம் அனைவரையும் அழைக்கிறது. 

ஆண்டவருடன் இணைந்து இருப்பதால் நாம் ஆற்றலும் வலிமையும் பெறுகிறோம். அவ்வலிமை எத்தகையது? என்று நாம் ஆராய்ந்து பார்க்கும் போது அவ்வாற்றலும் வலிமையும் உடலை மட்டும் சார்ந்தவை அல்ல. மாறாக உடல், மனம் மற்றும் ஆன்மாவை திடப்படுத்தி ஒன்றிணைத்து ஒரே பாதையில் நம்மை நடத்தக்கூடியவை. சிந்தனையை சீர்ப்படுத்தக்கூடியது. நம் செயல்களை நெறிப்படுத்துகிறது. குழப்பங்களில் சரியான தீர்வுகாண ஞானம் தருவது. கடவுளின் உடனிருப்பை பிறருக்குக் காட்டும் வலிமை அது. சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கும் சக்தியைக் கொடுக்கிறது. துன்பங்களும் துயரங்களும்  சவால்களும் நம்மைச் சூழும் போது அவற்றைக் கண்டு ஓடி ஒழியாமல் துணிந்து சந்திக்க நமக்கு உதவும் ஆற்றல் அது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்குகிறது. அன்றாட வாழ்க்கையை சரியான இலக்குடன் நடத்த நம்மைத் தூண்டுகிறது. அத்தகைய வலிமையை நாம் பெறவேண்டுமானால் அதற்கு ஒரே வழி கடவுளோடு இணைந்து இருப்பதே. 

நான் தந்தையோடும் தந்தை என்னோடும் இணைந்திருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்திருங்கள் என்று இயேசு  நமக்கு அழைப்பு விடுக்கிறார். இயேசு தந்தையோடு இணைந்து இருந்ததால் தான் அவரால் பல வல்ல செயல்கள் செய்ய முடிந்தது. சோதனைகளை எதிர்கொள்ள இயன்றது. நீதிக்குக் குரல் கொடுக்கவும் தவறுகளைச் சுட்டிக் காட்டவும் ஆற்றல் கிடைத்தது. ஆம் தன்னுடைய பல அலுவல்களுக்கு மத்தியிலும் தந்தையுடன் தனிமையில் இணைந்திருந்து தன் பணிவாழ்வுக்குத் தேவையான ஆற்றலையும் வலிமையையும் அவர் பெற்றிருந்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசு தன்னைக் கொல்ல ஏரோது முயற்சிக்கிறான் என்ற செய்தியை அறிந்த பின்னும் சிறிதளவேனும் தளர்ச்சியுறாமல் கலக்கமடையாமல் "நான்  நற்செயல்களை செய்துகொண்டே இருப்பேன். இன்றும் செய்வேன். நாளையும் செய்வேன்" என்ற மனநிலையோடு பதிலளிப்பதை வாசிக்கிறோம். இத்தகைய மனநிலையோடு தான் நாமும் வாழ வேண்டும். இறைவேண்டல், இறைவார்த்தை, நற்செயல்கள் வழியாக ஆண்டவரோடு ஒன்றித்து இருந்தால் வலிமையுடையவர்களாய் நம்மால் வாழ இயலும்.துன்பத்திலும் துணிந்து போராட முடியும். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு(பிலிப்பி 4:13), ஆண்டவராகிய என் தலைவரே எனக்கு வலிமை (அபகூக்கு 3:19), எனக்கு வலுவூட்டும் ஆண்டவராகிய இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறேன் (1 திமோ 1:12) போன்ற இறைவார்த்தைகள் நாம் கடவுளோடு இணைந்திருப்பதே நமக்கு வலிமை என்பதை மிக ஆழமாகத் தெளிவுபடுத்துகிறது. எனவே கடவுளோடு இணைந்து அவர் தருகின்ற வலிமையைப் பெற்று இயேசுவைப் போல துணிவுடன் வாழும் வரத்தை இறைவனிடம் கேட்போம்.

இறைவேண்டல்

வல்லமையுள்ள ஆண்டவரே எங்களுக்கு வலிமை தருபவரே இறைவேண்டல், இறைவார்த்தை, நற்செயல்கள் மூலமாக உம்மோடு இணைந்து இருக்கவும்,நீர் தருகின்ற வலிமையைப் பெற்றுத் துணிவுடன் வாழவும் அருள் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 0 =