Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
விழிப்போடு வாழ்வதா! | குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 29 ஆம் செவ்வாய் - I. எபே: 2: 12-22; II. திபா: 85:8-9,10-11,12-13; III. லூக்: 12:35-38
ஒரு வகுப்பாசியர் தம் மாணவர்களை ஒவ்வொருநாளும் அவர்களுக்குத் தெரியாமலேயே கவனித்துவந்தார். தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வகுப்பில் அமைதிகாத்து ஒழுக்கத்தைக் கடைபிடித்து கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக முடிக்கும் மாணவருக்கு வருடத்தின் இறுதியில் நல்ல பரிசு தர வேண்டும் என்று அவர் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். ஒரு சில மாணவர்கள் அவர் இருக்கும் போதும் இல்லாத போதும் தங்கள் சேட்டைகளை செய்து கொண்டே இருப்பார்கள். இன்னும் ஒருசிலர் ஆசிரியர் அருகிருக்கும் போது ஒரு குணமும் இல்லாத போது ஒரு குணமும் உடையவர்களாய் இருந்தனர். ஆசிரியர் இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டே இருந்தார். ஒருசிலர் அவ்வப்போது சில பாராட்டுகளை வாங்குவது வழக்கம்.
வருட இறுதிநாட்களில் ஒருநாள் ஆசிரியர் தன் வகுப்பிற்கு ஒரு பரிசுடன் வந்தார். ஆச்சரியத்துடன் மாணவர்கள் அப்பரிசு யாருக்கு என்று வினவ, ஆசிரியர் தான் ஏற்கனவே ஒரு நற்பண்புடைய மாணவனுக்கு பரிசு வழங்க திட்டமிட்டதாகவும் அதற்காக மறைவாய் அனைவரையும் கவனித்து வந்ததாகவும் கூறினார். ஒரு சிலமாணவர்கள் தங்களுக்குத் தான் அப்பரிசு என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் யாருமே எதிர்பார்க்காத ஒரு மாணவனின் பெயரை அழைத்தார் ஆசிரியர். அம்மாணவன் எப்போதும் தன் வேலைகளை செவ்வனே செய்து நற்பண்புகளுடன் விழிப்பாகவும் தயாராகவும் இருப்பதாகக் கூறி அப்பரிசினை வழங்க,பிற மாணவர்கள் தங்கள் விழிப்பற்ற நிலை எண்ணி வருந்தினர்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை இன்று விழிப்பாயிருக்க அழைக்கிறார். விழிப்பு என்பது ஒருவித தயார்நிலை. அன்றாட வாழ்வில் நடந்தேறும் நன்மை தீமைகள், சுக துக்கங்கள், சவால்கள், வெற்றிகள் என அனைத்தையும் தகுந்த மனநிலையோடு ஏற்றுக்கொண்டு வாழக்கூடிய ஒரு முதிர்ச்சி நிலை. என்னநேர்ந்தாலும் சமாளித்துவிடும் ஒரு தைரிய மனப்பான்மை. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணமில்லாத மனநிலை. அதையும் தாண்டி செய்கின்ற ஒவ்வொன்றையும் குறையின்றி பழுவின்றி செய்துமுடித்து அதைச் செய்வித்தவருக்கு மகிமை சேர்க்கும் மனப்பக்குவம். இப்படிப்பட்டவர்களாகவே வாழவே நம்மை இன்று இயேசு அழைக்கிறார்.
ஆன்மீக செயல்பாடுகளாய் இருந்தாலும் உலக செயல்பாடுகளாய் இருந்தாலும் நாளைபார்த்துக்கொள்ளலாம் என்ற மெத்தனப்போக்கு நம்மில் மறைய வேண்டும். நம்மை கண்காணிக்க யாருமில்லாது போனாலும் நமது கடமையை உணர்ந்தவர்களாய் உழைக்க வேண்டும். எப்போதும் கடவுளின் கண்கள் நம்மைக் கண்டுகொண்டு இருக்கின்றன. நம் தயார்நிலையைக் கண்டு நம்மைப் பாராட்ட கடவுள் காத்துக்கொண்டிருக்கின்றார் என்ற எண்ணம் நம்மில் எப்போதும் இருக்க வேண்டுமென்று இயேசு நம்மை வலியுறுத்துகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் இயேசு தம் சிலுவைச்சாவின் வழியாக நம் அனைவரையும் ஓரினமாக ஓருடலாக மாற்றியிருக்கிறார். அப்பணியை தொடர்ந்து செய்ய நம்மைப் பணித்திருக்கிறார் என்பதை நாம் வாசிக்கிறோம். எனவே நாம் விழிப்பாயிருந்து செயல்பட்டு பிரிவினைகள் ஏற்றத்தாழ்வுகள் எவையும் நம்மை கிறிஸ்துவின்றும் நம் சகசகோதரத்தினின்றும் பிரிக்காமல் தூய ஆவியால் கட்டப்பட்ட ஆலயமாக வாழ முயலுவோம். எப்போதும் விழிப்பாக தயார்நிலையில் இருந்து இறைவனை நம் வாழ்வில் உணர்ந்து பேறுபெற்றோராவோம்.
இறைவேண்டல்
விழிப்பாயிருக்க எம்மை அழைக்கும் இறைவா! உம் கண்கள் எப்போதும் எம்மைக் காண்கின்றன என்ற உணர்வை எம்மில் ஆழப்படுத்தும். அதனால் நாங்கள் விழிப்புடன் வாழ்ந்து நீர் எமக்குத் தந்த பணிகளை சிறப்புடன் செய்து முடித்து உமது பாராட்டைப் பெறுவோமாக. ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment