கடவுளுக்குரியதை அவருக்கே  கொடுப்போம்! | குழந்தைஇயேசு பாபு


Giving Back

பொதுக்காலத்தின்  29 ஆம் ஞாயிறு - I. எசா: 45:1,4-6; II. திபா: 96:1,3.4-5.7-8.9-10; III. 1 தெச: 1:1-5; IV. மத்: 22:15-21

ஒரு மறைக்கல்வி ஆசிரியர் ஞாயிறு மறைக்கல்வியின் போது மாணவர்களை நோக்கி ஒரு கேள்வி எழுப்பினார். "கடவுள் உங்களுக்கு என்னவெல்லாம் தந்திருக்கிறார்?" என்பது தான் அக்கேள்வி. அதற்கு மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு "நல்ல அப்பா அம்மா தந்திருக்கிறார். உடல் சுகம் தந்திருக்கிறார். வீடு தந்திருக்கிறார். உணவு தந்திருக்கிறார். உறைவிடமும் உடையும் படிக்க நல்ல பள்ளியும் தந்திருக்கிறார். பல திறமைகள் தந்திருக்கிறார்" என  பட்டியலை நீட்டிக்கொண்டே சென்றார்கள். மாணவர்களை அமைதிப்படுத்திய பின் ஆசிரியர் "பதிலுக்கு நீங்கள் என்ன கொடுக்கிறீர்கள்?" என்று கேட்டார். முன்பு இருந்த வேகம் மாணவர்களிடத்தில் இல்லை. இங்கும் அங்குமாக லேசான குரலில் ஒரு சில பதில் மொழிகள் எழுந்தன. ஒரு மாணவன் எழுந்து  மிகவும் வேடிக்கையாக "படிப்பு, வீட்டுப் பாடம், வீட்டில் சொல்லப்படும் வேலைகள் இவற்றையெல்லாம் முடிக்கவே சிரமப்படுகிறோம். இதில் கடவுளைப்பற்றி நினைக்க நேரம் கூட கொடுப்பதில்லை. நாங்கள் பெற்றது எங்களுக்கே பற்றவில்லை. பின் எப்படி கடவுளுக்கு கொடுப்பது? அதெல்லாம் கடவுள் எதையும் எதிர்பார்க்கமாட்டார்" என்று கூறினான். அதைக்கேட்ட ஆசிரியர் புன்னகையுடன் "தம்பி நீ கூறியதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் அத்தனை வேலைகளுக்கு  மத்தியிலும் நண்பர்களுடன் விளையாடவும் தொலைக்காட்சி பார்க்கவும் நீ நேரம் ஒதுக்குவதில்லையா? உலக காரியங்களுக்காக உன் நேரத்தையும், இருத்தலையும், சிந்தையையும் கொடுக்க முடிந்த உனக்கு....எல்லாம் தந்த கடவுளுக்கு இவற்றையெல்லாம் தர மனமில்லையா?" என்று கூற வகுப்பும் முடிந்தது. ஆசிரியர் கூறிய வார்த்தைகளை அசைபோட்டுக்
கொண்டே வீடு சென்றான் அம்மாணவன். 

சீசருக்குரியதை சீசருக்கும் கடவுளுக்குரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்கிறார் இன்றைய நற்செய்தியில் இயேசு. இன்று நம்முடைய வழக்கில் கூறுவோமானால் உலகிற்குரியவற்றை உலகிற்கும் கடவுளுக்குரியவற்றை கடவுளுக்கும் கொடுங்கள் என்று பொருள்படும். கடவுளுக்கு உரியவற்றை கொடுப்பபதற்கு முன்பு நாம் அவருக்கு என்னென்ன கொடுக்கவேண்டும் என்பதைப்பற்றிய முழுமையான அறிவு நம்மிடம் இருப்பது அவசியம்.

"இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!" (இணைச் சட்டம் 6:4-5) அனைத்திலும் முதன்மையான இக்கட்டளை கடவுளை அன்பு செய்வதே அவருக்கு நாம் கொடுக்கவேண்டிய உன்னதமான பரிசு என்பதை சுட்டிக்காட்டுகிறது. கடவுள் நம்மை அன்பு செய்கிறார். மன்னிக்கிறார். தம் ஒரே மகனை நமக்காகத் தந்திருக்கிறார் என்றெல்லாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் நாம் அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் அன்பை கொடுக்கிறோமா என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. 

பலவேளைகளில் மேற்கூறிய நிகழ்வில் கூறப்பட்ட அந்த சிறுவனைப்போலவே நாமும் இருக்கின்றோம்.வீட்டு வேலைகளை எல்லாம் சிறப்பாக முடித்துவிட்டபின் தொலைக்காட்சியில் நாடகங்களை பல மணிநேரம் பார்க்கின்ற இல்லத்தரசிகளுக்கும், நாள் முழுதும் வேலைபார்க்கத் தயங்காத குடும்பத்தலைவர்களுக்கும், புத்தகப் புழுக்களாய் மாறிவிட்ட மாணவர்களுக்கும், ஏன் எந்த வேலையுமின்றி வீணாக நாள் முழுதும் பொழுதைப்போக்கும் பல நபர்களுக்கும் சில மணித்துளிகள்? கடவுளுக்காக  ஒதுக்க  மனமில்லாமலே போய்விடுகிறது. அரசியல் வாதிகள்,விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் போன்றோருக்கு கொடுக்கப்படும் மரியாதையும் அன்பும் கடவுளுக்கும் ஏன் கடவுளை வெளிப்படுத்தும் சகமனிதர்களுக்கும் கொடுக்கப்படுவதில்லை. இன்னும் எத்தனையோ உதாரணங்கள் நம்மால் கூற இயலும்.  இப்படிப்பட்டவர்கள் ஒரு புறமிருக்க, ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்குச் சென்று காணிக்கை போட்டுவிட்டு வந்தால் போதும் என்ற மனநிலை உள்ளவர்கள் நம்மில் எத்தனை பேர்? இதுவா நாம் கடவுளுக்கு செலுத்தும் அன்பு?

இன்றைய முதல் வாசகத்தில் "ஆண்டவர் நானே. என்னைத்தவிர வேறு எவருமில்லை" என எசாய இறைவாக்கினர் வழியாக கடவுள் தன்னை வெளிப்படுத்துவதன் நோக்கம் என்னவென்றால், தன்னை விடுத்து வேற்று தெய்வங்களை வழிபட்ட இஸ்ரயேல் மக்களை மனம் திருப்பி மீண்டும் தன்பால் அவர்களை மீட்பதே. அன்று அவர்கள் வேற்று தெய்வங்களை வணங்கி கடவுளுக்கு கொடுக்கப்பட வேண்டிய தங்களுடைய அன்பையும் புகழ்ச்சிப்பலிகளையும் மரியாதையையும் கீழ்படிதலையும் கொடுத்தார்கள். இன்று நாமோ பணம்,பதவி, ஆசைகள், உலக கேளிக்கைகளுக்கு கடவுளுடைய இடத்தை அளித்து கடவுளுக்கு கொடுக்கப்படவேண்டிய அன்பையும் மரியாதையையும் நம் இருத்தலையும் சிந்தையையும் கொடுத்து? நிறைவடையாமல் வாழ்கிறோம். எனவே நம்மை சுய ஆய்வு செய்வோம். கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருக்கு செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளவற்றை கொடுக்கிறோமா?

இன்றைய பதிலுரைப்பாடல் "மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்கு சாற்றுங்கள்" என்று நம்மை கடவுளுக்குரியவற்றை அவருக்கே கொடுக்க நம்மை அழைக்கிறது. மேலும் இரண்டாம் வாசகத்தில் கூறப்பட்டது போல இயேசுவையே எதிர்நோக்கியுள்ள நம் நம்பிக்கையும் அன்புவழி செயல்பாடுகளையும் கடவுள் முன் ஒப்படைப்போம். நம்முடைய அன்பை ஏற்று கடவுளும் நம்மை நினைவுகூர்வார். பன்மடங்கு ஆசிர்வாதங்களைத் தருவார். அதற்கான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பே இறைவா! எந்தக்குறையும் இன்றி எல்லாவற்றையும் எமக்குத் தருகிறீர். நாங்களோ எம் வாழ்வில் உமக்குத் தர வேண்டிய அன்பையும் மதிப்பையும் உலக மாயைகளுக்குத் தந்து உம்மை மறக்கிறோம். நாங்கள் மனம் மாறி எம் ஒரே கடவுளாகிய உம்மிடம் திரும்பி வந்து உமக்குரியவற்றை உமக்கேதர அருள்புரியும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

11 + 4 =