புதுவாழ்வை வழங்கும் செபமாலை! | குழந்தைஇயேசு பாபு


புனித செபமாலை அன்னை திருவிழா - பொதுக்காலத்தின்  27 ஆம் புதன் - I. திப: 1:12-14; II. லூக்: 1:47-55; III. லூக்: 1:26-38

கத்தோலிக்கத் திருஅவையில் செபமாலை செபிக்கும் பழக்கம் என்பது  ஒரு உன்னதமான பண்பாக இருக்கின்றது. தொடக்ககால கிறிஸ்தவர்கள் தொடக்கத்திலிருந்தே இயேசு கற்றுத் தந்த இறைவேண்டலையும் அன்னை மரியாவை வானதூதர் வாழ்த்திய "அருள் நிறைந்த மரியே" என்ற வாழ்த்து செபத்தை மிகச்சிறந்த உன்னதமான செபமாக பயன்படுத்தி வந்தனர். நம்முடைய திருஅவையில் இன்றைய காலக்கட்டத்தில் நாம் செபிக்கும் செபமாலையானது 1214 ஆம் ஆண்டுதான் வழக்கத்திற்கு வந்தது என்று திருஅவையில்  மரபு வழியாக அறிய முடிகின்றது. செபமாலையானது ஆல்பிஜென்சியன் என்ற தப்பறைக் கொள்கையை எதிர்த்துப் போராடுவதற்காக அன்னை மரியாவால் புனித தோமினிக்கு வழங்கப்பட்டது.

திருஅவையின் மற்றொரு மரபுப்படி மத்திய காலங்களில் துறவிகள் தினந்தோறும் 150 திருப்பாடல்களை செபிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். படிப்பறிவில்லாத சாதாரண பொதுநிலை மக்களுக்கு இது சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது. எனவே துறவிகளைப் போல அவர்களும் செபமாலை செபிக்கும் வகையில் 150 "அருள்நிறைந்த மரியே" செபத்தை எண்ணிக்கையாகக் கொண்ட செபமாலை உருவாக்கப்பட்டது. இவைதான் செபமாலை திருஅவையில் உருவானதற்கு அடிப்படையாக இருந்தன. 

செபமாலை என்பது ஒரு ஆற்றல் வாய்ந்த ஆயுதமாக திருஅவையில் இருக்கின்றது. நம்முடைய திருஅவையில் பல்வேறு புனிதர்கள் செபமாலையின் வல்லமையைக் குறித்து நமக்கு சான்று பகர்ந்துள்ளனர். புனித இரண்டாம் ஜான்பால் "நான் செபித்த செபங்களில் செபமாலை தான் மிகச்சிறந்த செபம்" என்று கூறியுள்ளார். மேலும் தன் வாழ்நாள் முழுவதும் செபமாலை செபித்து தான் புனித வாழ்வு வாழ முயற்சி செய்து உள்ளார். அன்னை மரியின் வழியாக வளர்ந்த புனிதத்தின் வழியாகத்தான்  இன்று திருஅவையில் மிகச்சிறந்த புனிதராக உயர்ந்துள்ளார்.

புனித பெர்நார்டு "என்னுடைய மறையுரையை விட, நான் செபிக்கும் செபமாலையால்தான் பல ஆன்மாக்களை மனமாற்றம் அடைய செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார். கல்லான இதயத்தைகூட கனிவான இதயமாக மாற்றக்கூடிய அளவுக்கு செபமாலைக்கு ஆற்றல் உள்ளது.

நம்முடைய திருஅவையில் அங்கீகாரம் பெற்ற பக்தி முயற்சிகளில் ஒன்றான செபமாலை ஜெபிப்பதன் வழியாக எண்ணற்ற வல்ல செயல்கள் நடந்துள்ளது. எத்தனையோ நபர்கள் செபமாலையை கண்ணீர்விட்டு ஜெபித்து தங்கள் வாழ்வில் வெற்றி அடைந்துள்ளனர் என்பதை ஒருபோதும் மறக்க முடியாது. என்னுடைய வாழ்விலும் அன்னை மரியாள் மிகச்சிறந்த வல்ல செயல்களை செய்துள்ளார். அதற்கு காரணம் என்னுடைய பாட்டியின் செபமாலை செபிக்கும் பழக்கமாகும்.

நான் பிறந்த சமயத்தில் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். மருத்துவர்கள் "இக்குழந்தை பிழைக்காது; இதற்குமேல் கடவுள்தான் கருணை காட்ட வேண்டும்" என்று கூறினார். ஆனால் எனது பாட்டி அன்னை மரியாவின் மீதும் செபமாலை பக்தி முயற்சியின் மீதும்  அதிக பக்தி கொண்டவர். அப்பொழுது அவர் "என்னுடைய பேரனை காப்பாற்றும் தாய்மரியே. என்னுடைய பேரனைக் காப்பாற்றினால் உன் மகன் இயேசுவின் பெயரையே என் பேரனுக்கு சூட்டுக்கின்றேன்" என்று நம்பிக்கையோடு செபமாலையை செபித்தார்.

இறுதியில் மருத்துவரே வியக்கும் அளவுக்கு நான் பிழைத்துக் கொண்டதாக என் பாட்டியும் என் அம்மாவும் அடிக்கடி கூறுவர். எனவே தான் எனக்கு குழந்தை இயேசு என்ற பெயரை சூட்டினர். இவ்வாறாக செபமாலையின் வல்லமை எண்ணற்ற புதுமைகளைச் செய்துள்ளது. நான் குருமடத்தில் படிக்கின்ற பொழுது ஒரு அருள்தந்தை "ஒருவர் நல்ல குருவாக வாழ  வேண்டுமெனில் நாம் திருச்செபமாலையை  ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும்" என்று கூறுவார். அந்த அளவுக்கு செபமாலைக்கு ஆற்றலும் வல்லமையும் உள்ளது.

எனவேதான் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் "திருஅவையில் அங்கீகாரம் பெற்ற பக்தி முயற்சிகளில் செபமாலையைப் போல் இவ்வளவு அதிக அற்புதங்களை வேறு எந்த பக்தி முயற்சியும் நிகழ்த்தவில்லை" என்று கூறியுள்ளார். மேலும் புனித பியோ "செபமாலை நம்முடைய ஆயுதம்" என்றும் கூறியுள்ளார். எனவே செபமாலை செபிப்பது  வழியாக  அன்னை மரியாவின் வழிகாட்டுதலை பெறுவோம். செபமாலை நற்செய்தியின் சுருக்கமாக இருக்கின்றது. இயேசுவின் பிறப்பு முதல் விண்ணேற்பு வரை மறை உண்மையின் வழியாக தியானித்து ஜெபமாலை செபிக்கப்படுகின்றது. எனவேதான் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு "செபமாலை நற்செய்தியின் சுருக்கம்" என சுட்டிக்காட்டுகின்றது.

செபமாலையை நாம் ஒவ்வொரு நாளும் செபிக்கும் பொழுது நம் உள்ளத்தில் அமைதியை பெறுகின்றோம். அன்னை மரியாவின் பரிந்துரையை உணர்கின்றோம். நம்முடைய மனதை ஒருமுகப்படுத்தி தியானிக்கிறோம். இப்பேறுப்பெற்ற செபமாலையை நாம் கொடையாக பெற்றிருப்பது அன்னை மரியா நம்மீது கொண்ட அன்பின் காரணமாகும். செபமாலை செபிப்பதன் வழியாக அன்னை மரியாள் தொடர்ந்து நமக்கு பரிந்துரை செய்து வருகிறார். புது வாழ்வையும் புது மாற்றத்தை நமக்கு வழங்கி வருகின்றார். எனவே இன்றைய நாளில் செபமாலை செபிக்கும் மக்களாக மாறி புதுவாழ்வைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அருளை வேண்டுவோம்.
 

இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் செபமாலையைச் செபிப்பதன் வழியாக அன்னை மரியாவின் மனநிலையில் வாழ்ந்திட தேவையான அருளைத் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

12 + 3 =