அன்னை மரியா இறை உடனிருப்பின் அடையாளம்!


Mother Mary

பொதுக்காலத்தின் 23 ஆம் செவ்வாய் - I. மீக்கா 5:2-5; II. திபா. 13:5,6; III. மத்தேயு 1:1-16,18-23

இன்று தாய் திருஅவை அன்னை மரியாளின் பிறப்புவிழாவைக் கொண்டாடுகிறது. கடவுளின் மீட்புத்திட்டத்தில் தனக்கும் பங்கு இருப்பதை உணர்ந்து இதோ ஆண்டவரின் அடிமை என்று தன்னைத் தாழ்த்தியதால் இறைவனின் தாயாக மட்டுமல்ல உலகத்தின் தாயாக உயர்த்தப்பட்ட அன்னையின் பிறப்பு விழா நமக்கு கூறும் செய்தி என்ன என்பதை ஆழ்ந்து தியானித்தோமானால் "கடவுள் நம்மோடு" என்ற உணர்வை நாம் ஆழமாகப் பெறமுடியும்.   

தந்தையாம் கடவுள் தான் தேர்ந்தெடுத்த இஸ்ரயேல் மக்கள் தன்னைவிட்டு விலகிச்சென்ற போதெல்லாம் அவர்களை தன்பால் மீட்டுக்கொணர பல வழிகளை மேற்கொண்டார். நீதித் தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள் போன்ற பலரையும் அனுப்பி மக்களை மனம் திருப்ப முயற்சி செய்த கடவுள் இறுதியில் மனித உருவம் பூண்டு நம்மில் ஒருவராக மாற முடிவெடுத்தார். அவர் பூமிக்கு மனுஉருவில் வர தேர்ந்தெடுத்த கருவிதான் அன்னை மரியா. கடவுளின் மீட்புத்திட்டத்தில் தனக்கும் பங்குண்டு என்பதை முழுமையாக உணர்ந்து தன்னை உட்படுத்திய மரியா இன்றும் அவருடைய உடனிருப்பை உணர்த்தும் கருவியாக விளங்கி வருகிறார் என்பதில் ஐயமில்லை.

 இயேசுவைத்தாங்கிய முதல் நற்கருணைப் பேழை அவர். தேவையில் இருப்போர் கடவுளின் உடனிருப்பை உணர அவர்களுக்காக பரிந்து பேசுபவராக அன்னை விளங்குகிறார் என்பதற்கு கானாவூர் திருமண விழா நிகழ்வு பெரும் சான்றாக அமைவதை நாம் விவிலியத்தில் வாசிக்கின்றோம். ஏன் தன் ஒரே மகனின் சிலுவைப்பாதையில் இறுதிவரை உடனிருந்து இறைத்திட்டத்தை நிறைவேற்ற கடவுளின் உடனிருப்பை உணர்த்தியவராக திகழ்ந்தார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

அன்னையின் பிறப்பு விழாவை கொண்டாடும் நமக்கு அன்னை வாடுக்கும் அழைப்பு நாமும் கடவுளின் உடனிருப்பை உணர்ந்தவர்களாய் வாழ வேண்டும். பிறரும் நம் வழியாய் அவர் உடனிருப்பை உணர வேண்டும் என்பதே. கடவுளின் உடனிருப்பை உணர நமக்கு தடையாய் இருப்பது என்ன? நம்முடைய பாவ வாழ்வு. அன்னை மரியா தூய்மைக்கு இலக்கணம். கருவில் உருவான நாளிலிருந்தே பாவமறியா தூயவளாய் வாழ்ந்து வந்தார். அவளுடைய பிள்ளைகளாகிய நாமும் பாவ வாழ்வை விலக்கி தூய வாழ்வு வாழ முயன்றோமெனில் கடவுளின் உடனிருப்பை உணர எவ்வித தடையும் இல்லை.

 இன்றைய முதல் வாசத்தில் "நீயோ எப்பிராத்தா எனப்படும் பெத்லகேமே யூதாவின் குடும்பத்தில் நீ சிறியதாய் இருக்கின்றாய். ஆயினும்இஸ்ரயேலை என் சார்பாக  ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்" என வாசிக்கிறோம். கடவுளின் பணியை செய்ய நாம் பெரியவர்களாலும் சிறந்தவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக அவருடைய உடனிருப்பை உணர்ந்து அவருடைய திட்டத்தை எளிய மனதோடும் இறைநம்பிக்கை யோடும் ஏற்றுக்கொண்டாலே போதும் . இதைத்தான் இன்றைய விழா நாயகி அன்னை மரியாள் நமக்கு உணர்த்துகிறார்.

இறைப்பணிக்காக நம்மை அர்ப்பணிக்கும் போது கடவுள் அவருடைய உடனிருப்பை நம் அன்பர்கள் வழியாகத் தந்து கடவுள் உடனுழைப்பார். இன்றைய நற்செய்தியில் கடவுளின் தூதர் கனவில் கூறியதை ஏற்று மரியாளை தன் மனைவியாக ஏற்று இறுதிவரை உடனிருந்த யோசேப்புவின் வாழ்வு இதற்கு சிறந்த சான்று.

அன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாம் அனைவரும் அவரைப்போல தூயவர்களாய் வாழ்ந்து, அவர் திட்டத்திற்கு நம்மை அர்ப்பணித்து கடவுள் என்றும் நம்மோடு என்பதை உலகிற்கு உணர்த்தும் வரம் வேண்டுவோம்.என்றும் அவர் நம்மோடு இருக்கிறார் என்று முழுமையாக நம்புவோம்.

இறைவேண்டல்

அன்னையாய் தந்தையாய் எம்மை அரவணைக்கும் இறைவா! திருஅவையின் தாயாக அன்னை மரியாளைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். அவ்வன்னையின் பிள்ளைகள் நாங்கள் அவரைப் போல உமது உடனிருப்பை உணர்ந்து வாழவும், உம் திட்டத்திற்கு எம்மையே பணிந்து சமர்ப்பிக்கவும் வரம் தாரும். இதனால் "கடவுள் நம்மோடு" என்று பிறருக்கு உணர்த்தும் கருவிகளாக விளங்கிட அன்னையின் வழியாக எங்களை ஆசிர்வதித்தருளும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

12 + 2 =