Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
புதிய இயல்பை அணிந்து கொள்வதா?
பொதுக்காலத்தின் 23 ஆம் திங்கள் - I. 1கொரி 5:1-8; II. திபா 5:4-5,5-6,11; III. லூக்: 6:6-11
நாம் வாழும் இன்றைய சமூகத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் ஒருங்கே இணைந்து வாழ்கின்றனர். ஆனால் தீயவைகளும் தீயோரும் தான் உலகத்தில் பிரபலம் அடைந்தவர்களாக இருக்கின்றனர். நன்மைகள் செய்பவர்களையும் நன்மையையும் உலகம் கண்டு கொள்வதே இல்லை. தீமை செய்பவர்களுக்கு பின்னே தான் பெரிய கூட்டம் இருக்கும். எதிர்ப்புகள் குறைவுதான். அப்படியே எதிர்த்தாலும் எதிர்ப்பவர்கள் நமக்கு ஏன் வம்பு என்று கொஞ்ச காலத்திற்கு பின் அமைதியடைந்து விடுவார்கள். உண்மையுடனும் நேர்மையுடனும் நல்லவராய் வாழ்பவர்களுக்கு இந்த உலகம் தரும் பெயர்"இவன் பிழைக்கத்தெரியாதவன்" என்பது தான்.
முதல் வாசகத்தில் உங்களிடையே பாவம் இருப்பதை அறிந்தும் அதை தட்டிக் கேட்காமல், ஏன் இறுமாப்பு கொண்டவர்களாக இருக்கின்றீர்கள் என்ற ஒரு கேள்வியை புனித பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுப்புகிறார். ஒருவருடைய பாவம் மற்றவரையும் தீய வழிக்குத் தூண்டும் என்ற கருத்தையே அவர் சிறிதளவு புளிப்பு மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிப்பாக்கும் என்ற உவமையின் மூலம் மேற்கோள் காட்டுகிறார். தீமை பரத்தமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல மாறாக நேர்மை உண்மை போன்ற புளிப்பற்ற அப்ப தோடு பாஸ்கா விழாவைக் கொண்டாட வேண்டும் என்று கூறி கிறிஸ்து கொண்டிருந்த நேர்மையையும் உண்மையையும் அவரை பின்பற்றுகின்ற நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை வலிமையாக எடுத்துரைக்கின்றார். அதுதான் நாம் அணிந்துகொள்ள வேண்டிய புதிய இயல்பு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நன்மையே உருவான இயேசு ஓய்வு நாளன்று கை சூம்பியவரை குணமாக்கும் நிகழ்வைக் காண்கிறோம். இந்த நற்செயலுக்காக இயேசு கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். ஓய்வு நாள் விதிகள் மீறியதால் பலருடைய பகைக்கு ஆளாகிறார் இயேசு. பரிசேய மனநிலைக்கு சட்டம் மீறுதல் பெரிய தீமையாய் தெரிந்ததை விட கைசூம்பிய நிலையில் தன் அன்றாட செயல்களை செய்ய இயலாமல் கஷ்டங்களை அனுபவித்த அந்த மனிதன் அடைந்த நன்மையும் தீமையாகவே தெரிந்து விட்டது. ஓய்வு நாள் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனித நாள். அவருக்காக நேரம் ஒதுக்கி அவர் மனம் விரும்பும் புனித காரியங்களை செய்ய ஒதுக்கப்பட்ட நாள். உயிரைக் காப்பது அப்படிப்பட்ட புனித செயல்களில் ஒன்று என்பதை முற்றிலும் உணர்ந்த இயேசு தைரியமாக "ஓய்வு நாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எது முறை?" என்ற கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்.
தனிப்பட்ட வாழ்வில் ஒருவன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. மற்றவர் முன் சட்டங்களையும் விதிகளையும் கடைபிடித்தே ஆகவேண்டும். ஒருவருக்கு நன்மையே தருமாயினும் அச்சட்டங்களை மீறக்கூடாது என்ற பழைய சித்தாந்தத்தில் ஊறிக்கிடந்த பரிசேயருக்கும் மறைநூல் அறிஞருக்கும் இயேசுவின் இந்தக் கேள்விகள் சாட்டையடியாகவே இருந்தது. நன்மைகள் செய்வதால் தனியே விடப்படுவேன் என்று இயேசு அஞ்சவில்லை. பரிசேய மறைநூல் அறிஞரின் தீய மனதை கடிந்து கொள்ளவும் தயங்கவில்லை.
இன்றைய வழிபாடு நமக்குத்தரும் செய்தியோடு நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்க நாமும் அழைக்கப்படுகின்றோம். தீமைகள் செய்யும் போது அதைக்குறித்து பெருமை கொள்ளாத நெஞ்சம் நம்மிடம் உள்ளதா என சோதிப்போம்.நன்மை செய்யும் எல்லா நாளும் கடவுளுக்குரிய புனித நாள் என்பதை உணர்ந்து உயிர்காக்கும் நன்மையான காரியங்கள் செய்ய துணிவோம். அதனால் நாம் தனித்து விடப்பட்டாலும் இயேசுவைப் போல துணிவுடன் இருப்போம். பிறர் வம்பு நமக்கெதற்கு என்றுகூறிக்கொண்டு தீமையை எதிர்க்காமலும், அதே வேளையில் தேவையில் இருப்பவர்க்கு நன்மை செய்யாமலும் இருக்கின்ற பழைய உலகப்போக்கை களைந்து இயேசுவின் நன்மைத்தனங்களை புதிய இயல்பாக அணிந்து கொள்வோம். இறைவனிடம் அதற்கான அருள் வேண்டுவோம்.
இறைவேண்டல்
நன்மையின் உற்றே இறைவா நல்லவராய் இருந்தால் தனியே விடப்படுவோம் என்ற அச்சத்தில் நல்லதை செய்ய மறந்து விடுகிறோம். தீமைக்கு துணை போகிறோம். எங்களின் இந்த பழைய இயல்பை களைந்து இயேசுவின் நேர்மையும் உண்மையையும் உயிர்காகக்கும் செயல்களைச் செய்யும் மனநிலையையும் புதிய இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழும் வரம் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment