Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
எது என் இலக்கு!
இன்றைய வாசகங்கள் (31.08.2020) - பொதுக்காலத்தின் 22 ஆம் திங்கள் - I. 1கொரி. 2:1-5; II. திபா. 119:97-98,99-100,101-102; III. லூக். 4:16-30
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த தன் மகளிடம் தந்தையானவர் உரையாடிக்கொண்டிருந்தார். நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்காக மகளை பாராட்டிய தந்தை மேற்கொண்டு தன் மகளின் விருப்பம் என்னவென்று கேட்டார். அப்போது தனக்கு சமூக பணி செய்வதே விருப்பம் என்று கூறினார். மேலும் சிறந்த சமூக ஆர்வலராகி சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர், பின்தங்கியோருக்காக உழைக்க வேண்டும் என்று கூறிய அவர், ஆனால் தன்னுடைய நண்பர்கள் பலரும் இதை செய்யாதே என்று தன் மனதை மாற்ற முயற்சி செய்வதாகவும் அதனால் தான் சற்று குழப்பமாக இருப்பதாகவும் கூறினார். உடனே தந்தையானவர் "உன் இலக்கு உனக்குத் தெளிவாகத் தெரிந்தால் போதும். மற்றவருடைய வார்த்தைகளைக் கேட்டு குழம்பாதே. உன் இலட்சியத்தில் உறுதியாக நில்" என்று தன் மகளைத் திடப்படுத்தினார்.
மனிதராக பிறந்த ஒவ்வொருவருடைய வாழ்வுக்கும் இலக்கு என்பது இன்றியமையாத ஒன்று. இலட்சியம் இல்லா வாழ்க்கைப் பயணம் வீணானதே. தன் வாழ்க்கையின் நோக்கம் அறியாமல் வாழ்வதால் எந்த பயனும் இல்லை. ஆனால் "வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்" என்ற மனநிலையில்தான் இன்று பலருடைய வாழ்க்கை நகருவதை நாம் காண்கிறோம். பல சமயங்களில் இலக்கை மட்டும் உருவாக்கிக்கொண்டு அதற்காக உழைக்காமல் இருந்துவிடுகிறோம். அப்படியே உழைத்தாலும் பாதியில் நின்று விடுகிறோம். பலவீனங்களுக்கும், பிறர் கூறும் விமர்சனங்ளுக்கும் இடம் கொடுத்து இலட்சியத்துக்கு நாமே முட்டுக்கட்டை போட்டுவிடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தான் எதற்காக உலகிற்கு வந்தார் என்பதை இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளின் மூலமாக ஜெபக்கூடத்தில் எடுத்துக்கூறுவதை நாம் காண்கிறோம். தான் இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கத்தை மிகத்தெளிவாக அறிந்திருந்தார் இயேசு. தன்னுடைய இலக்கை கண்முன் கொண்டிருந்தார். அவருடைய சிந்தனை சொல் செயல் அனைத்தும் அதை நோக்கியே அமைந்திருந்தன. தன்னுடைய இலக்கினை குறித்து அவர் வெட்கப்படவில்லை. அதை மற்றவர் முன் எடுத்தரைக்கவும் அவர் தயங்கவில்லை. அவர் சொன்னதைச் செய்தார். அவர் செய்ததையே போதித்தார். ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் கடவுளின் இரக்கத்தை அறிவித்தார். அதனால் ஏற்பட்ட சவால்களை துணிவுடன் எதிர்கோண்டார். பிறருடைய விமர்சனங்களையும் குற்றப் பேசச்சுக்களையும் அவர் கண்டுகொள்ள வில்லை.
இயேசுவின் இந்த இலக்கு நோக்கிய வாழ்வு நமக்கு கூறும் செய்தி என்ன?
தெளிவான பார்வையோடு நம் வாழ்வின் இலக்கை நிர்ணயித்து, எத்தனை தடைகள் வந்தாலும் அதை அடைய முழு மூச்சுடன் உழைக்க வேண்டும் என்பதேயாகும். இலக்கை அடைவது ஏதோ திரைப்படத்தில் நாம் காண்பது போல ஒரே பாடலில் நடந்து விடாது. ஒவ்வொரு நாளும் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் இலட்சியத்தை அடைவதற்கு படிக்கட்டுகளாய் அமைய வேண்டும்.
திருத்தூதராகிய பவுலின் வாழ்வும் இதையே நமக்கு சுட்டிக்காட்டுகிறது. இயேசுவை சந்தித்த பின் தன் வாழ்வின் இலக்கினை முழுமையாக அவர் அறிந்திருந்தார். எனவே தான் "சிலுவையில் அறையப்பட்ட மெசியாவைத்தவிர வேறு எதையும் அறிய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை" என்று ஆணித்தனமாக கூறி அவரைப் போதிப்பதே தன் தலையாய நோக்கம் என்பதை விளக்குகிறார். தான் வலுவற்றவன், அச்சமிகுந்தவன் ஆயினும் கடவுளின் வல்லமையாலும் தூய ஆவியாலும் தொடர்ந்து என் பணியை செய்வேன் என உறுதியுடன் பயணிக்கிறார்.
நாம் அனைவரும் படைக்கப்பட்டதன் நோக்கமே கடவுளை அறியவும் அவரை அன்பு செய்யவும் இறுதியில் அவரை அடைவதுமே ஆகும். எனவே நமது கிறிஸ்தவ இலக்கினை கண்முன் கொண்டு நம் வாழ்வுப்பாதையை இறைவழியில் அமைப்போம்.
நம்முடைய பலவீனங்களும் பிறருடைய விமர்சனங்களும் நம்மை கட்டிப்போடலாம். இயேசுவைப்போல, அவரை தன் வாழ்வால் போதிதத்த பவுலைப் போல தூயஆவியின் வல்லமையுடன் தொடர்ந்து பயணிப்போம்.இலட்சியப் பயணத்தின் போது நம்முடன் நடப்பவர்களுக்கும் இயேவைப்போல அன்பையும் இரக்கத்தையும் காட்டுவோம்.
இறைவேண்டல்
காரணத்தாடு எம்மைப் படைத்தவரே இறைவா! வாழ்வின் இலக்கினை நிர்ணயிக்காமலும்,அப்படியே நிர்ணயித்தாலும் அதை அடைய உழைக்காமலும் எங்கள் நாட்களை கழித்துக்கொண்டிருக்கிறோம். எங்களின் இந்த மெத்தனப்போக்கை மாற்றி,தெளிவான பார்வையுடன் எங்கள் இலக்கை நிர்ணயித்து அதை அடைய அனுதினமும் தளராது உழைக்க உமது தூய ஆவியின் வல்லமையைத் தாரும் ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment