Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தூய இறைவனின் பிள்ளைகளா நாம்! | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு
இன்றைய வாசகங்கள் (25.08.2020) - பொதுக்காலத்தின் 21 ஆம் செவ்வாய் - I. 2 தெச: 2:1-3,14-17; II. தி.பா. 96:11-12a,12b - 13; III. மத். 23:23-26
''இயேசு, 'வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள்' என்றார்'' (மத்தேயு 23:25). இயேசுவின் இந்த வார்த்தைகள் அகத்தூய்மை உள்ளவர்களாக வாழ அழைப்பு விடுக்கின்றன. நான் ஒரு ஊரில் களப்பணி செய்து கொண்டிருந்த பொழுது அங்கு ஒரு குடும்பத்தைக் காணமுடிந்தது. அந்தக் குடும்பம் மற்ற எல்லா குடும்பங்களும் வியந்து பார்க்கும் அளவிற்கு ஆன்மீகத்திலும் பொருளாதாரத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கியது. ஆனால் ஒரு காலத்தில் இந்த குடும்பம் மிகவும் கடினப்பட்ட குடும்பமாக இருந்தது. அந்த குடும்பத்தை பார்த்து எனக்கும் வியப்பாக இருந்தது. அப்பொழுது நான் குடும்ப தலைவரிடம் "எவ்வாறு உங்கள் குடும்பத்தினரால் மற்றவர்களுக்கு முன்மாதிரியான மனிதர்களாக வாழ முடிகின்றது" என்று கேட்டேன்.
அதற்கு அந்த குடும்பத்தின் தலைவர் "நாங்கள் ஒவ்வொரு நாளும் இறைவேண்டலில் நிலைத்திருப்போம். திருக்குடும்பப் பக்தி மாலையை செபிக்காமல் தூங்க மாட்டோம். ஒவ்வொருநாளும் தூங்குவதற்கு முன்பாக எங்களையே சுய ஆய்வு செய்வோம். நல்லது செய்திருந்தால் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். தீயது செய்திருந்தால் கடவுளிடம் மன்னிப்பு கேட்போம். மாதம் ஒருமுறை ஒப்புரவு அருள்சாதனத்தை நாங்கள் பெறுவோம். இதன் வழியாகத்தான் கடவுளின் அருளை நிறைவாகப் பெற்று எங்கள் குடும்பம் இவ்வளவு உயர்வதற்கு அடிப்படையாக இருந்தது. நமது உள்ளம் தூய்மையாக இருக்கும் பொழுது நம் சிந்தனையை தூய்மையாக இருக்கும். நம் சிந்தனை தூய்மையாக இருக்கும் பொழுது நம் செயல்பாடுகள் தூய்மையாக இருக்கும். நம் செயல்பாடுகள் தூய்மையாக இருக்கும் பொழுது நாம் வாழ்வு இயேசுவின் நற்செய்தியை மதிப்பீட்டிற்கு சான்று பகரும்" என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அதுமுதல் ஒப்புரவு அருட்சாதனத்தின் மேன்மையை என்னால் உணர முடிந்தது. ஒவ்வொரு நாளும் சுய ஆய்வு செய்யும் பொழுது நம்முடைய வாழ்வு கடவுளுக்கு ஏற்ற வாழ்வாக மாறுகிறது. அப்பொழுது நம் வாழ்வு கடவுளுக்கு முன்பாக வெளிவேடமற்ற வாழ்வாக இருக்கும்.
இப்படிப்பட்ட வெளிவேடமற்ற வாழ்வை வாழத்தான் நம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி வழியாக அழைப்பு விடுக்கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் மிகவும் கடுமையாகச் சாடுவதை நாம் அறிய முடிகின்றது. இயேசு அவர்களை வெளிவேடக்காரர்கள் என்று அழைக்கின்றார். வெளிவேடம் என்பது நம் வாழ்வுக்கும் நம் சிந்தனைக்கு முரண்பாடான வாழ்வாகும். நம் உள்ளத்தில் தீய எண்ணங்களையும் வஞ்சனைகளையும் வைத்துக்கொண்டு வெளியில் நல்லவர்களைப் போல வாழ்வது வெளிவேடமாகும். மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களைப் பொறுத்தவரை வெளித்தோற்றத்தில் நேர்மையாளர்களாகவும் இறைப்பற்று மிகுந்தவர்களாகவும் வாழ்ந்து வந்தனர். ஆனால் உட்புறத்தில் சுயநலம் மிக்கவர்களாகவும் இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் தாங்கள் தான் இவ்வுலகில் தூய்மையானவர்கள் கருதியவர்களாகவும் வாழ்ந்து வந்தனர். பல்வேறு போதனைகள் வழியாகவும் வல்லச்செயல்கள் வழியாகவும் இறையாட்சியின் மதிப்பீட்டை மக்களுக்கு கொடுத்து அவர்கள் மீட்புப் பெற வழிகாட்டிய ஆண்டவர் இயேசுவை விமர்சிக்கும் மனிதர்களாக மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இருந்தனர்.
இதற்குக் காரணம் அவர்களை நல்லவர்களாகக் காட்டி இயேசுவை விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பதேயாகும். எனவேதான் நம் ஆண்டவர் இயேசு மக்களுக்கு நல்லதும் செய்யாமல் பிறரை நல்லதும் செய்யவிடாமல் சுயநலத்தோடு மக்களை பயன்படுத்திய மறைநூல் அறிஞரையும் பரிசேயரையும் கடுமையாகச் சாடுகின்றார். நேற்றைய நாள் விழாவிலே திருத்தூதரான புனித பர்த்தலமேயு என்ற நத்தனியேலை நம் ஆண்டவராகிய இயேசு "கபடற்றவர்" என்று பாராட்டியதை வாசித்தோம். கபடற்ற தன்மைக்கு நேர் எதிரானதுதான் வெளிவேடம்.
எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே தூய்மை உள்ளவர்களாக வாழ்ந்து இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர அழைக்கப்படுகின்றோம். இயேசு நற்செய்தியில் கொசு மற்றும் ஒட்டகத்தை மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயரோடு இணைத்து வேடிக்கையாக பேசுகிறார். யூதச் சட்டபடி ஒட்டகத்தின் இறைச்சியானது ஒரு தீட்டானதாகக் கருதப்பட்டது. அதை உண்ணக் கூடாது என்ற சட்டமும் இருந்தது. (லேவி : 11: 4). அதேபோல திராட்சை இரசத்தை பருகும் பொழுது அதில் பூச்சி விழுந்திருந்தால் அவற்றின் தீட்டுக் காரணமாகச் சட்டத்தை மீற நேரிடும் என்பதால் பானத்தை வடிகட்டும் பழக்கம் இருந்தது (லேவி : 11:41). சின்னஞ்சிறிய பூச்சியான கொசு தீட்டு என்பதால் அதை கவனமுடன் விழுங்காமல் இருக்க வடிகட்டிய மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தீட்டான விலங்குகளிலேயே மிகப்பெரிய விளங்கிய ஒட்டகத்தை விழுங்குவதில் கவனக்குறைவாக இருப்பதை பார்த்து இயேசு விமர்சிக்கிறார்.
நம்முடைய அன்றாட வாழ்விலும் மேலோட்டமான காரியங்களில் நல்லவர்களாகக் காட்டிக்கொண்டு அகத்தூய்மையோடு வாழ நாம் பெரும்பாலும் தவறி விடுகின்றோம். நாம் அகத்தூய்மையின்றி கடவுளின் அருளையும் இரக்கத்தையும் அன்பையும் முழுமையாக சுவைக்க முடியாது. ஏனெனில் நம்மை படைத்த இறை தந்தை தூய்மை உள்ளவராக இருக்கிறார். அவரைப்போல நாமும் தூய்மை உள்ளவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இதற்காகவே இன்றைய நற்செய்தி வழியாகவும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அழைப்பு விடுக்கிறார். மேலும் நம்முடைய விண்ணகத் தந்தையைப் போல அகத்தூய்மையின் வழியாகநிறை உள்ளவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். "உங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்" (மத்: 5:48) இந்த இறைவசனம் வெளிவேடத்தை கடந்து அகத்தூய்மையின் வழியாக நிறைவுள்ளவர்களாக வாழ அழைப்பு விடுக்கின்றது.
"புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்" (298).
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும் என்ற குறள் நம்முடைய வாய்மையால் தான் அகத்தூய்மை வருமென திருவள்ளுவர் கூறுகிறார். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே நம்முடைய சிந்தனை சொல் செயல் அனைத்தையுமே தூய்மையோடு வாழ்வதற்கு பயன்படுத்தும்பொழுது நம் வாழ்வு இயேசு விரும்பிய வாழ்வாக மாறும். அப்பொழுது கடவுளின் தூய பிள்ளைகளாக உருமாற முடியும். கடவுளின் ஆசீரையும் அருளையும் நிறைவாக பெறமுடியும். அதற்கு தேவையான அருளை இறைவேண்டல் செய்வோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் எங்கள் வாழ்விலே அகத்தூய்மை உள்ளவர்களாக வாழ்ந்து நிறைவுள்ள இறைத்தந்தையின் பிள்ளைகளாக மாற உமது அருளை தாரும். நாங்கள் தூய்மையுள்ளவர்களாக வாழ தடையாக உள்ள இவ்வுலகம் சார்ந்த மாய கவர்ச்சிகளை விட்டொழித்து நீதி நேர்மை உண்மையின் பாதையில் வழிநடந்து தூய்மை வாழ்வுக்கு சான்று பகர அருள்தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment