Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இல்லறத்தில் இனிமை | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு
இன்றைய வாசகங்கள் (14.08.2020) - பொதுக்காலத்தின் 19 ஆம் வெள்ளி - I. எசே. 16:59-63; II. எசா. 12:2-3,4-6; III. மத். 19:3-12
நான் ஒரு ஊரிலேயே களப்பணி செய்து கொண்டிருந்த பொழுது ஒரு வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் மிகுந்த ஒற்றுமையோடு வாழ்ந்தனர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தனர். வயதான தம்பதியர் போல் அல்லாமல் புதிய தம்பதியர் போல மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். நான் ஒருமுறை அவர்கள் வீட்டை சந்திக்க நேர்ந்தது. அப்போது பேசிக்கொண்டிருந்த பொழுது ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர். அவர்களோடு பேசிய பொழுது ஒரு எதிர்மறை கருத்துக்களை கூட பகிர்ந்து கொள்ளவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் நேர்மையான மனநிலையோடு ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்தனர். அவர்களைப் பார்க்கும் பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பொழுது அவர்களிடம் நான் " திருமணமாகி இவ்வளவு ஆண்டுகளாகியும் உங்களால் எவ்வாறு இந்த அளவுக்கு அன்போடும் புரிதலோடும் மகிழ்வோடும் இருக்க முடிகிறது " என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "திருமண உடன்படிக்கையின் பொழுது நாங்கள் கொடுத்த வாக்குறுதியை ஒவ்வொரு நாளும் கடைபிடித்து வருகிறோம் .இதுதான் நாங்கள் மகிழ்வோடு இருப்பதற்கு காரணம். "என்று கூறினார்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்வு ஒரு மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக இல்லாமல் பிரச்சனை நிறைந்த வாழ்வாக இருக்கின்றது. இதற்கு காரணம் திருமண உடன்படிக்கையின் பொழுது நாம் கொடுத்த வாக்குறுதியை மறப்பதே ஆகும். அந்த வயதான தம்பதியர் திருமண வாக்குறுதியை ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்து வந்ததால் அவர்கள் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இப்படிப்பட்ட நிறைவான வாழ்க்கை வாழ தான் திருமணம் என்ற அருள் சாதனத்தின் வழியாக வாழ கடவுள் நம்மை அழைப்பு விடுகிறார்.
இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு திருமண வாழ்வின் மேன்மையை சுட்டிக்காட்டுகிறார். "கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" (மத்தேயு 19:3-12) என்ற இறைவசனம் திருமண வாழ்வு என்பது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உன்னதமான கொடையாக கருதப்படுகிறது. இல்லற வாழ்வு என்பது பாவம் வாழ்வு அல்ல; மாறாக, அதன் புனிதத் தன்மையை திருமண உடன்படிக்கையை மீறுதல் வழியாக இழக்கும் பொழுது அது பாவமாக மாறுகிறது. உதாரணமாக, கடவுள் நமக்கு கொடுத்த மனைவியோடு பிரமாணிக்கமாய் வாழ்வது புனிதமாகும். தனது மனைவியை விட்டுவிட்டு பிறர் மனைவியை தேடிச் செல்வது பாவமாகும். இல்லற வாழ்வில் வாழக்கூடிய ஒவ்வொருவரும் திருமண உடன்படிக்கைக்கு பிரமாணிக்கமாய் இருக்க அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு வாழும் பொழுது திருமணமான தம்பதியர் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஒற்றுமையோடு வாழ முடியும்.
திருமண வாழ்வில் ஒன்றிப்பு இருக்கவேண்டும் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். "இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்" என்ற வசனம் கணவரும் மனைவியும் ஒரே உடலாக ஒரே மனதோடு ஒரே சிந்தனையோடு வாழ்வில் பயணிக்க அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் ஒரே உடலைப் போல வாழும் பொழுது நிச்சயமாக இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் உடனிருக்க முடியும். இதைத்தான் நம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி வழியாக அழைப்பு விடுக்கிறார். திருமணம் என்ற அருள்சாதனம் வழியாக குடும்பமாக இணைந்துள்ள தம்பதியர் தங்களை ஒரே உடலாய் நினைத்து இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருக்கும் பொழுது நிச்சயமாக வாழ்வில் இனிமை காண முடியும்.
குடும்ப வாழ்வின் வழியாகத்தான் குட்டி திருச்சபையானது பிறக்கின்றது. அந்த குட்டி திருச்சபை தான் மிகப்பெரிய திரு அவையாக உருமாறுகிறது. ஆனால் இன்றைய திருஅவையில் ஒரு சில குழப்பங்கள் இருப்பதற்கு காரணம் குட்டி திருச்சபை இன்னும் ஆழமாக வலுப்பெறாமையே ஆகும். எனவே கடவுள் கொடையாகக் கொடுத்த இந்த குடும்ப வாழ்வை முழு அர்ப்பணிப்போடு வாழ்ந்து இவ்வாழ்வில் நிறைவு காண முயற்சி செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். எனவே இல்லற வாழ்வில் இனிமை காண தடையாய் உள்ள சுயநலம், போட்டி, பொறாமை, ஆணவம், விட்டுக் கொடுக்காமை போன்ற மனநிலை மாறி அன்போடும் ஒற்றுமையோடும் மகிழ்வோடும் தியாகத்தோடும் வாழ அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கு தேவையான அருளை தொடர்ந்து இல்லற வாழ்வு வாழுகின்ற அனைவரும் பெற்றுக்கொள்ள இறைவேண்டல் செய்வோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா ! நாங்கள் எங்களுடைய வாழ்விலே திருமணம் என்னும் அருள் சாதனத்தின் வழியாக திருஅவையை கட்டியெழுப்ப வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி செலுத்துகின்றோம். குடும்ப வாழ்வில் இணைந்துள்ள தம்பதியர் அனைவர் வாழ்விலும் அன்பும் ஒற்றுமையும் புரிதலும் அர்ப்பணமும் இருக்க உமது அருளைத் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment