Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
புனிதப் பாதையா! | குழந்தைஇயேசு பாபு
இன்றைய வாசகங்கள் (04.08.2020) - பொதுக்காலத்தின் 18 ஆம் செவ்வாய் - புனித ஜான் மரிய வியான்னி திருவிழா - I. எரே. 30:1-2,12-15,18-22; II. திபா. 102:15-17,18-20,21-22; III. மத். 15:1-2,10-14
இவ்வுலகில் நன்மதிப்பையும் சமத்துவத்தையும் மக்கள் பெற்றுக் கொள்வதற்கு அதை உறுதி செய்வதற்கு உதவுவதே சட்டங்களாகும். சட்டங்கள் மனித மாண்பையும் மனிதநேயத்தையும் தூக்கி பிடிக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் சட்டங்கள் மனிதனை மனித மாண்பு இழந்தவர்களாக மாற்றி அடிமைப்படுத்துகின்றன. இத்தகைய நிலை மாற வேண்டும் என்ற சிந்தனையை இன்றைய நற்செய்தியின் வழியாக நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்ட விரும்புகின்றார்.
பரிசேயரும் மறைநூல் அறிஞரும் சீடர்கள் மூதாதையரின் மரபை மீறுவதாக குற்றம் சுமத்தினர். " உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்தும்முன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே " (மத்: 15: 2) என்று பரிசேயரும் மறைநூல் அறிஞரும் குற்றம் சுமத்தியது மோசேயின் சட்டத்தை தூக்கி பிடிப்பதாக தங்களைக் காட்டிக்கொள்ள விரும்பியதைச் சுட்டிக்காட்டுகின்றது.
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களின் குற்றச்சாட்டை விமர்சனத்திற்கு உட்படுத்தினார். இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து, "நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள். வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளியே வருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும் " (மத் : 15: 17-18) எனக் கூறினார். உண்மையான தூய்மை என்பது வெளிப்புறத்தில் அல்ல; மாறாக உட்புறத்தில் உள்ளது என்ற சிந்தனையை ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
இன்றைய நற்செய்தி வெறும் சட்டங்களை மட்டும் கடைப்பிடித்து விட்டு கடவுளின் கட்டளைகளை மீறுவோருக்கு பெரும் சாட்டையடியாக இருக்கின்றது. பரிசேயரும் மறைநூல் அறிஞரும் மோசே கூறிய சட்டத்தை மேலோட்டமாக கூறி ஆதாயம் பார்ப்பவர்களாக இருந்தனர். ஆனால் கடவுள் மோசே வழியாக கொடுத்த கட்டளையை மீறுபவர்களாக இருந்தனர். தங்களுக்கு எது வசதியாக இருந்ததோ அவற்றை மட்டும் கடைப்பிடித்தவர்கள் தான் இந்த பரிசேயரும் மறைநூல் அறிஞரும் ஆவர்.
கை கழுவி உண்பது என்பது நல்ல பழக்கம். ஆனால் சட்டத்தின் பெயரால் மற்றவர்களை கட்டாயப்படுத்தி குற்றம் சுமத்துவது தவறாகும். இத்தகைய தவற்றை செய்தவர்கள் தான் பரிசேயரும் மறைநூல் அறிஞரும். அவர்கள் இயேசுவிடம் இவ்வாறு சொன்னது தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும் . சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த பரிசேயரும் மறைநூல் அறிஞரும் கடவுளின் கட்டளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கடவுள் தந்த கட்டளையை ஆய்வு செய்து பார்த்தோமென்றால் இறை நம்பிக்கை, பிறர் அன்பு, இரக்கம் ,மன்னிப்பு போன்ற வாழ்வியல் மதிப்பீடுகளை அறியமுடிகிறது. ஆனால் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இந்த வாழ்வின் மதிப்பீடுகளை வாழ்வாக்காமல் சட்டத்தின் பெயரால் பிறரை விமர்சனப்படுத்தி வந்தனர். சட்டத்தை மட்டும் கடைபிடித்தால் போதும் தூய்மையான வாழ்வு வாழலாம் என்று நினைத்தனர். ஆனால் சட்டத்தை தாண்டி கடவுளின் மதிப்பீடுக்களான அன்பு, இரக்கம் ,மன்னிப்பு, இறை நம்பிக்கை போன்ற வாழ்வியலை நாம் வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளோம்.அப்பொழுது உள்ளத்திலிருந்து வரும் சிந்தனை தூய்மை உள்ளதாக நம் செயல்பாட்டில் வெளிவரும். இப்படிப்பட்ட தூய்மை வாழ்வை வாழ தான் நம் ஆண்டவர் இயேசு எதிர்பார்க்கின்றார். இப்படி வாழும் பொழுது நாம் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் மற்றும் குருட்டு வழிகாட்டிகளைப் போல அல்லாமல், கிறிஸ்துவைத் தம் சொல்லாலும் செயலாலும் வாழ்வாக்க வாழ்வாக்க முடியும். இதைத்தான் நம் ஆண்டவர் இயேசு நற்செய்தி மூலமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றார்.
இன்றைய நாளில் நம் தாய் திருஅவை புனித ஜான் மரிய வியானியின் விழாவினை கொண்டாடுகின்றது. இந்த புனிதர் பங்குத்தந்தையர்கள் அனைவரின் பாதுகாவலராக கருதப்படுகிறார். அதிலும் குறிப்பாக மறைமாவட்ட அருள் பணியாளர்களின் பாதுகாவலராக கருதப்படுகிறார். இவர் விட்டுச் சென்ற ஆன்மீகம் அகம் சார்ந்தது. புனித வாழ்வுக்கு வழி காட்டுவது. இன்றைய நற்செய்தியில் வருவதுபோல "வாயிலிருந்து வெளிவருவதே மணிதரைத் தீட்டுப்படுத்தும் " என்ற வார்த்தைகளை உணர்ந்தவராய் ஒப்புரவு அருட்சாதனத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார் . குறிப்பாக அவர் பணி செய்த ஆர்ஸ் நகரில் மக்கள் பல பாவங்கள் செய்து கடவுளை விட்டு மிகவும் பிரிந்து வாழ்ந்தனர். அவர்கள் உள்ளமும் உடலும் பாவத்தால் நிறைந்து வழிந்தது. அவர்களில் பாவத்தால் அவர்களைத் தீட்டுப்படுத்திக் கொண்டனர். இப்படிப்பட்ட சூழலில் தன்னுடைய சொல்லாலும் செயலாலும் நற்செய்தியை அறிவித்து வாழ்வாக்கி அனைவரும் மனமாற வழிகாட்டினார். மனமாற்ற வாழ்வின் வழியாகத்தான் விண்ணகப் பாதையை நோக்கிச் செல்ல முடியும் என்ற சிந்தனையை வழங்கினார்.
தன்னுடைய மேய்ப்பு பணியின் வழியாக தன்னை கடவுளுக்கு உகந்த வகையில் புனிதப்படுத்திக் கொண்டார். மேலும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆர்ஸ் நகர மக்களையும் பாவத்திலிருந்து ஒப்புரவாக்கி புனிதப்படுத்தினார். "பிரான்சில் புரட்சி நடந்த கடினமான காலகட்டத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நல்ல கிறிஸ்தவராக வாழ்ந்து நல்ல கிறிஸ்தவ வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளார் " என கர்தினால் பிலோனி தனது மறையுரையில் கூறியுள்ளார். எனவே இன்றைய நாளில் புனித ஜான் மரிய வியான்னி போல நமது உள்ளத்தை தூய்மைப்படுத்தி கடவுளுக்கு உகந்த வாழ்வை நாமும் பிறரும் வாழ முயற்சி செய்வோம். பல்வேறு அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் குருத்துவ வாழ்வை வாழ்வது என்பது மிகப்பெரிய சவாலாகும். இப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்ள அருள்பணியாளர்கள் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்வோம். திருமுழுக்கின் வழியாக பொதுக் குருத்துவத்தில் இணைந்த நாம், புனித ஜான் மரிய வியான்னியைப் போல புனித வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். அப்பொழுது நம் ஆண்டவர் இயேசு எதிர்பார்க்கக்கூடிய அகத் தூய்மையை நம் வாழ்வில் வாழ்வாக்க முடியும். புனிதத்தின் வழியாக இறைவனை காண கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிக்கும் இறை ஞானத்தை கேட்டு இறைவேண்டல் செய்வோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள தெய்வம்! புனித ஜான் மரிய வியான்னியை புனிதத்தில் வளர எங்களுக்கு முன்மாதிரியாக தந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். மறைமாவட்ட அருள் பணியாளர்களையும் மற்றும் துறவற அருள் பணியாளர்களையும் நிறைவாக ஆசீர்வதித்தருளும். பங்கிலே பணியாற்றும் அருள்பணியாளர்கள் புனிதத்தில் மென்மேலும் வளர்ந்து மக்களையும் புனிதத்தில் வளர்த்தெடுக்க தேவையான இறை ஞானத்தை தந்தருளும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு
Add new comment