Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நன்மைக்கான வழிகளா! | குழந்தைஇயேசு பாபு
இன்றைய வாசகங்கள் (24.07.2020) - பொதுக்காலத்தின் 16 ஆம் வெள்ளி - I. எரே. 3:14-17; II. திபா. 31:10,11-12,13; III. மத். 13:18-23
"உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம். நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை, ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுக்கே உரிய சட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்" என்று புகழ்பெற்ற தத்துவமேதை பிளேட்டோ கூறியுள்ளார். இந்த உலகில் நல்லது மற்றும் தீயது என்ற இரு எதிர்வினைகள் மக்களை ஆட்சி செலுத்தி வருகிறது. இந்த இரண்டு வினைகளுக்கும் தொடர்ந்த முரண்பாடு, இவ்வுலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை ஏதோவொரு வகையில் அரங்கேறி வருகின்றது.
நல்ல சிந்தனை கொண்டவர்கள் உள்ளடக்கத்தோடு வாழ்வர். இவர்கள் சட்டங்களும் கட்டுப்பாடுளும் இல்லாவிட்டாலும் நல்லச் செயல்பாடுகளோடு வாழ்வர். இத்தகைய மனிதர்கள் நல்ல நிலம் போல பலன் கொடுக்கக் கூடியவர்கள். உள்ளடக்கமில்லாத தீய எண்ணம் கொண்டவர்கள். தங்களுக்குத் தாங்களே சட்டங்களை உருவாக்கிக்கொண்டு சுயநலத்தோடு வாழ்பவர்கள். இவர்கள் நல்ல நிலமாக பலன் கொடுக்க முன்வரமாட்டார்கள். பிறரையும் பலன் கொடுக்க விடமாட்டார்கள்.
எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே நல்லதை தேர்ந்தெடுக்கும் பொழுது, நல்ல செயல்களை செய்ய முடியும். நாம் தீயதை தேர்ந்தெடுக்கும் பொழுது, தீயச் செயல்களைத் தான் செய்ய முடியும். இன்றைய வாசகங்கள் கடவுளிடம் திரும்பி வந்து நல்லவர்களாக வாழ அழைப்பு விடுக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் "மக்களே! என்னிடம் திரும்பி வாருங்கள்; ஏனெனில், நானே உங்கள் தலைவன்" (எரே. 3:14) என்று எரேமியா இறைவாக்கினர் வழியாக இஸ்ரயேல் மக்களை மனம் மாறி நல்ல மனிதர்களாக மாற கடவுள் அழைப்பு விடுக்கிறார்.
இன்றைய நற்செய்திலும் இறைமகன் இயேசு நம்மை நல்ல மனிதர்களாக வாழ, விதைப்பவர் உவமையின் வழியாக அழைப்பு விடுத்துள்ளார். ''இயேசு, 'நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்' என்றார்'' (மத். 13:23). எனவே இன்றைய நாளிலே நம்முடைய உள்ளடக்கத்தின் வழியாக தீமைகளைக் களைந்து, நல்ல மனம் கொண்டவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
நாம் நல்ல மனம் கொண்டவர்களாக வாழ எவைகள் தடையாக இருக்கின்றன? என்பதை சிந்தித்து பார்க்க இன்றைய நற்செய்தி வாசகம் விழிப்புணர்வை தருகின்றது. விதைப்பவர் உவமையைப் பற்றி நாம் பலமுறை படித்திருப்போம். தியானித்திருப்போம். ஆனால் நல்ல நிலமாக நாம் மாறுவதற்கு, எந்தெந்த நிலங்கள் போல் இருக்கக்கூடாது என்பதையும் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
விதை அதன் நிலத்திற்கேற்றத் தன்மையின் படிதான் அதன் பலனை கொடுக்கும். விதை இறைவனுடைய வார்த்தையாக கருதப்படுகிறது. நல்ல விதைகளாகிய இறைவனுடைய வார்த்தைகள் நல்ல நிலத்தில் விழும் போது மிகுந்த பலன் கொடுக்கும். நம்முடைய உள்ளம் நிலத்திற்கு ஒப்பிடப்படுகிறது. நம்முடைய உள்ளம் நல்ல நிலமாக இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க தடையாக உள்ள தீய நிலங்களைப் பற்றித் தெளிவு பெறுவது மிகவும் அவசியமாகும்.
முதலாவதாக, வழியோரம் விழுந்த விதை போல நாம் இருக்கக்கூடாது. இறையாட்சி பற்றி போதனைகள் வழியாக நமக்கு வாய்ப்பு கிடைத்தும், அதைப் புரிந்துகொள்ள முடியாத மனநிலையில் இருக்கிறோம். இதற்கு காரணம் நாம் திறந்த மனநிலையோடு இறைவார்த்தையை ஏற்காததேயாகும். அன்றாட வாழ்விலே பல திருப்பலி, தியானங்கள், நற்செய்திக் கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்றாலும் முழு ஈடுபாடு இல்லாத மனநிலையில்தான் அவற்றுக்கு செவி கொடுக்கிறோம். இத்தகைய மனநிலை மாற திறந்த மனநிலையோடு இறைவார்த்தை ஏற்று, அவற்றின் வழியாக இறையாட்சியை ஆழமாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு நாம் வாழும் பொழுது நாம் நல்ல நிலங்களாக மாற முடியும்.
இரண்டாவதாக, இறைவார்த்தை நமக்கு போதிக்கப்படும் பொழுது, மேலோட்டமாக உள்வாங்காமல், மிகவும் ஆழமாக தியானித்து உள்வாங்க அழைக்கப்பட்டுள்ளோம். மேலோட்டமான மனநிலையில்நாம் இருந்தால் பாறையின் மேல் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பான மனிதர்களாக நாம் மாறிவிடுவோம். இன்றைய காலக்கட்டத்தில் நம்மில் எத்தனையோ பேர் இறைவார்த்தை மட்டும் கேட்டு மகிழ்ச்சி கொள்கிறோம். ஆனால் அதை வாழ்வாக ஒரு துளி கூட முயற்சி செய்வதில்லை. அவ்வாறு நாம் முயற்சி செய்யவில்லையெனில் நிச்சயமாக நாம் நல்ல நிலங்களாக மாற முடியாது. எனவே நாம் இறைவார்த்தையை ஆழமாகத் தியானிக்க மேலோட்டமான மனநிலையை நம்மிலிருந்து அகற்ற வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது நாம் நல்ல நிலங்களாக மாற முடியும்.
மூன்றாவதாக, முட்செடிகளின் இடையே விழுந்த விதைகளைப் போல் அல்லாமல் நல்ல நிலங்களாக மாற இவ்வுலகம் சார்ந்த வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய சிற்றின்பம், பொருளாசை, சுயநலம், மாயக் கவர்ச்சிகள் போன்றவைகள் நல்ல நிலங்களாக மாற மிகவும் தடையாக இருக்கின்றது. எனவே இவ்வுலகம் சார்ந்த சிந்தனைகளும் செயல்பாடுகளும் பொருட்களும் நம்மை தீமை வாழ்வுக்கு இட்டுச் செல்லாமல் இருக்க தீமையின் ஆதிக்கத்திலிருந்து வெளிவரவேண்டும். அதற்கு ஒரே வழி நல்ல மனதோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வதேயாகும்.
அன்றாட வாழ்விலே இறைவார்த்தையின் வழியாக இறையாட்சி மதிப்பீட்டை புரிந்துகொள்ள பல வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றது. நாம் நல்ல நிலங்களாக மாறி 30 மடங்கு 60 மடங்கு 100 மடங்கு பலன் கொடுக்க, தடையாய் உள்ள நம்முடைய வளமற்ற எண்ணங்களை (நிலங்களை) அகற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். திறந்த உள்ளத்தோடு இறைவார்த்தை ஏற்று இறையாட்சி மதிப்பீட்டின்படி வாழ்ந்து கிறிஸ்தவ வாழ்வுக்கு சான்று பகரவும் அழைக்கப்பட்டுள்ளோம் . நமது நன்மைத் தனத்திற்கு தடையாய் உள்ள மூடிய மனநிலையையும் மேலோட்டமான மனநிலையையும் இவ்வுலகம் சார்ந்த தீய மன நிலையையும் நம்மிடமிருந்து அகற்ற முயற்சிக்க வேண்டும். அப்பொழுது நாம் பலன் கொடுக்கக் கூடிய நல்ல நிலமாக மாறுவோம். எனவே நம்மிடமிருந்து மேற்கூறிய தடைகளை களைந்து நல்ல மனநிலை கொண்டவர்களாக வாழ தேவையான அருளை இன்றைய நாளில் வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய நல்ல எண்ணங்கள் வழியாக உம்முடைய வார்த்தைகள் ஏற்றுக் கொள்ள தடையாக உள்ள அனைத்தையும் களைய அருளைத்தாரும் . நாங்கள் தூய உள்ளத்தோடு எந்நாளும் வாழ்ந்து இறைவார்த்தையை முழுமையாக உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளவும் அதன்வழியாக இறையாட்சி மதிப்பீட்டுக்கு சான்று பகரவும் உமது அருளை பொழிந்தருளும். ஆமென்.
அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment