உறவுகளைத் தாண்டிய உறவுகளா நாம்! | குழந்தைஇயேசு பாபு


Beyond relationship

இன்றைய வாசகங்கள் (21.07.2020) - பொதுக்காலத்தின் 16 ஆம் செவ்வாய் - I. மீக். 7:14-15,18-20; II. தி.பா. 85:1-3,4-5,6-7; III. மத். 12:46-50

தனி மனிதர்களை சமூகக் குழுக்களாக ஒழுங்கு படுத்துவதற்கான மிகவும் அடிப்படையான அம்சம்தான் உறவுமுறை. இந்த உலகத்தில் பிறக்கின்ற எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் பல தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். மனித வாழ்வோடு உறவைவை பிரிக்க முடியாது. உறவோடு பின்னிப்பிணைந்த வாழ்வு தான் மனித வாழ்வு.

இந்த உலகத்தில் வாழும் எல்லா மனிதரும் ஏதோ வகையில் உறவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் இந்த உலகத்தை படைக்கும் பொழுது மனிதர் இறை உறவோடும், பிறர் உறவாடும், மற்றும் சுய உறவோடும் வாழும் விதமாக படைத்துள்ளார். இன்னும் ஆழமாக தியானித்தால் கடவுள் இந்த உலகத்தைப் படைத்ததே, நாம் அவரோடு உறவுகொண்டு, அவரை மாட்சிப்படுத்தி, அவரோடு இணைந்து இருப்பதற்காகவே ஆகும். எனவே ஒரு மனிதர் தனியாக வாழ்வது இயற்கையிலே இல்லாத ஒன்று. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிறரோடு உறவு கொண்டு வாழ்வதுதான் இயற்கை நியதி.

மனிதருக்கு உறவு முக்கியம் தான். ஆனால் அந்த உறவு நம் குடும்பம், நம் சொந்தம், நம் ஊர், நம் சாதி போன்ற மன நிலையைத் தாண்டி அனைவரையும் அன்பு செய்து, நல்லுறவு கொள்ளுவது தான் உண்மையான உறவாக கருதப்படுகிறது. இத்தகைய மனப்பான்மையே ஒரு முதிர்ச்சியான மனப்பான்மையாகும். இத்தகைய மனநிலையில் வாழ்ந்தவர் தான் நம்மை மீட்க வந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

நம் பிறப்பால் வந்த உறவுகளை தாண்டி இந்த உலகத்தில் பிறந்த எல்லோரையும் அன்பு செய்து நல்லுறவு கொள்ளும் மனப்பான்மையே உண்மையான உறவுக்கு வழிகாட்டும்.இது உறவின் முதிர்ச்சி நிலையை சுட்டிக்காட்டுகிறது. இயேசு நற்செய்தியில் உறவின் உச்ச நிலையை நமக்கு அறிமுகம் செய்கிறார். இயேசு போதனை செய்து கொண்டிருந்த பொழுது, ஒருவர் இயேசுவை நோக்கி "இதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" (மத். 12:47) என்று கூறினார். ஆனால் இயேசுவோ "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?" என்று கேட்டார். இது இயேசுவின் முதிர்ச்சி நிலையை சுட்டிக்காட்டுகிறது. இறையாட்சி பணியில் இரத்த உறவைத் தாண்டி சீடத்துவ உறவே முதன்மைப் படுத்தப்படுகிறது. 

எனவே இறையாட்சி பணிசெய்து கடவுளின் மீட்பையும் இரக்கத்தையும் பெற எல்லோரும் மனம் வருந்தவும் உறவின் உச்ச நிலைக்குச் செல்லவும் அழைக்கப்படுகிறோம். மேலும் இரத்த உறவைத் தாண்டி எல்லோரையும் உறவினர்களாகவும் பார்க்கவும், அவர்களும் கடவுளின் மீட்பை பெற்றுக் கொள்ள வழிகாட்டவும் அழைக்கப்பட்டுள்ளோம். மேலும் இயேசு நற்செய்தியின் வழியாக உண்மையான உறவினர்கள் யார்? என்பதற்கும் பதில் கொடுக்கிறார். இயேசு சீடர் பக்கம் கையை நீட்டி "என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" (மத். 49-50) எனக் கூறுகிறார். 

எனவே நாம் அனைவரும் இன்றைய நாளிலே தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, நம் ஆண்டவர் இயேசுவின் உறவினர்களாக மாற அழைக்கப்படுகிறோம். இயேசு தன் தாயையும் சகோதரர்களையும் புறக்கணிக்கவில்லை. மாறாக, இறையாட்சி பணியில் குடும்பங்களை தாண்டியும், உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையையும் வழங்குகிறார்.

எனவே நாம் நம்முடைய வாழ்வில் உண்மை, நேர்மை, நீதி, சமத்துவம் போன்ற இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்கி மனம்மாறி மீட்பைப் பெற அழைக்கப்பட்டுள்ளோம். நாம் பெற்ற மீட்பை பிறரும் பெற்றுக்கொள்ள வழிகாட்டவும் அழைக்கப்பட்டுள்ளோம். இதன் வழியாக தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற முடியும். அப்பொழுது நாமும் இயேசுவினுடைய உறவினர்களாக மாற முடியும். எனவே இயேசுவைப் போல பிறப்பால் நாம் சார்ந்திருக்கும் உறவுகளைத் தாண்டி, இந்த உலகத்தில் வாழும் எல்லோரையும் நம் உறவுகளாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கேட்டு இறைவனிடம் அருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பான இறைவா! நாங்கள் எங்கள் பிறப்பால் கிடைத்த உறவுகளைத் தாண்டி, எல்லோரையும் எங்களுடைய உறவுகளாக ஏற்றுக்கொண்டு அவர்களின் துன்பத்திலும் துயரத்திலும் உடனிருக்க அருளைத் தரும். குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் கொரோனா என்ற தீ நுண்மியால் துன்புறுகின்ற மக்களை எங்கள் உறவுகளாக ஏற்று உதவி செய்யும் நல் மனதை தாரும். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு

சிவகங்கை மறைமாவட்டம்​

Add new comment

3 + 5 =