ஆறுதல் வேண்டுமா? | குழந்தைஇயேசு பாபு


16.07.2020

இன்றைய வாசகங்கள் (16.07.2020) - பொதுக்காலத்தின் 15ஆம் வியாழன் - I. எசா. 26: 7-9,12,16-19;  II. மத். 11:28-30 

நாம் வாழும் இன்றைய உலகத்தில் எத்தனையோ மக்கள் ஆறுதலை தேடி அலைகின்றனர். மனக்காயங்களுக்கு மருந்தைத் தேடி அலைகின்றனர். துன்பத்தில் யாராவது உடனிருந்து உதவ மாட்டார்களா? என ஏங்குகின்றனர். உண்மையான ஆறுதல் இறைவனிடத்தில் தான் என்பதை இன்றைய வாசகங்கள் சுட்டிக்காட்டுகிறது. 

ஆறுதலின் ஊற்றாம் இறைவன் விண்ணகத்தினின்று மண்ணகம் கண்ணோக்கினார். இன்றைய வாசகங்கள் இறைவன் தரும் ஆறுதலை சுவைக்க நம்மை அழைக்கின்றன.
உண்மையான ஆறுதல் எது?துன்பத்தில் இருக்கும் ஒருவரை அருகிருந்து தேற்றி கண்ணீரை துடைப்பது மட்டுமா? என்றால் இல்லை. 

"என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். என் சுமை எளிது. என் நுகம் அழுத்தாது." என்ற வார்த்தைகளின் பொருளை உணர்ந்தால் "ஆறுதல்" என்ற வார்த்தையின் முழுப் பொருளும் நமக்கு மிகத் தெளிவாய் விளங்கும். 

"வெற்றியில் பணிவு
தோல்வியில் பொறுமை
துயரத்தில் துணிவு
எதிர்த்துப் போராட தன்னம்பிக்கை
என்ன நேர்ந்தாலும் படைத்த இறைவன் மீது அசையாத நம்பிக்கை " இவை அனைத்தும் இருந்தால் பெருஞ்சுமை பனியாய் மாறும். நம் மனம் அமைதியும் ஆறுதலும் பெறும். இதைத்தான் இன்றைய நாளிலேயே நம் ஆண்டவர் இயேசுவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடம். 

இன்றைய முதல் வாசகமும் இறைவனின் அன்பையும், துன்ப நேரத்தில் அவரைத்தேடி மன்றாடுவோருக்கு அவர் செவி சாய்க்கிறார் என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறது. "எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காக செய்கின்றவர் நீரே "என்ற இறைவார்த்தை இறைவன் நமக்குள் இருந்து செயலாற்றுவதையும் எத்தனை இடர்கள் வந்தாலும் நம் செயல்களையும் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையையும் தருகிறது. 

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே இறைவன் நம்முடைய சுமைகளை அகற்றி சுகமான வாழ்வை தருவார் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொள்வோம். அதிலும் குறிப்பாக அவரிடமிருந்து பெற்ற ஆறுதலை நம்மோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கும் கொடுக்க முயற்சி செய்வோம். கொரோனா என்ற தொற்றுநோயால் இவ்வுலகில் எண்ணற்ற மக்கள் ஆறுதலைக் இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு நம்மால் இயன்ற ஆறுதலையும் உடனிருப்பையும் பொருளுதவியையும் கொடுக்க முன்வருவோம். அவ்வாறு செய்யும் பொழுது இறைவனிடமிருந்து பெற்ற ஆறுதலை பிறருக்கும் கொடுக்க முடியும். நாம் பெற்ற ஆறுதலை பிறருக்கு கொடுக்கும் மனநிலையை வேண்டி இறையருள் செய்வோம். 

இறைவேண்டல்

ஆறுதலின் தெய்வமே இறைவா! எங்கள் வாழ்வில் வருகின்ற துன்பங்களையும் சோதனைகளையும் அகற்றி ஆறுதலைத் தரும். நாங்கள் பெற்ற ஆறுதலை பிறருக்கு கொடுக்க நல்ல மனதை தாரும். கொரோனா தொற்று நோயின் காரணமாக ஆறுதலைக் இழந்து தவிக்கின்ற எங்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வை கொடுத்தருளும். எங்களுக்கு தேவையான பொருளாதாரத்தைத் தந்தருளும். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு

சிவகங்கை மறைமாவட்டம்​

Add new comment

5 + 8 =