Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வாய்ப்பினைப் பயன்படுத்துவோமா? | குழந்தைஇயேசு பாபு
இன்றைய வாசகங்கள் (14.07.2020) - பொதுக்காலத்தின் 15ஆம் செவ்வாய் - முதல் வாசகம் எசா. 7:1-9; நற்செய்தி வாசகம் மத். 11:20-24
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் மனமாற்றம் அடைந்து மீட்பினைச் சுவைக்க பற்பல வாய்ப்புகளைக் கடவுள் கொடுக்கிறார். கொடுத்த வாய்ப்பினை பயன்படுத்தியோர் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் பெற்று மீட்பைச் சுவைத்தனர். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு நினிவே மக்கள். கொடுத்த வாய்ப்பினை பயன்படுத்தி நினிவே மக்கள் தங்களுடைய குற்றங்களிலிருந்து மனம் வருந்தி மன்னிப்பு பெற்றனர். எனவே கடவுள் அவர்களுக்கு அனுப்பவிருந்த துன்பத்தை அனுப்பவில்லை.
மனமாற்ற வாழ்வுக்கு மிகச்சிறந்த உதாரணமாக கருதப்படும் புனித அகுஸ்தினார் மிகப் பெரிய பாவியாக திகழ்ந்தவர். தன்னுடைய தாய் புனித மோனிகாவின் செபத்தாலும் தவத்தாலும் மனமாற ஒரு வாய்ப்பைப் பெற்றார். இறுதியாகஅந்த வாய்ப்பை பயன்படுத்தி இறைவார்த்தையை தியானித்தவராய் கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு பெற்றார்.
நம் ஆண்டவர் இயேசு தனது பணி வாழ்வில் கலிலேயக் கடலைச் சுற்றி அமைந்துள்ள நகரங்களில் போதித்துள்ளார். போதனையின் போது பல்வேறு வல்ல செயல்களைச் செய்துள்ளார். நோயாளிகளுக்கும் சமூகத்தில் புறந்தள்ளபட்டவர்களுக்கும் புதுவாழ்வை வழங்கியுள்ளார். இத்தகைய செயல்கள் வழியாக பாவிகள் மனம் திருந்தி போதனையை ஏற்று புதுவாழ்வு பெற வேண்டும் என்று இயேசு விரும்பினார்.
மனம் மாற வாய்ப்பு கிடைத்தும் தான் போதித்த கொராசின், பெத்சாயிதா போன்ற நகரங்கள் இயேசுவின் போதனைகளையும் வல்ல செயல்களையும் கண்டும் மனம் மாறவில்லை. இயேசுவின் போதனைகளையும் வல்ல செயல்களையும் பொருட்படுத்தவில்லை. இதைக் கண்டு இயேசு மனம் வருந்துகிறார். அன்பையும் இரக்கத்தையும் தன் இதயத்தில் கொண்ட இயேசு அவர்களை சபிக்கும் அளவுக்கு கோபப்படுகிறார்.
அதிகமாக யாருக்கு கொடுக்கப்பட்டதோ, அவர்களிடமிருந்து தான் அதிகம் எதிர்பார்க்கப்படும். மற்ற நகரங்களில் இயேசு தனது வல்ல செயல்களையும் போதனைகளையும் செய்திருந்தால் நிச்சயம் மனமாற வாய்ப்பு இருந்திருக்கும் என வருத்தப்பட்டார். தீர், சீதோன் சோதோம் போன்ற நகரங்களில் பாவங்கள் நிறைந்த வழிந்த நகரங்களாக எண்ணப்பட்டாலும் அவர்களுக்கு இந்த அளவுக்கு மனமாற வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.ஆனால் ஆண்டவர் இயேசு கொராசின் மற்றும் பெத்சாயிதா போன்ற நகரங்களுக்கு மனமாற வாய்ப்பு கொடுத்த போதிலும் அவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவேதான் நம் ஆண்டவர் இயேசு "ஐயோ உங்களுக்கு கேடு" என கூறுகிறார்.
இன்றைய நற்செய்தி வழியாக நம் ஆண்டவர் இயேசு நமக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். நமக்கு மனமாற வாய்ப்பு கொடுக்கப்பட்டும் பொழுது, அதை சரியாக பயன்படுத்தவில்லையெனில் நாமும் இயேசுவால் கேள்விக்குள்ளாக்கபடுவோம். இவ்வுலகில் எத்தனையோ மக்களுக்கு இயேசுவைப் பற்றியும் இறைவார்த்தையை பற்றியும் அறிய வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவை திருமுழுக்கு வழியாக பின்பற்ற வாய்ப்பு கிடைத்த நாம் இறைவார்த்தைப் போதிக்கப்படும் பொழுது அதை முழுவதுமாக பயன்படுத்துகின்றோமா ?என்று சிந்தித்து பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம்.
இன்றைய காலகட்டத்தில் நற்செய்தி அறிவிக்கின்ற அருள்தந்தையர்களுக்கும் துறவிகளுக்கும் நற்செய்தி பணியாளர்களுக்கும் மதிப்பளித்து அவர்களின் போதனைகளை ஏற்றுக்கொள்ள இன்று அடைக்கப்பட்டுள்ளோம்.நாம் அவர்களின் போதனைகளை ஏற்றுக்கொள்ளாமல் நம் மனம் போன போக்கில் சொல்லும்பொழுது நிச்சயமாக கடவுளுடைய இரக்கத்தை பெறமுடியாது. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எங்கெல்லாம் இறைவார்த்தைப் போதனைகளின் வழியாக அறிவிக்கப்படுகிறதோ, அங்கு அதிகமாக எதிர்பார்க்கப்படும். இறைவார்த்தை அறிவிக்கப்படும் பொழுது அந்த வாய்ப்பினை நாம் பயன்படுத்தி நம் குற்றங்களிலிருந்து மனம் வருந்தி கடவுளுக்கு சான்று பகர அழைக்கப்பட்டுள்ளோம்.அப்பொழுது நாமும் நம் குடும்பமும் கடவுளின் அருளாலும் ஆசியாலும் நிரப்பப்படுவோம். மீட்பினைச் சுவைக்க நம் குற்றங்களிலிருந்து மன்னிப்பு பெற போதனைகளின் வழியாக வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது அதை பயன்படுத்திக் கொள்ளும் மனப்பக்குவத்தை வேண்டுவோம்.
இறைவேண்டல்
தாயும் தந்தையுமான இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் உம்முடைய இறைவார்த்தை அறிவிக்கப்படும் பொழுது அதை ஏற்றுக்கொண்டு வாழ்வாக்கக்கூடிய நல்ல மனநிலையைத் தாரும். இதன் மூலம் நீர் வழங்கும் அருளையும் ஆசியையும் மீட்பையும் சுவைக்க உமது இரக்கத்தைப் பொழியும். ஆமென்.
அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment