இயேசு ஒரு பங்கின் தலைமைப் பணியாளராயிருந்தால்....


Jesus and Church

கோவில் வளாகத்தின் அருகே கோவேறுகழுதைக்கு கொட்டடி அமைக்கப்பட்டிருக்கும்,
வியாபாரிகளை விரட்ட கயிறு பின்னி கைவசம் வைத்திருப்பார்,
ஆலய நுழைவின்போது அவரை வரவேற்ற ஒலிவக் கொடிகள் ஒன்றிரண்டு கிடக்கும்,
வாசகச் சுருளில் எசாயாவைப் பற்றிய புத்தகத்தின் பக்கம் எடுத்து வைக்கப்பட்டிருக்கும்,
குஞ்சம் வைத்து ஆடையுடுத்திய கோமான்கள் ஆலயத்தின் கடைசி இருக்கையில் அமர்த்தப் பட்டிருப்பார்கள்,
திருமுழுக்குத் தொட்டிக்கு யோவான் தொட்டியென பெயரெழுதப்பட்டிருக்கும்,
மறையுரை கேட்க எல்லாரும் மலையேறும் பயிற்சி பெற்றிருப்பார்கள்,
ஆலய உண்டியல் பெட்டியருகே அவருக்கொரு இருக்கையிடப் பட்டிருக்கும்,
கண்ணீரைச் சேமித்துக்கொண்டு வந்தவர்கள் அவருக்குக் கால் கழுவிவிடக் காத்திருப்பார்கள்,
கூச்சலற்று கோயில் அமைதி வேண்டுதல்களால் அடர்ந்திருக்கும்,
உவமைகள் நிறைந்த மறையுரைகள் ஒவ்வொரு நாளும் கேட்கலாம்.

இத்தனைக்குப்பின்
சாதிய ஏற்ற தாழ்வுகளோ, மேலோர் கீழோரென்ற பாகுபாடுகளோ
பிறப்பின் வழியாக பிரிவுபட்டிருக்காது, பணத்தினை வைத்தல்லாது மனத்தினை வைத்து பங்கு மக்கள் அடையாளப்படுத்தபட்டிருப்பார்கள்,
இயேசுவின் இறப்பு உயிர்ப்பைப்பற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள்.

இறுதியாக இங்கே கிறிஸ்தவர்கள் என்றில்லாமல் இறைவனின் பிள்ளையென்றே எல்லாரும் அழைக்கப்பட்டிருப்பார்கள்.
கிறிஸ்தவமே இயேசுவின் இறப்பு, உயிர்ப்புக்குப் பின்புதானே எல்லாருக்கும் தெரிந்தது.

கவி. வளநாடன்
காரைக்குடி

Add new comment

3 + 6 =