கிறிஸ்துவின் இயல்பும் தெளிவும்


கிறிஸ்துவைப் பற்றிய திருஅவையின் மரபுக் கருத்து என்னவெனில் அவர் மெய்யாகவே, முழுமையாக, கடவுளும் மனிதனும் ஆனவர். தனித்துவத்தில் வேறுபட்ட இவ்விரு இயல்புகளும் இயேசுவில் எக்காலத்திலும் ஒன்றிணைந்தே இருந்தன. எனவே அவர் கடவுள் இயல்பில் முழுமையாகவும் அதே நேரத்தில் மனித இயல்பிலும் முழுமையாக இருந்தார். ஈரியல்புகள் கொண்ட ஒரே ஆளான இயேசு கிறிஸ்துவின் இயல்புக்கு எதிரான திரிபுக்கொள்ளைகள் பற்றிக் காண்போம். 

அப்போலினாரியுஸ் திரிபுக்கொள்கை (Apollinarianism)
கிறிஸ்துவுக்கு மனித ஆன்மா கிடையாது. மாறாக, அவரது மனித ஆன்மாவின் இடத்தை வார்த்தையாம் கடவுள் ஆட்கொண்டார். எனவே, அவர் முழு மனிதன் இல்லை என்ற கருத்தைப் போதித்தது.

ஆரியுஸ் திரிபுக்கொள்ளை (Arianism)
தந்தையாம் கடவுள், மகனாம் கிறிஸ்துவுக்கு முன்பே இருந்தார். மகன் தந்தையால் படைக்கப்பட்டவர். மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில், அதாவது படைக்கப்படுவதற்கு முன், மகனாகிய கடவுள் இருக்கவில்லை என்ற கருத்தை இத்திரிபுக்கொள்கை பரப்பியது. 

தோற்றக் கொள்கை (Docetism)
கிறிஸ்துவை முழுமையான கடவுளாக மட்டுமே ஏற்றுக்கொண்டது. அவரது மனிதம் தோற்றம் மட்டுமே. எனவே, அவர் உண்மையான மனிதர்போன்று தோன்றினாரேயன்றி, நம்மில் ஒருவராக துன்பப்படவில்லை என்னும் கருத்தினை எடுத்தியம்பியது. 

இயக்க ஒருவராட்சிக் கொள்கை (Dynamic Monarchianism)
இயேசு கிறிஸ்து ஒரு சாமானிய மனிதர். ஆனால் இயேசு கருவாக உருவானபோதோ, அல்லது திருமுழுக்குப் பெற்றபோதோ, அல்லது உயிர்தெழுதலின்போதோ கடவுள் அவரை தெய்வீக ஆற்றலால் நிரப்பினார். இயேசு கடவுளிடமிருந்து, கடவுளுக்குரிய எந்த இயல்பையும் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, அவருக்குக் குறிபிட்ட காலத்தில் கொடுக்கப்பட்ட இந்த தெய்வீக ஆற்றலால் கிறிஸ்து கடவுளானார். இதுவே இத்திரிபுக்கொள்கையின் உள்ளடக்கம்.

எபியோனியக் கொள்கை (Ebionitism)
இயேசு ஓர் இறைவாக்கினரே. அவர் சாமானிய மனிதர், கடவுளல்ல. இந்தக் கொள்கை புனித பவுலின் படிப்பினைகளைப் புறக்கணித்து, யூதச் சட்டங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்த எபியோனியர் என்ற ஒரு யூத-கிறித்தவப் பிரிவினரின் பெயரால் எபியோனியக் கொள்கை என அழைக்கப்படுகிறது.

ஓரியல்புக் கொள்கை (Monophyticism)
கிறிஸ்துவின் மனித இயல்பை மறுக்கிறது. இது கிறிஸ்து இறைஇயல்பை மட்டுமே கொண்டிருந்தார் என எடுத்துரைக்கின்றது. கிறிஸ்து ஒரு மனிதனாய் துன்புற்றார் என்பதை மறுப்பதன் மூலம், கிறிஸ்துவினுடைய மீட்புப் பணியின் மதிப்பைப் புறக்கணிக்கிறது. 

ஒரு விருப்பாற்றல் கொள்கை (Monotheletism)
இயேசு இறை விருப்ப ஆற்றலை மட்டுமே கொண்டிருந்தார் எனப் போதிக்கின்றது. இது சிரியாவின் ‘மாரோனைட்’ திருஅவையில் இன்றும் நம்பப்படுகிறது.

நெஸ்தோரியுஸ் கொள்கை (Nestorianism)
மரியாவிடம் பிறந்தவர் கடவுள் அல்ல. ஏனெனில் கடவுளுக்குப் பிறப்பு இல்லை. எனவே மரியா மனிதராகிய இயேசுவின் தாயே அன்றி, கடவுளின் தாய் அல்ல என்று நெஸ்தோரியுஸ் போதித்தார். இக்கொள்கை இயேசுவை மரியாவிடம் பிறந்த மனிதர், பிறக்காத கடவுள் என இரு ஆட்களாகப் பிரித்துப் பார்த்தது. எனவே மனிதராகிய இயேசுவை வார்த்தையாம் கடவுள் (Logos) முழுவதுமாக ஆட்கொண்டார் என்று போதித்தார். 

(நன்றி: திருஅவை வரலாறு-2, முனைவர் சேவியர் டெரன்ஸ், 44-46).

பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு நிலைகளில் இயேசுவின் இயல்புகள் பற்றி பல கேள்விகள் எழுந்தன. அவை பல பரிணாமங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தூய ஆவியின் வழிகாட்டுதலால் சரியான வழிமுறைகள் பல்வேறு திருச்சங்கள் வழியாகக் கொடுத்தது கத்தோலிக்கத் திருஅவை. அத்தகைய வழிகாட்தலினால்தான் இன்றும் பல்வேறு நிலைகளில் கிறிஸ்துவை அனுபவமாக நாம் அனைவரும் கத்தோலிக்கத் திருஅவை வழியாகப் பெற்றுக்கொண்டிருக்கின்றோம். நாமும் பெற்ற அனுபவத்தை பிறருடன் பகிர்ந்துகொள்வோம். 
 

Add new comment

1 + 2 =