நீங்கள் கடின உழைப்பாளியா?


pixabay

சில ஆண்டுகளுக்கு முன் வங்கதேசத்திலிருந்து பிழைப்புக்காக பெங்களுரு நகரில் குடியமர்ந்த ஒரு சிறிய குடும்பத்தில் பிறந்தவர்தான் பெர்னிட்டா மோடல் என்ற இளம்பெண். இவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுபவர். இவருடைய உழைப்பு இந்த பிள்ளையின் படிப்பிற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. எனவே ஆட்டோ ஓட்டும் நேரம்போக மற்ற நேரங்களில் கிடைக்கும் எந்த வேலையாக இருந்தாலும் அதைத் துணிவுடன் செய்து தன்னுடைய குடும்பத்தை மேம்படுத்த முயன்றார். 

தன்னுடைய குடும்ப சூழ்நிலையில் தன்னை இழந்துவிடாமல் தன்னுடைய பெற்றோரின் தன் வழியாக கொண்டிருக்கும் கனவை நிதர்சனமாக்கவேண்டும் என்னும் முனைப்போடு, தனக்குள் இருக்கும்  திறமைகளையும் சக்திகளையும் வெளிக்கொணரும் வாழ்வுக்கான போராட்டத்தில் தன்னை உட்படுத்திக்கொண்டார் பெர்னிட்டா.

“எனக்கு டியூசனுக்குச் செல்ல பணமில்லாமல் இருக்கலாம்; ஆனால் என்னிடம் இருப்பது கடினப்பட்டு உழைப்பதற்கான சக்தி” என்று மனத்தில் சிந்தித்த அவர் பகல் வேளையில் அதிகமான நேரம் அவளுக்கு கிடைக்காததால் இரவு நேரத்தில் சமையல் அறையில் ஒரு சிறு மின்விளக்கு எரிய, எந்த மின்விசிறியும் இல்லாமல், சில வேளைகளில் மெழுகுதிரியின் வெளிச்;சத்தில் அதிகாலை 3 மணிவரை படிப்பார்.

சமையறையின் வெப்பத்தில் விளையும் வியர்வை மழையையும், சோர்வையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய படிப்பினை மட்டுமே மனத்தில் இருத்தி துணிவுடன் படித்து, தனது 12-ஆம் வகுப்பு தேர்வில் 95மூ மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்றார். தன் பள்ளியிலுள்ள அருள்சகோதரிகளின் உதவியுடன் ஒரு தொண்டு நிறுவனத்தின் வழியாக தன்னுடைய கல்லூரிப் படிப்பினை தொடர்கின்றாள். தன்னுடைய படிப்பிற்கான தங்கப் பதக்கம் அவருக்குதான் என்ற நிலையை தன்னுடைய கல்லூரியில் உருவாக்கியிருக்கின்றார் (இந்துஸ்தான் டைம்ஸ், செப்டம்பர் 22,  2015).

இன்று எல்லா வாய்ப்புகளும் வசதிகளும் இருந்தும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தம்முடைய திறமைகளையும் சக்திகளையும் வெளிக்கொணர தயங்கும், கவனத்தை சிதறடித்துக்கொண்டிருக்கும் மக்கள் வாழும் இச் சமுகத்தில், தன்னுடைய திறமைகளையும் சக்தியையும் பயன்படுத்த யாரும் எதுவும் தடைபோடமுடியாது என்று உரக்கக் கூறும் பெர்னிட்டா கடின உழைப்பினால் புதிய வாழ்விற்கான வழியையும் வழிமுறைகளையும்; வகுத்துக்கொடுக்கும் வழிகாட்டி.

அப்படியென்றால் கடி உழைப்பு என்றால் என்ன? கடின உழைப்பு என்பது எப்பொழுதும் வேலைசெய்து கொண்டே இருப்பதா?; எந்த வேலையும் என்னால் செய்ய முடியும் என்று எண்ணி நிலையில்லாமல் எதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டிருப்பதா? உடலை அதிகமாக வருத்தி வெயிலிலும் மழையிலும் வேலைசெய்வதா? 

கடின உழைப்பில் மேலே சொன்னவைகள் அனைத்தும் அடங்கும், இருந்தாலும் கடின உழைப்பு என்பது கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் திறமைகளையும், சக்திகளையும், நல்வாழ்விற்கான சிந்தனைகளையும் வாழ்வில் நாம் சந்திக்கின்ற எல்லா சூழ்நிலைகள், சோதனைகள் மத்தியிலும் வெளிக்கொணர்வது; அதற்காக தன்னுடைய உயிரை இழக்கக்கூட தயாராக இருப்பது என்பது என்னுடைய வரையறை. 

அந்த இளம்பெண்ணை குடும்பத்தின் வறுமையோ, கஸ்டங்களோ, தூக்கமின்மையோ, மின்சாரமின்மையோ, வெப்பச்சலனமோ கட்டுபடுத்த முடியவில்லை. கட்டுக்கடங்காக் காற்றாற்று வெள்ளம்போல தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தப் புறப்பட்டால், சதனைப்பெண்ணாக, மற்றவர்களுக்கு உந்து சக்தியாக மாறினாள்.

விவிலியத்தில் யோசேப்பின் வாழ்வு இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. கனவுகளின் மன்னான யோசேப்பு, தன்னுடைய வாழ்வில் கடவுள் கொடுத்திருகின்ற திறமைகள், சக்திகள் கொடைகள் எவை என்பதை அறிந்திருந்தார். அவற்றை வெளிக்கொணர கடினப்பட்டு உழைத்தார். கனவிற்கான விளக்கங்களை நேர்மையோடு விளக்கினார். மற்ற ஆசைகளுக்கு எதற்கும் விலைபோகவில்லை. எனவேதான் இந்த வெற்றிப்பாதையில் அவரை மாபெரும் பதவிகள் மட்டுமல்ல, பஞ்சத்தில் தவித்துக்கொண்டிருந்த தன்னுடைய இனத்திற்கே மீட்பராக மாறினார். 

இவ்வாறு கடவுள் நமக்காக வைத்திருக்கின்ற திட்டத்தைச் செயல்படுத்த தனக்குள் இருக்கின்ற திறமைகளையும் சக்திகளையும் கண்டறிந்து சரியான விதத்தில் பயன்படுத்தியவர்களே கடின உழைப்பாளிகள், நல்வாழ்விற்கான வழியைத் தேடியவர்கள் என்று விவிலியம் நமக்கு அறிவுறுத்துகின்றது.

இன்று பலரும் கோடாரியை தீட்டாமல் மரம் வெட்டச் செல்லும் மரவெட்டிகளைப் போல கடினப்பட்டு உழைத்துக்கொண்டேயிருக்கின்றார்கள். உழைப்பையும், உழைப்பாளர்களை கவுரவிக்க வேண்டுமானால் கடின உழைப்பினைப் பற்றிய புதிய சிந்தனையுடன் வாழ்வைத் தொடங்குவோம். நம்முடைய திறமைகள் என்ன?, நம்முடைய சக்தி என்ன? என்று உணராமல் தொடரும் கடின உழைப்பு – வீண் செலவே.

நான் நல்லதொரு போராட்டத்;தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றிவகையே (2 திமொ 4:7-8).
 

Add new comment

10 + 0 =