வறியோர்கள் உயிரும் உணர்வுமுள்ள மனிதர்கள் 


Church to be in solidarity with the poorest of poor Herald Malaysia

உணவு மற்றும் வேளாண்மை உலக நிறுவனமான FAO மேற்கொண்டுள்ள கருத்தரங்கிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள "குடிபெயர்தல், வேளாண்மை மற்றும் கிராமப்புற முன்னேற்றம்" என்ற தலைப்பு, புள்ளி விவரங்களை அல்ல, மாறாக, மக்களை மையப்படுத்தியுள்ளது என்று, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

உரோம் நகரில் அமைந்துள்ள FAO நிறுவனத்தின் தலைமையகத்தில், ஜூன் 26, இப்புதனன்று நடைபெற்ற 41வது அமர்வில், F.A.O., I.F.A.D., மற்றும் P.A.M. ஆகிய பன்னாட்டு அமைப்புக்களின் கூட்டங்களில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி பெர்னாண்டோ கீக்கா அரெயானோ (Fernando Chica Arellano) அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

காலநிலை மாற்றங்களாலும், நாடுகளுக்கிடையிலும், நாட்டுக்குள்ளும் நடைபெறும் மோதல்களாலும், வாழ்வாதாரங்களை இழக்கும் வறியோரின் எண்ணிக்கை, அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வருவதை, நாம் வெறும் புள்ளி விவரங்களாகக் காணாமல், அவர்களை, மனிதர்களாகக் கண்ணோக்க வேண்டியது அவசியம் என்று, அருள்பணி அரெயானோ அவர்கள் கூறினார்.

குடிபெயர்தல், வேளாண்மை மற்றும் கிராமப்புற முன்னேற்றம் ஆகிய மூன்றும், ஒன்றையொன்று தொடரும் சங்கிலிப் பிணைப்புகள் என்று தன் உரையில் சுட்டிக்காட்டிய அருள்பணி அரெயானோ அவர்கள், இந்தச் சங்கிலிப் பிணைப்பிலிருந்து மக்களை விடுவிப்பது இன்றைய அவசரத் தேவை என்று எடுத்துரைத்தார்.

நாடு விட்டு நாடு புலம்பெயர்வோர் நம் கவனங்களைப் பெறுவதுபோல், நாட்டுக்குள்ளேயே, கிராமங்களை விட்டு நகரங்களுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கையும், அவர்களின் தேவைகளும் நம் கவனத்தைப் பெறுவதில்லை என்பதை ஓர் எச்சரிக்கையாக அருள்பணி அரெயானோ அவர்கள் கூறினார்.

இன்றைய உலகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு, வெறும் பொருளாதார வழிகளில் மட்டும் தீர்வுகள் காண்பதை விடுத்து, சமுதாய, நன்னெறி வழிகளில் தீர்வுகள் காண அனைத்து அரசுகளும், உலக நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளுடன், அருள்பணி. அரெயானோ அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

(நன்றி: வத்திக்கான் நியூஸ்)

Add new comment

2 + 18 =