மருத்துவர்கள், நோயாளிகளுடன் மிக நெருக்கமாக இருக்கவேண்டும்: திருத்தந்தை 


Euthanasia is always wrong, Pope Francis tells doctors | Catholic Herald Catholic Herald

இயேசு தம் திருப்பணியில் ஆற்றியது போன்று, கத்தோலிக்க மருத்துவர்களும், நோயாளர்கள் மீது அக்கறையாய் இருந்து, அவர்கள் சொல்வதைக் கவனமுடன் கேட்டு, அவர்களுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 22, இச்சனிக்கிழமையன்று கூறினார்.

FIAMC எனப்படும் கத்தோலிக்க மருத்துவக் கழகங்களின் உலகளாவிய கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறத்தாழ 500 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு கருணையுடன் நோயாளர்களுக்கு நெருக்கமாக இருந்து, தந்தையாம் இறைவன், மிகவும் தேவையிலுள்ள தம் பிள்ளைகள் மீது காட்டும் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்தினார் என்று கூறினார்.

இயேசு நோயாளர்களிடம் கருணை காட்டியது, தொடக்ககாலக் கிறிஸ்தவ சமுதாயம், அவரை, மருத்துவர் என அழைக்க வைத்தது என்றுரைத்த திருத்தந்தை, இயேசு நோயாளர் மீது காட்டிய அக்கறையே, எல்லாக் காலங்களின் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்குப் போதனையாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.

மனிதர்கள் எத்தகைய சமுதாய நிலையில் இருந்தாலும், அவர்களிடம் நெருக்கமாக இருந்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிவது, அவர்களுடன் உரையாடுவது போன்றவை, குணமாதல், ஆறுதல், ஒப்புரவு மற்றும் விடுதலை உணர்வைத் தரும் என்றும், திருத்தந்தை கூறினார்.

மற்றவரை உண்மையான அன்புடன் பராமரிக்கையில், அது பரந்துவிரிந்து, மனிதர்களை ஒன்றுபடுத்தும், இயேசு முழு மனிதரையும் குணப்படுத்தினார், அதனால் இயேசுவால் குணமான நோயாளர்கள் பலர், அவரின் சீடர்களானார்கள் என்றுரைத்த திருத்தந்தை, மருத்துவர்கள், ஒவ்வொரு மனிதரின் உடல் மற்றும் உளவியலைக் குணப்படுத்தி, ஒருங்கிணைந்த முழு மனிதரை மதிக்க வேண்டுமெனவும் கூறினார்.

மருத்துவத்தில் வளர்ச்சி 

கடந்த நூறு ஆண்டுகளில் மருத்துவ ஆய்வுகளிலும் சிகிச்சைகளிலும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளன, அதனால் மனிதரின் துன்பங்களை நம்மால் அகற்ற முடியும், அகற்ற வேண்டும் என்றும் கூறியத் திருத்தந்தை, இந்த வளர்ச்சி, மக்கள் தங்களின் நலவாழ்வில், மிகுந்த அக்கறை காட்ட கற்றுக்கொடுக்க வேண்டுமென அறிவுறுத்துவதாகவும் உள்ளது என்று கூறினார்.

மற்றவர் மீது அக்கறை காட்டுவது என்பது, வாழ்வு எனும் கொடையை தொடக்கமுதல் இறுதிவரை மதிப்பதாகும், நாம் வாழ்வின் தலைவர்களாக இல்லாவிடினும், நம்பிக்கையுடன் அது நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், மருத்துவர்கள் அந்தப் பணியை ஆற்ற வேண்டுமென்றும் திருத்தந்தை கூறினார்.

விவிலியம் வாசிக்கவும், திருவருள்சாதனங்களை அடிக்கடி பெறவும், மருத்துவர்களை ஊக்கப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சரியானவற்றை சரியான முறையில் கூறுவதற்கும், சிக்கலான சூழல்களில் தேர்ந்துதெளியவும் தேவையான கொடையை தூய ஆவியார் வழங்குவார் என்றும் கூறினார்.

(நன்றி: வத்திக்கான் நியூஸ்) 

Add new comment

2 + 3 =