Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நற்செய்தியாளர் லூக்காவின் வழியை பின்பற்றுவோமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
புனித லூக்கா - நற்செய்தியாளர் விழா
I: 2 திமொ: 4: 9-17
II: திபா 145: 10-11. 12-13. 17-18
III: லூக்: 10: 1-9
இன்றைய நாளில் நம்முடைய தாய்த்திருஅவையானது நற்செய்தியாளர் லூக்காவின் விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றது . நற்செய்தியாளர் லூக்கா மற்ற நற்செய்தியாளர்கள் விட எளிமையான சிந்தனைகளை எளிமையான மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார். இவர் மருத்துவர் என்று மரபுவழியான வரலாறு சுட்டிக் காட்டுகிறது. புனித லூக்கா நமக்கு சுட்டிக்காட்டும் செய்திகளை பின்வருமாறு தியானிப்போம்.
முதலாவதாக, புனித லூக்கா நற்செய்தியாளர் பெண்ணியத்தை மதித்தார். விவிலிய அறிஞர்கள் லூக்காவினை பெண்ணியத்திற்கு முன்னுரிமை கொடுத்த நற்செய்தியாளர் என்று அழைக்கின்றனர். எழுத்துக்களில் பெண்களின் மாண்பும் மதிப்பும் மேன்மையும் வெளிப்படுகின்றன. நம்முடைய அன்றாட வாழ்விலும் நம்மோடு வாழக்கூடிய பெண்களுக்கு மதிப்பையும் மரியாதையும் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
இரண்டாவதாக ஏழை எளிய மக்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். லூக்கா நற்செய்தி படி இயேசுவின் பிறப்பு செய்தி முதன் முதலாக சாதாரண இடையர்களுக்கு தான் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் லூக்கா நற்செய்தியாளர் ஏழைகள் மீது கொண்டிருந்த அன்பையும் மதிப்பையும் சுட்டிக்காட்டுகிறது. அன்றாட வாழ்வில் ஏழை எளிய மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
மூன்றாவதாக லூக்கா நற்செய்தியாளர் எல்லா மக்களுக்கும் மீட்பு உண்டு என்ற ஆழமான சிந்தனையை சுட்டிக்காட்டுபவராக இருக்கின்றார். பிற இனத்தாருக்கு அதிக முக்கியத்துவத்தை லூக்கா நற்செய்தியாளர் கொடுத்துள்ளார். இதற்கு காரணம் எல்லா மக்களுக்கும் மீட்பு உண்டு என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்யவே ஆகும்.
நான்காவதாக, லூக்கா ஒரு மிகச் சிறந்த மருத்துவராக இருந்து உடல் உள்ள ஆன்ம நலனை கொடுப்பவராக இருந்தார். அவரைப்போல நாமும் நம்முடைய நல்ல வார்த்தைகளால் பிறருக்கு உடல் உள்ள ஆன்ம நலனைக் கொடுக்க நம்மையே முழுவதுமாக ஒப்படைப்போம்.
புனித லூக்காவின் திருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நம்மோடு வாழக்கூடிய பெண்களை மதிப்பவர்களாகவும் ஏழை எளிய மக்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களாகவும் எல்லா மக்களும் மீட்பு அடைய உதவி செய்பவர்களாகவும் நம்முடைய வார்த்தைகளின் வழியாக நலவாழ்வு கொடுப்பவர்களாகவும் வாழத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல் :
வல்லமையுள்ள ஆண்டவரே! புனித லூக்காவைப் போல நாங்களும் நல்ல மதிப்பீடுகள் வாழத் தேவையான அருளைத் தாரும் . ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment