பொதுசுகாரத்தில் தமிழ்நாடு நிலை 


Think Tamil Nadu has good public healthcare? It's hard to find it on ... Scroll.in

மத்திய அரசின் நிடி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி தமிழகம் பொதுச் சுகாதாரத் துறையில் பல படிகள் கீழிறங்கியிருக்கிறது. ஆனால், புள்ளிவிவரங்கள் தவறானவை என்கிறது தமிழ்நாடு அரசு. பொதுச் சுகாதாரத் துறையில் ஒவ்வொரு மாநிலமும் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பது தொடர்பான புள்ளிவிவரங்களை National Institution for Transforming India (நிடி ஆயோக்) அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு பொதுச் சுகாதாரத் துறையில் 3வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

பொதுச் சுகாதாரத் துறையில் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில், பெரிய மாநிலங்களின் பட்டியலில் 74.01 புள்ளிகளுடன் கேரளா முதலிடத்திலும் 28.61 புள்ளிகளுடன் உத்தரப்பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளது. தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 

பல்வேறு குறியீடுகளில் தமிழகம் பின்தங்கியிருப்பதாக நிடி ஆயோகின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குறிப்பாக, குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு குறைவான எடையுடன்) குழந்தைகள் பிறப்பது கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் அதிகரித்துள்ளது. தவிர, இந்தப் புள்ளிவிவரங்களில் மிகவும் கவலைதரத்தக்கது, தடுப்பூசிகள் அளிப்பதில் ஏற்பட்டிருக்கும் சரிவுதான். கடந்த ஆண்டில், 82.7 சதவீதமாக இருந்தது, இந்த ஆண்டில் 76.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர், கேரளா, ஆந்திரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 100 சதவீத குழந்தைகளுக்கும் நோய்த் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

ஆனால், மற்றொரு கவலையளிக்கும் புள்ளிவிவரம் மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும் சதவீதம். கடந்த ஆண்டில் 81.8 சதவீதமாக இருந்தது, இந்த ஆண்டில் 80.5ஆகக் குறைந்துள்ளது.அதேபோல, டியூபர்குளோசிஸ் எனப்படும் எலும்புருக்கி நோய் மருத்துவமனைகளில் பதிவுசெய்யப்படுவது தமிழகத்தில் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கண்டறியப்பட்ட நோயாளிகளில் 85.4 சதவீதம் பேர் குணப்படுத்தப்பட்டு விடுகிறார்கள். இது இந்திய சராசரியைவிட அதிகம். கடந்த ஆண்டில், இது 75.9 சதவீதமாக இருந்தது.

இருந்தபோதும் பொது சுகாதாரத் துறையின் குறிப்பிட்ட சில அம்சங்களில் தமிழ்நாடு முன்னேறியிருப்பதை நிடி ஆயோக் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கேரளாவும் தமிழகமும் பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில் 2030 ஆம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கான 1000த்திற்கு 12 என்ற இலக்கை தற்போதே அடைந்துவிட்டன. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில் 2030 ஆம் ஆண்டிற்கான இலக்குகளையும் கேரளாவும் தமிழகமும் அடைந்துவிட்டன.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதிலும் இந்த இரு மாநிலங்களும் முன்னிலையில் இருக்கின்றன. குழந்தை பிறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண்ணுக்கு 2.1 என்ற விகிதத்தில் குழந்தை பிறந்தால், மக்கள் தொகை அதே எண்ணிக்கையில் நீடிக்கும் எனக் குறிக்கப்படும். ஆனால், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் ஒரு பெண்ணுக்கு 1.6 என்ற விகிதத்திலேயே குழந்தை பிறப்பு உள்ளது.

ஒவ்வொரு மாவட்ட அளவிலான மருத்துமனையிலும் இதய நோய் சிகிச்சைப் பிரிவுகளை உருவாக்குவதில் தமிழ்நாடு மேம்பட்டிருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் இதய நோய் சிகிச்சைப் பிரிவுகள் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் 2015-16ல் 56.3 சதவீதமாக இருந்த இந்த வசதி, இந்த ஆண்டில் 90.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வசதியை அளிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

ஒவ்வொரு மாநிலமும் பொதுச் சுகாதாரத் துறையில் எப்படிச் செயல்படுகின்றன என்பதை பல்வேறு புள்ளிவிவரங்களின் மூலம் கணக்கிடப்படுகிறது. ஒரு மாநிலத்தின் பொதுச் சுகாதாரச் செயல்பாடுகளில் 23 அம்சங்கள் இதற்காகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவற்றில் 12 பிரிவுகளுக்கான புள்ளிவிவரங்கள் பொதுவெளியில் இருப்பதால், அவற்றை நிடி ஆயோக் நேரடியாக எடுத்துக்கொள்கிறது. மீதமுள்ள 11 பிரிவுகளுக்குத் தேவையான தகவல்களை மாநிலங்கள் அளிக்க வேண்டும்.

இந்தத் தகவல்கள் ஒன்றாகத் திரட்டப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அவ்வாறு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்போது பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என பிரித்து தரவரிசை தரப்படுகிறது.

கேரளாவைப் பொறுத்தவரை அதன் ஒட்டுமொத்த சுகாதாரக் குறியீடு குறைந்திருந்தாலும், ஒட்டுமொத்த செயல்பாட்டில் தொடர்ந்து இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. தரவரிசைப் பட்டியலில், கேரளா, குஜராத், ஜம்மு - காஷ்மீர், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றின் நிலை,கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் மாறவேயில்லை. ஆனால், 2015-16ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால் தமிழ்நாடு, மூன்றாவது இடத்திலிருந்து 9வது இடத்திற்குச் சரிந்திருக்கிறது.

பொது சுகாதாரத் துறையில் தமிழகம் பின்தங்க ஆரம்பித்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கடுமையாக மறுக்கிறார். "நிடி ஆயோக் தவறான புள்ளிவிவரங்களை பயன்படுத்திருக்கிறார்கள் எனக் கருதுகிறோம். இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் நிடி ஆயோகிற்கு எழுதியிருக்கிறார். மேலும் நானும் இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசவிருக்கிறேன்" என்கிறார் விஜயபாஸ்கர்.

"தமிழ்நாட்டில் வருடத்திற்கு 11.8 லட்சம் குழந்தைகள் பிறப்பதாக நிடி ஆயோக் கூறுகிறது. ஆனால், சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் வருடத்திற்கு 9.4 லட்சம் குழந்தைகளே பிறக்கின்றன. அதேபோல, தமிழ்நாட்டில் 99.9 சதவீத குழந்தைகள் மருத்துவமனைகளில்தான் பிறக்கின்றன. ஆனால், இவர்கள் 80 சதவீத குழந்தைகள்தான் மருத்துவமனைகளில் பிறப்பதாகச் சொல்கிறார்கள். எங்கிருந்து இந்த புள்ளிவிவரத்தைப் பெற்றார்கள் எனத் தெரியவில்லை. குறிப்பாக 70 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. 30 சதவீதமே தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. பல மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளில்தான் அதிக பிரசவங்கள் நடக்கின்றன. அப்படியிருக்கும்போது தமிழ்நாடு ஏன் குறைத்துக் காட்டப்படுகிறது எனத் தெரியவில்லை" என்கிறார் விஜய பாஸ்கர்.

தடுப்பூசிகள் போடுவதிலும் பின்தங்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுவது குறித்துக் கேட்டபோது, அது முழுக்க முழுக்கத் தவறான புள்ளிவிவரம் என்கிறார் மாநில சுகாதார அமைச்சர். தமிழ்நாட்டில் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதனால்தான், தமிழ்நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக போலியோ என்ற நோயே கிடையாது என்கிறார் அவர்.

"நிடி ஆயோகிற்கு சில உள்நோக்கங்கள் இருக்கலாம். ஆனால், தமிழக மருத்துவக் கட்டமைப்பு சீரழிந்துவருகிறது என்பது உண்மை. பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் கிடையாது. 24 மணி நேரமும் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறைந்தவருகின்றன" என்கிறார் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.

"போலியோ நோய் இல்லை என்கிறார் அமைச்சர். ஆனால், கடந்த ஆண்டு மதுரையில் ஒரு குழந்தைக்கு டிப்தீரியா நோய் ஏற்பட்டது. அது தடுப்பு மருந்து கொடுக்காததாலேயே ஏற்பட்டது." என்கிறார் அவர். மேலும், பிரசவங்களை வீட்டிலேயே செய்ய வேண்டும், தடுப்பூசிகள் போடக்கூடாது என சமீபகாலமாக சில குழுக்களால் செய்யப்பட்டுவரும் பிரச்சாரமும் இவை குறைந்திருப்பதற்கான காரணங்களாக இருக்கலாம் என்கிறார் அவர்.

(நன்றி: பிபிசி நியூஸ்)

Add new comment

8 + 9 =