Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 19.08.2022
1. வறட்சியால் துயருறும் சொமாலியர்களுக்கு உதவுங்கள்: திருத்தந்தை வேண்டுகோள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 14 அன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியை எதிர்கொள்ளும் சொமாலியா, மற்றும், அதன் அண்டை நாடுகளுக்கு உதவுமாறு, உலக சமுதாயத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
கடினமான சூழல்களால் ஏற்கனவே துன்புறும் சொமாலியர்கள், தற்போது அநாட்டில் நிலவும் கடும் வறட்சியால் மரண அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ள திருத்தந்தை, அம்மக்களுக்கு உலகளாவிய ஒருமைப்பாட்டுணர்வு உடனடியாக கிடைக்கும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.
உலகில் இடம்பெறும் போர், நம் கவனத்தைத் திசைதிருப்பியிருந்தாலும், பசி, நோய், கல்வியறிவின்மை போன்றவற்றுக்கு எதிராகவும் மிகுந்த அர்ப்பணத்தோடு நாம் செயல்படவேண்டியுள்ளது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
ஆப்ரிக்க நாடான சொமாலியாவில் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் அறுவடை இடம்பெறவில்லையென்றால், அந்நாட்டின் எட்டு மாநிலங்கள் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்றும், வறட்சியால் இவ்வாண்டில் அந்நாட்டின் 7,55,000க்கு மேற்பட்ட மக்கள், ஏற்கனவே நாட்டிற்குள்ளே புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. நிறுவனங்கள் கூறியுள்ளன.
2. புகழ்பெற்ற இந்திய இயேசுசபை விஞ்ஞானிக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அரண்மனையில் ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற 76வது சுதந்திர தின விழாவின் போது, புகழ்பெற்ற இயேசுசபை விஞ்ஞானி ஒருவருக்கு டாக்டர்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியின் சேவியர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் சவரிமுத்து இக்னாசிமுத்து அவர்களுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பிற்காக அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
2015 முதல், ஆண்டுதோறும் விருது இந்த விருதானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதின்பாய் பெறுபவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய், ஒரு சான்றிதழ் மற்றும் எட்டு கிராம் தங்கப் பதக்கம் முதலியவை வழங்கப்படும்.
தந்தை இக்னாசிமுத்து, சென்னையில் உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் (2002-2003), கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திலும் (2000-2002) பணியாற்றினார்.
2020 ஆம் ஆண்டில் உலகின் முதல் 1% உயிரியலாளர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார். அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் அவரது ஆராய்ச்சி வெளியீடுகளை மதிப்பீடு செய்த பிறகு, அவருக்கு மரியாதை வழங்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் மூன்று பேராசிரியர்கள், உலகம் முழுவதிலுமிருந்து 100,000 விஞ்ஞானிகளின் உயிரியலுக்கான பங்களிப்புகளை ஆய்வு செய்தனர்.
அவரது ஆராய்ச்சி நிபுணத்துவம் பயோடெக்னாலஜி, எத்னோஃபார்மகாலஜி மற்றும் பயன்பாட்டு பூச்சியியல் ஆகியவற்றில் உள்ளது. அவர் 800 க்கும் மேற்பட்ட அறிவியல் பத்திரிகை கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் மற்றும் 80 புத்தகங்களை எழுதியுள்ளார்.
‘ஜாக்த்ரிப்ஸ் இக்னாசிமுத்துய்’ என்பது இவரின் பெயரால் அழைக்கப்படும் பூச்சி. ‘இக்னாசியோமைசின்’ என்பது இயற்கையாகவே உருவாகும் ஒரு மூலக்கூறு. அதற்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 போன்ற நோய்க்கிருமிகளிடம் இருந்து காக்க சேவியர் ஹெர்பல் ஹேண்ட் சானிடைசரை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.
73 வயதான விஞ்ஞானி தனது அறிவியல் பங்களிப்புக்காக 31 தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
அவர் 75 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். அவர் 100 க்கும் மேற்பட்ட Ph.D வேட்பாளர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
3. தமிழகத்துக்கே முன்மாதிரியாக திகழும் திண்டுக்கல்
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தைத் தவிர்க்கவும் ஜப்பான் சுற்றுச்சூழல் ஆர்வலர் அறிமுகப்படுத்திய ‘மியாவாக்கி காடுகள்’ எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கி திண்டுக்கல் மாவட்டம் முன்மாதிரியாக திகழ்கிறது.
காலநிலை மாற்றத்தால் உலகில் அதிக பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இதனால் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், அதிக மரங்களை வளர்க்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் வனப்பரப்பு தற்போது 22.71 சதவீதமாக உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சுற்றுச்சூழல் துறை சார்பில் 10 ஆயிரம் குறுங்காடுகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித் துள்ளார்.
ஆனால், இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே திண்டுக்கல் நகரில் திண்டிமாவனம் அமைப்பு மூலம் 2 குறுங்காடுகள் உருவாக்கப் பட்டுள்ளன. திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கல்லூரி வளாகத்தில் ஒரு குறுங்காடும், திண்டுக்கல் புறவழிச் சாலை அருகே பொன்மாந்துரை பகுதியில் ஒரு குறுங்காடும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் குறுங்காடுகள் வளர்ப்பில் திண்டுக்கல் தமிழகத்துக்கே முன்மாதிரியாக திகழ்கிறது.
4. இந்தியாவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ‘பின்னோக்கிய’ பயணம்
சுதந்திர இந்தியாவின் அமுதப் பெருவிழாவில் இந்தியாவிற்கும் மட்டுமல்ல உலகத்திற்கே பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது கால நிலை மாற்றம்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறைக்கு மாறும் வகையில் LIFE (Lifestyle for Environment) எனப்படும் மக்கள் பிரச்சார இயக்கம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுவிற்கு முக்கிய காரணமாக இருக்கும் வாகனங்களில் இருந்தும் வெளியாகும் புகையை குறைக்க மின்சார வாகனங்களுக்கு மாறுவது, அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து செல்வது, சைக்கிள் பயன்படுத்துவது, தொலை தூர பயணத்திற்கு தனி நபர் வாகனங்களை பயன்படுத்தாமல் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது, இயற்கை வளங்களை பாதுகாப்பாது என்று காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நாம் அளிக்கும் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது குறைவான நபர்களிடமே இதுபோன்ற வாகனங்கள் இருந்த காரணத்தால் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் நடந்து செல்வது, சைக்கிள் செல்வது, பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளைதான் பயன்படுத்தி வந்தனர் என்பதை நமது தாத்தா, பாட்டி கூற கேட்டு இருப்போம்.
நாம் சுதந்திரத்தைப் பெற நடத்திய பல ஆண்டு போராட்டத்தை போன்று காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையும் இன்னும் பல ஆண்டுகள் தொடரப் போகிறது. இதில் நம் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இதற்கு சுதந்திரத்திற்கு பின்பு இருந்தது போன்ற சூழலியலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு நாம் மாற்றிக் கொள்ளவதே மிகவும் சரியான நடவடிக்கையாக இருக்கும்.
Add new comment