Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பீகாரில் பாலியல் வல்லுறவு கொடூரம்
பீகாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் வைஷாலியின் பகவான்பூர் என்னும் இடத்தில் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதை எதிர்த்த தாய் மற்றும் மகள் மொட்டை அடித்து ஊரை வலம் வரச் செய்யப்பட்டனர். கடந்த புதன்கிழமை மாலை பகவான்பூர் கிராமத்தில் இந்த தாய் மற்றும் மகளிடம் தவறாக நடக்க சிலர் முயற்சி செய்தனர்.
அதனை அவர்கள் இருவரும் எதிர்த்தபோது, அப்பகுதியை சேர்ந்த வார்ட் கவுன்சிலர், 2 பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் கிராமத் தலைவர் உள்ளிட்ட சிலர் முடிசீர்த்திருத்துபவரை அழைத்து தாய் மற்றும் மகளுக்கு மொட்டை அடித்து அவர்களை கிராமம் முழுவதும் வலம் வரச் செய்தனர்.
இதனை தொடர்ந்து தாயும், மகளும் இது குறித்து புகார் செய்ததன் அடிப்படையில், வார்ட் கவுன்சிலர் மொஹம்மது குர்ஷித், கிராமத் தலைவர் மொஹம்மது அன்சாரி மற்றும் முடிதிருத்தம் செய்த தஷ்ரத் டாகூர் உள்ளிட்ட 7 பேர் மீது முதல்கட்ட விசாரணை அறிக்கை பதிவு செய்தனர்.
"இந்த புகார் அளிக்கப்பட்டவுடன் 5 மணி நேரத்திற்குள் முடிதிருத்தம் செய்யும் தஷ்ரத் டாகூர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்துள்ளோம். மற்றவர்களை தேடி வருகிறோம். கூடியவிரைவில் அவர்களை கைது செய்வோம்" என வைஷாலியின் காவல்துறை கண்காணிப்பாளர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
மேலும் "பாதிக்கப்பட்ட தாயையும், மகளையும் குற்றவியல் சட்டம் 164ன்படி நீதிபதியின் முன் கொண்டு செல்லப்பட்டனர். இனி அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக சதர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்" எனவும் கூறினார். தப்பிசென்ற குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை உதவி கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.
பிகார் மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் தில்மனி மிஷ்ரா அந்த கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். "நடந்த சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரியது. அவர்களுக்கு நியாயம் கிடைக்கும். அந்த கிராமவாசிகள் மூலம் அங்கு நடந்ததை கேட்டறிந்தோம். உதவி கண்காணிப்பாளர் அனைத்து குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்வதாக கூறினார். இதை மத்திய பெண்கள் ஆணையத்திடம் நாங்கள் கொண்டு செல்ல உள்ளோம்" என்றார்.
பகவான்புர் காவல் நிலையத்தில் இருந்த அதிகாரி, இந்த சம்பவம் நடந்துள்ள பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் முடிதிருத்தம் செய்தவர்களைத் தவிர அனைவரும் இஸ்லாமியர்களே ஆவர். அந்த தாயும் மகளும் அவர்களுக்கு அருகில் வசிப்பவர்களே, மேலும் அவர்களும் இஸ்லாமியர்கள். அவர்களின் வீட்டில் இருக்கும் ஆண்கள் பணியின் காரணமாக வெளியில் இருப்பதால் தாயும் மகளும் தனியே வசித்து வருகிறார்கள்.
"இந்த சம்பவம் மிகவும் கடுமையான குற்றத்திற்கு கீழ் வரும். இதை தவிர இப்போது வேறு ஏதும் கூற முடியாது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பாதிக்கபட்டவர்களின் கூற்றின் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை இதை விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்வோம்" என வைஷாலியின் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜீவ் ரெளஷன் கூறியுள்ளார்.
பீகாரில் பெண்கள் தாக்கப்படுவது இது முதல்முறை அல்ல. சில மாதங்களுக்கு முன்பு ஒரு வயதான மூதாட்டி சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டார். அவரை நிர்வாணப்படுத்தி அந்த சந்தை முழுவதும் சுற்றினர். இதற்காக புகார் பதிவு செய்யப்பட்டு இருபது பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
(நன்றி: பிபிசி தமிழ்)
Add new comment