Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தமிழ் எழுத்துக்கள் தேடும் இளைஞர்கள்
கீழடியில் அகழ்வாய்வு நடந்ததை பலரும் ஒரு செய்தியாக கடந்த சமயம், சென்னையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி ச. இளங்கோ, தமிழ் எழுத்துகளின் வரலாற்றை ஆவணப்படுத்தி ஒரு படம் எடுக்க முடிவுசெய்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் உழைப்பை செலுத்தி, நண்பர்களின் உதவியுடன் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தமிழ் எழுத்துகள் குறித்த ஆவணங்களை சேகரித்துள்ளார் இளங்கோ.
நண்பர்களான லோகேஷ் இளையபெருமாள் மற்றும் பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் படத்தை இயக்கியுள்ளார். அனைவருமே, திரைத்துறை மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே ஆவணப்படத்திற்காக பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர்.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவின் தயாரிப்பில், 'தமிழி' என்ற பெயரில் வெளியிடப்படவுள்ள ஆவணப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என்கிறார் இளங்கோ.
''கீழடியில் அகழ்வாய்வில் கிடைத்த குறியீடுகள் பற்றிய தகவல்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. ஆதியில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகளின் வடிவம் எப்படி இருந்திருக்கும்? தமிழ் மொழியின் தொன்மை எத்தனை காலங்களுக்கு முற்பட்டது என சாதாரண மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என எண்ணினேன். ஒவ்வொரு துறையிலும் நிபுணர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம் மொழியின் சிறப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும். புத்தகம் வாசிக்கவோ அல்லது பழைய கல்வெட்டுகள் உள்ள இடங்களை தேடிச் சென்று பார்ப்பதோ பலரால் இயலாது. அதற்கு ஆவணப்படம் பெரிதும் உதவும் என நண்பர்களோடு சேர்ந்து முடிவுசெய்தேன்,'' என ஆவணப்படம் உருவான கதையை நம்மிடம் சொல்கிறார்.
நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை பார்த்த பின்னர், இந்தியாவின் பல்வேறு இடங்களில் தமிழ் மொழியின் சுவடுகள் தென்படுவதை ஆவணப்படத்தில் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறுகிறார் இளங்கோ.
''இந்த படத்திற்காக சுமார் 18,000 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் நான்கு முறை சுற்றிவந்துவிட்டோம். ஆந்திரா, கர்நாடகா, குஜராத் என பிற மாநிலங்களில் உள்ள கல்வெட்டுகளில் பிராமி எழுத்துகளை கண்டபோது நெகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சில மலைக்கிராமங்களில் கல்வெட்டுகளை தேடி அலைந்து அங்கேயே தூங்கியதும் உண்டு,'' என்கிறார் அவர்.
'தற்போது எழுதப்படும் தமிழ் எழுத்துகளைப் போன்றவை முந்தைய காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. சிந்து சமவெளியில் கிடைத்த வரிவடிவங்கள், தமிழில் கிடைத்த பழமையான எழுத்து குறியீடுகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக தோற்றமளிக்கின்றன. தமிழ் எழுத்துகளின் பரிணாமத்தை சொல்லும் ஓர் வரலாற்றுப் பயணம்தான் இந்தப்படம்,'' என விளக்குகிறார் இளங்கோ.
தமிழி படத்தில் முக்கிய குறிப்புகளை வழங்கியுள்ள வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான ராஜவேலுவின் வாதம் நம்மை பிரமிக்கவைக்கிறது.
''தமிழ் மொழியின் எழுத்துகளை சமணர்கள் உருவாக்கினார்கள் என்ற கருத்தை பலர் சொல்கிறார்கள். ஆனால் தமிழக பகுதிகளில் உருவான எழுத்து வடிவத்தைதான் சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் வணிகர்கள் வட இந்தியா உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்றார்கள் என்பதை உணர்த்த அறிவியல் ரீதியாக குறிப்புக்கள் உள்ளன. சமீபமாக தேனி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு சுமார் கி.மு. 500ம் ஆண்டை சேர்ந்தது என தெரிய வருகிறது. இந்தியாவில் உள்ள பழமையான அசோகன் பிராமி கல்வெட்டு கிமு. 300ம் ஆண்டை சேர்ந்தது,''என்கிறார் ராஜவேலு.
குஜராத்தில் உள்ள அசோகன் பிராமி கல்வெட்டு, தஞ்சாவூர் பெரிய கோயில், விழுப்புரத்தில் திருநாதர் குன்றில் உள்ள கல்வெட்டு, மதுரை மாங்குளத்தில் கிடைத்தவை, ஆந்திராவில் ஏர்ராகுடி, கர்நாடகாவில் பெல்லாரியில் உள்ள சான்றுகள் என பல கல்வெட்டுகளை தமிழி படக்குழு ஆவணப்படுத்தியுள்ளது.
நான்கு ஆண்டுகளாக உருவாக்கிய காட்சிகளை எட்டு தொகுப்புகளாக தமிழி படக்குழு, விரைவில் ஒரு வெப் தொடராக படத்தை வெளியிட உள்ளது.
நன்றி பிபிசி தமிழ்
Add new comment