மூவொரு கடவுளின் உறவுகளா நாம்!


மூவொரு இறைவன் பெருவிழா; I: இச: 4: 32-34, 39-40; II: தி.பா: 32: 4-6, 9, 18-20,22; III: உரோ: 8: 14-17; IV : மத்: 28: 16-20

இன்றைய நாளில் நம்முடைய தாய்த் திருஅவையோடு இணைந்து மூவொரு கடவுள் பெருவிழாவினை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். மூவொரு கடவுள் பெருவிழா ஒரு மறையுண்மை கொண்டாட்டமாகும். கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார் என்பது நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் மறைபொருள். மூவொரு கடவுள் மூன்று ஆட்களாக இருந்தாலும் ஒரே உள்ளம் கொண்டவர்கள். தந்தையாம் கடவுள் படைத்தவராகவும் ஆண்டவர் இயேசு நம்மை பராமரிப்பவராகவும் தூய ஆவியார் நம்மைப் பலப்படுத்தப்படுத்துபவராகவும் இருக்கின்றனர். படைப்பின் தொடக்கத்திலேயே மூவொரு இறைவனின் செயல்பாட்டைக் காணமுடிகின்றது.

தந்தையாம் கடவுள் படைப்பின் தொடக்கத்தில் படைத்தவராகவும் வார்த்தை வடிவில் மகனாகிய இறைவனும் நீரின் மீது அசைவாடிய தூய ஆவியாகிய இறைவனும் பிரசன்னமாகியிருந்தனர். மூவொரு கடவுளால் இந்த உலகம் ஆற்றலோடு படைக்கப்பட்டது.

பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமுக்கு மூன்று மனிதர்கள் காட்சியளித்தனர். இந்த மூன்று ஆட்களையும் மூவொரு கடவுளோடு விவிலிய அறிஞர்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். புதிய ஏற்பாட்டிலே ஆண்டவர் இயேசு திருமுழுக்கு பெறும்போது தந்தை மகன் தூய ஆவியாரின் ஒன்றிப்பு அங்கு நடைபெற்றது. இயேசு தம் சீடர்களை நற்செய்திப் பணி செய்ய அனுப்பும் பொழுது "தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள் "என்று அறிவுறுத்தி அனுப்பினார். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். திருத்தூதர் பவுல் மூவொரு கடவுளின் ஆசிரை கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமடலில்  " ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக " (2கொரி: 13: 13) என்று வாழ்த்தியுள்ளார்.  இவ்வாறாக மூவொரு கடவுளின் முக்கியத்துவத்தை திருவிவிலியத்தில் பல சான்றுகளைக் கொண்டு காணமுடியும்.

மூன்று என்பது  கிறிஸ்தவத்தில் முக்கியமான எண்ணாக கருதப்படுகின்றது. விவிலியத்தில் மூன்று என்பது முழுமையை சுட்டிக்காட்டும் எண்ணாக கருதப்படுகின்றது.  கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கின்றார்.  இயேசு மூன்று முறை சோதிக்கப்பட்டார். இயேசு மூன்று முறை சோதிக்கப்பட்டதற்கு காரணம் இயேசு சோதனைகளை முழுமையாக வென்றவர் என்பதைச் சுட்டிக்காட்டவே .
இயேசுவுக்கு நெருங்கிய மூன்று சீடர்கள் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் முழுமையை சுட்டிக் காட்டுவதற்காகவே ஆகும். கடவுள் தாவீதுக்கு மூன்று வாய்ப்புகளைக் கொடுத்தார். இயேசு  இந்த உலக மீட்பிற்காக சிலுவையில் அறையப்பட்டு இறந்து மூன்றாம் நாள் மாட்சியோடு உயிர் பெற்று எழுந்தார். இது முழுமை நிறைந்த வெற்றியை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. இவ்வாறாக மூன்று என்ற எண்  மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

மூவொரு கடவுள் விழா நமக்கு சுட்டிக்காட்டும் செய்தி என்னவென்று சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். முதலாவதாக உண்மையான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்றனர். ஒரே கடவுள் மூன்று ஆட்களாக தங்கள் கடமைகளைச் செய்கின்றனர். மூன்று ஆட்களாக இருந்தாலும் ஒரே கடவுள் தான். ஏனெனில் அவர்கள் ஒரே திருவுளம்,  ஒரே இலக்கு, ஒரே மனநிலையைக் கொண்டுள்ளனர். மூவொரு கடவுளின் ஒன்றிப்பு மனநிலை ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றது. குறிப்பாக குடும்ப வாழ்வில் இணைந்துள்ள கணவனும் மனைவியும் மூவொரு இறைவனின் மனநிலையை கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இன்றைய காலச் சூழலில் குடும்பங்களில் அதிகமான பிரச்சனை இருப்பதற்குக் காரணம் மூவொரு இறைவனின் மனநிலையை கொண்டிருக்காமல் இருப்பதாகும். ஒரே சிந்தனையையும் ஒன்றிப்பையும்   தங்கள் குடும்ப வாழ்வில் கொண்டிருக்கும் பொழுது அவர்களின் வாழ்வு மகிழ்வும் அன்பும் நிறைந்ததாக இருக்கும்.

இரண்டாவதாக, மூவொரு கடவுள் கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமாக இருக்கின்றனர். ஏழு அருள்சாதனங்களும் மூவொரு கடவுளின் அருளையும் ஆசியையும் ஒன்றிப்பையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. திருமுழுக்கின் வழியாக மூவொரு கடவுளின் ஆசீர் கிடைக்கின்றது. இதன் வழியாக முதல் பெற்றோர் வழியாக வந்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு திருஅவையின் உறுப்பினர்களாக மாற வாய்ப்பு கிடைக்கின்றது. ஒப்புரவு அருள்சாதனத்திலும் மூவொரு கடவுளின் வழியாக மன்னிப்பு கிடைக்கின்றது. நற்கருணையும் மூவொரு கடவுளின் ஆசியால் நம் உழைப்பின் பயனான சாதாரண அப்பத்திலிருந்தும்  இரசத்திலிருந்தும் நமக்கு ஆன்ம உணவு கிடைக்கின்றது. உறுதிப்பூசுதல் அருள் சாதனத்திலும் மூவொரு கடவுளின் அருளால் தூய ஆவியின் கொடைகளும் கனிகளும் கிடைக்கின்றது. திருமணம் என்னும் அருள்சாதனத்திலும் மூவொரு கடவுளின் ஆசியால் திருமண உடன்படிக்கை நடைபெறுகின்றது .குருத்துவ அருள்பொழிவிலும் மூவொரு கடவுளின் அருள்பொழிவால் சாதாரண மனிதர் இயேசுவின் பிரதிநிதியாக அருள்பொழிவு செய்யப்படுகிறார்.  நோயில் பூசுதல் அருள்சாதனத்திலும் நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர் நலம் பெறுகிறார். இவ்வாறாக ஏழு அருள்சாதனத்திலும் மூவொரு கடவுளின் முக்கியத்துவத்தை காணமுடிகின்றது.

மூன்றாவதாக, மூவொரு கடவுள் உண்மையான உறவுக்குச் சான்று பகர்கின்றனர். கடவுள் மூன்று ஆட்களால் செயல்பட்டு உறவில் ஒரே உள்ளத்தால் நிறைந்திருந்தனர். நம்முடைய அன்றாட வாழ்விலும் உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். பிறருடைய துன்பத்திலும் இன்பத்திலும் பங்குகொள்ளவும் உடனிருக்கவும்  முயற்சி செய்வோம். அவ்வாறு வாழ்கின்ற பொழுது நாமும் மூவொரு கடவுளின் உறவுகளாக மாறுவோம்.

இறைவேண்டல் :
மூவொரு கடவுளே! உம்மைப் போல நாங்களும் ஒற்றுமையிலும் அருளிலும் உறவிலும் ஒரே திருவுளத்திலும் இணைந்திருக்க அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 0 =