Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கடவுள் நம் அழுகுரலைக் கேட்பார்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் பதிமூன்றாம் புதன்; I: தொநூ: 21:5,8-20; II: 33:7-8,10-13; III: மத் :8:28-34
நாம் அனைவரும் வாழ்க்கையில் பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்து செல்கிறோம். சில நிகழ்வுகள், நோய்கள், தோல்விகள், பலவீனங்கள் மற்றும் தீய சக்திகள் நமக்குள் நம்பிக்கையற்ற தன்மை, உதவியற்ற தன்மை மற்றும் உயிரற்ற தன்மையை உணரவைக்கின்றன. யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் தனிமையில் நாம் அழுகிறோம்.ஆனால், கடவுள் எப்போதும் தம் குழந்தைகளாகிய நம் அழுகையைக் கேட்டு உதவுவார். இன்றைய வாசகங்கள் இந்த நம்பிக்கையை நமக்குத் தருகின்றன.
முதல் வாசகத்தில்,ஆகார் எனும் அடிமைப்பெண் அவளுடைய மகனும் பாலைநிலத்திற்கு துரத்தப்பட்டதை வாசிக்கிறோம். ஆகார் தன் மகன் பாலைநிலத்தில் உணவும் நீருமின்றி இறப்பதைக் காணத் தைரியம் இல்லாமல் தன் மகனை ஒரு புதருக்கு அடியில் வைத்துவிட்டு தூரமாய் அமர்ந்து துயரப்பட்டுக்கொண்டிருந்தாள். மகனோ கத்தி அழுதுகொண்டிருந்தான். ஆனால் கடவுள் அவர்களை ஒருபோதும் விட்டுவிடவில்லை. குழந்தையின் அழுகையைக் கேட்டு அவர்களை மீட்க ஒரு வாதூதரை அனுப்பி அவர்களுக்கு புது வாழ்வை வாக்களிக்கித்தார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கல்லறைகளுக்கிடையில் வாழ்ந்த இரண்டு பேய்பிடித்த மனிதர்களைக் குறித்து காண்கிறோம். அவர்கள் எவ்வளவு உயிரற்றவர்களாக இருந்தார்கள் என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது. அவர்கள் பலவித உடல் மற்றும் மன வேதனைகளை அனுபவித்திருப்பார்கள். தீயஆவியால் அடிமைப்பட்டு சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட அவர்கள் கல்லறையின் மத்தியில், இறந்த உடல்களின் இடத்தில் வாழ்ந்தனர்.
அவர்களை மீட்பதற்காக இயேசு வந்தார். தீய ஆவிகளைத் துரத்துவதன் மூலம், அவர் அவர்களுக்கு புதிய வாழ்வைக் கொடுத்தார். கல்லறையில் வாழ்ந்த அவர்களை உயிருள்ளவர்களின் நடுவில் வாழச்செய்து, வாழ்க்கையில் புதிய நம்பிக்கையைக் கொடுத்தார்.
அன்புள்ள நண்பர்களே
வாழ்க்கையின் துன்பகரமான தருணங்களில், கடவுள் நம் கண்ணீரைத் துடைக்க நிச்சயம் வருவார்.நாம் அவரை அழைக்காவிட்டாலும் நம்மை மீட்க வருவார் எனும் நம்பிக்கை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்வோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் எங்கள் அழுகுரலைக் கேட்டு நீர் மீட்க வருவீர் என்ற ஆழமான நம்பிக்கையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment