முதன்மையானவர்கள் யார்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் எட்டாம் செவ்வாய்; I: சீஞா: 35: 1-12; II: தி.பா: 50: 5-8, 14, 23; III : மாற்: 10: 28-31

நாம் வாழும் இந்த உலகத்தில் எத்தனையோ நல்ல உள்ளம் கொண்டவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எந்தவொரு  எதிர்பார்ப்புமின்றி சேவைகள் பல புரிந்து வருகின்றனர்.இப்படிப்பட்ட சமூகத்தில் ஒரு சில தற்பெருமை பிடித்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் ஏழைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச வேட்டி சேலை கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த உதவியைச்  செய்துவிட்டு தனக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். மதிப்பும் மரியாதையும் கொடுக்காதவர்களுக்கு உதவி செய்ய மறுத்து விட்டார். இதைக்கண்ட பணக்காரரின் நண்பர் "நீ உதவி செய்வது  முற்றிலும் வீண்" என்று கூறினார். அதற்கு பணக்காரர் "இவ்வாறு ஏன் கூறுகிறார்?" என்று வினவினார். அதற்கு அந்த பணக்காரர் "செய்கின்ற உதவியை கைமாறு கருதாமல் செய்ய வேண்டும். கைமாறு கருதி சுயநலத்தோடு உதவி செய்தால் அந்த உதவி முற்றிலும் வீண் " என்று கூறினார்.

பல நேரங்களில் நம்முடைய மனநிலையும் இவ்வாறு தான் இருக்கின்றது. நாம் செய்கின்ற சிறிய உதவியை வைத்து பிறரிடம் அதிகமாக மதிப்பையும் மரியாதையையும் எதிர்பார்க்கின்றோம். இத்தகைய மனநிலை தவறான மனநிலை ஆகும். இயேசுவின் சீடர்களும் இத்தகைய மனநிலையைத் தான் கொண்டிருந்தனர்.

இன்றைய நற்செய்தியில் திருத்தூதர் பேதுரு " பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று கூறினார்.  இந்த மனநிலை தாங்கள் முதன்மைப்படுத்த பட்டு ,தங்களுக்கு கைமாறு மிகுதியாக கொடுக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவது போல் இருக்கின்றது.

கடவுளிடம் நாம் வரும்பொழுது நாம் மிகுந்த எதிர்பார்ப்போடு வரக்கூடாது. மாறாக, நம்மை முதன்மைப்படுத்தாமல் பிறர் வாழ்வு வளம் பெற பிறருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாம் மட்டும் முதன்மையான இடத்தைப் பிடிக்க நினைக்காமல், எல்லோரும் முதன்மையான இடத்தை பிடிக்க வழிகாட்டவேண்டும்.  செய்கின்ற கடமையை நற்பெயர் பெற வேண்டுமென்பதற்காகச் செய்யாமல்,     முழு ஈடுபாட்டோடு செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். 

எனவே தான் ஆண்டவர் இயேசு "முதன்மையானவர் பலர் கடைசி ஆவர். கடைசியானோர் முதன்மை ஆவர் " என்று கூறியுள்ளார். நாம் நம்முடைய  வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெறுவதற்கு தேடி அலைய தேவையில்லை. மாறாக,  கடைசி நிலையில் உள்ளவர்களை முன்னேற்றப் பாதையை நோக்கி வழிகாட்டும் பொழுது,  நிச்சயமாக நாம் கடவுளின் பார்வையில் முதன்மையானவர்களாக மாறுவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் முதன்மையான இடத்திற்கு ஆசைப்படாமல், கடை நிலையிலுள்ள மக்களுக்கு கடமை உணர்வோடு பணியாற்றுவதன் வழியாக உமது அன்பைப் பெற்று உம் இதயத்தில் முதன்மையான இடத்தைப் பெற தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

9 + 2 =