பிறரை அவர் வழியில் வாழவிடுவோமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் இரண்டாம் திங்கள் - I. எபிரேயர் 5:1-10; II. திபா: 110:1,2,3,4; III. மாற்கு 2:18-22

ஒரு குடும்பத்தில் வயது முதிர்ந்த பெற்றோர்கள் தங்கள் பேரக்குழந்தைகள் மீது அதிக அக்கறையும் பாசமும் கொண்டவர்களாய் இருந்தனர். ஆயினும் அவர்கள் அக்குழந்தைகளின் விருப்பு வெறுப்புக்களைப் புரிந்து கொள்ளாமல் எப்போதும் தங்களுடைய விருப்பங்களை மட்டும் அவர்கள் மீது திணிக்க முற்பட்டனர். பழைய சித்தாந்தங்களை பின்பற்றுமாறு அவர்களைத் தூண்டினர். இதனால் அவர்களுக்கிடைய பல முரண்பாடுகளும் ஏன் உறவு விரிசல்களும் ஏற்பட ஆரம்பித்தது. 

இன்று பெரும்பாலான குடும்பங்களில் பெரியவர்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை நாம் காணலாம். "நாங்கள் அப்படி இருந்தோம். எங்கள் முன்னோர்கள் அவ்வாறு செய்தார்கள். நீங்கள் ஏன் செய்வதில்லை?" என்ற ஒப்பிடுதல்கள் பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கின்றன.நல்லவற்றை செய்யத் தூண்டுவது நம் கடமை. ஆனால் அதை இடத்திற்கும், தலைமுறைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு சொல்வதே சிறந்தது.

இன்றைய நற்செய்தியில் இயேசுவுடைய சீடர்களை யோவானுடைய சீடர்களோடு ஒப்பிட்டு, அவர்கள்  நோன்பு  இருப்பதில்லை என்ற குற்றச் சாட்டு வைக்கப்படுகிறது. அதற்கு இயேசு தகுந்த பதிலளிக்கிறார். ஒவ்வொரு குருவின் வழிமுறைகளும் வேறாக இருக்கும். அவர்கள் தத்தம் சீடர்களுக்கு கற்பிக்கும் போதனைகளும் வெவ்வேறாக இருக்கும். வழிகாட்டுதல்கள் வித்தியாசமாக இருக்கும். அவற்றை ஒப்பிட்டு குறைகூறுவது நல்லதல்ல என்ற கருத்தை இயேசு இங்கு பதிவு செய்கிறார்.

"எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது” என்றார்" (மாற்கு 2:21-22) என்ற வார்த்தைகள் இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில் நமக்குத் தரப்பட்டுள்ளன. இவ்வார்த்தைகளைத் தியானிக்கும் போது நமது அன்றாட வாழ்வில் நடைபெறும்  சாதாரண நிகழ்வுமூலம் மிகப்பெரிய வாழ்வியல் பாடத்தை இயேசு நமக்குக் கற்றுத்தருவது புலப்படுகிறது.

நமது சொல்லும்,செயலும்,முயற்சிகளும், நாம் வெளிப்படுத்துகின்ற கருத்துக்களும் கால சூழ்நிலைகளுக்கும், அவற்றை எதிர் கொள்ளும் மனிதருக்கும் பொருந்துபவையாக இருக்க வேண்டும். நமது விருப்ப வெருப்புக்களை மட்டும் பூர்த்தி செய்பவையாக இருக்கக்கூடாது என்ற வாழ்வின் எதார்த்தத்தை இயேசு வெளிப்படுத்துகிறார். இக்கருத்துக்கள் மூலம் நாம் மற்றவரைப் புரிந்து கொண்டு நடக்கவும், பிறரை குறைகூறுகின்ற தேவையற்ற பழக்கத்தைக் கைவிடவும் இயேசு வலியுறுத்துகின்றார். அமைதியான நன்மை பயக்கின்ற வாழ்க்கைச் சூழலுக்கு மிகவும் தேவையான இப்பண்புகளை இறைவனிடம் வேண்டிப் பெறுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா நீர் எங்களை புரிந்து கொண்டு, எங்கள் விருப்பங்களை உணர்ந்து கொண்டு, முழுச்சுதந்திரத்துடன் உம் வழிகளைப் பின்பற்ற எம்மைத் தூண்டுவதைப் போல, நாங்களும் பிறரின் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு, ஒப்பிட்டுப் பார்க்கும் பண்பினைக் களையவும், எம் வழிமுறைகளைப் பிறரிடம் திணிக்காமல் நல்ல செயல்களை அவரவர் வழிகளில் செய்யத் தூண்டுபவர்களாக வாழும் வரம் தாரும். ஆமென்

Add new comment

1 + 8 =