நற்செய்தியை அறிவிக்கப் புறப்படுவோமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம்-முதலாம் சனி
மு.வா: திப: 4:13-21
ப.பா: தி.பா: 117:1,14-21
ந.வா :மாற்கு 16:9-15

தற்போதுதான் தேர்தல் நிறைவுற்றது. மற்ற வருடங்களைப் போல் அல்லாமல் இம்முறை ஊடகத்தின் வாயிலாகவும் பிரச்சாரங்கள் நடந்தேறியது. ஒருசில கட்சிகள்  இதை செய்வோம் அதை செய்வோம் என வாக்களித்து பல விளம்பரங்களை வெளியிட்டனர். ஒரு சில கட்சிகள் நாங்கள் எங்களின் ஆட்சிக்காலத்தில் இவற்றையெல்லாம் செய்தோம். எங்களை ஆதரியுங்கள் என தாங்களாகவே தம்பட்டம் அடித்துக்கொண்டு ஓட்டு கேட்டார்கள். ஆனால் மக்களுக்குத் தெரியும் யார் எவ்வளவு நன்மைகள் செய்தார்கள் என்று. ஏனென்றால் அவர்கள் கண்டார்கள், கேட்டார்கள், அனுபவித்தார்கள்.

நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் பல சுவாரசியமான செய்திகளைக் காண்கிறோம். கேட்கிறோம்.  நல்லவையோ, தீயவையோ அவற்றைப்பற்றி நாம் சிந்திப்பதில்லை. மாறாக அதை எத்தனை பேருக்குப் பரப்ப முடியுமோ அத்தனை பேருக்கும் பரப்பி விடுகிறோம். அவற்றை பற்றி பேசாமல் நம்மால் இருக்கமுடிவதில்லை. 

தங்களுடைய செல்வாக்கு பாதிக்கக் கூடாது என்பதற்காகவே இயேசுவைத் திட்டமிட்டுக் கொன்றவர்கள், அவருடைய பெயராலேயே சீடர்கள் நற்செயல்கள் செய்வதைக் கண்டு மீண்டும் அஞ்சினார்கள். எனவே பேதுருவிடமும் யோவானிடமும் இயேசுவின் பெயரால் போதிக்கக்கூடாது என எச்சரிக்கின்றனர். அதற்கு இருவரும் கூறிய பதில் "நாங்கள் கண்டதையும் கேட்டதையும் சொல்லாமல் இருக்க இயலாது" என்பதுதான். இயேசுவின் உயிர்ப்பால் திடம் பெற்று துணிச்சலுடன் இயேசுவோடு தாங்கள் பெற்ற அனுபவங்களை நற்செய்தியாய் பறைசாற்ற எதிர்ப்புகளுக்கும் எச்சரிக்கைகளுக்கும் மத்தியில் துணிகிறார்கள் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துக்கூறுகிறது.

நாமும் இறைவார்த்தையைக் கேட்கிறோம். இயேசுவை நம் வாழ்வின் பல்வேறு நிகழ்வுகள்,மனிதர்கள் மூலம் கண்டுணர்கிறோம். அனுபவிக்கிறோம். அதை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறோமா? தேவையற்ற செய்திகளைப் பரப்ப நாம் காட்டும் ஆர்வம் ஏன் நற்செய்தியை அறிவிப்பதில் இல்லாமல் போனது? சிந்திப்போம்.
இன்றைய நற்செய்தியில் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் என இயேசு கட்டளை இடுகிறார். இது அன்று சீடர்களுக்கு மட்டும் அல்ல இன்று நமக்கும் கொடுக்கப்பட்ட கட்டளை. எனவே அக்கட்டளையை ஏற்று துணிவுடன் நற்செய்தியை அறிவிக்கும் வரம் கேட்போம்.

இறைவேண்டல்

இயேசுவே எம் வாழ்வில் உம்மை நாங்கள் அதிகம் அனுபவிக்கிறோம். அவ்வனுபவத்தை நற்செய்தியாய் மற்றவருடன் பகிரும் வரம் தாரும் ஆமென்.

Add new comment

9 + 0 =