நல்வாழ்வை ஊக்குவிப்பவர்களா நாம்? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் முதலாம் வியாழன் - I. எபி: 3:7-14; II. திபா: 95:6-7,7-9,10-11; III. மாற்: 1:40-45

நாம் அனைவரும் அறிவியல் பாடத்தில் வினையூக்கி என்பதைப்பற்றி படித்திருப்போம். வினையூக்கி என்பது இரு வேதிப்பொருட்கள் வினையின் மூலம் இணைந்து புதிய பொருள் உருவாகும் போது அச்செயல்பாட்டின் வேகத்தை அதிகரித்து புதிய பொருள் உருவாக்கத்தை வெற்றியாக்குகிறது. அதேபோல இச்சமூகத்தில் நல்வாழ்வை ஊக்குவிப்பவர்களாக நாம் மாற அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய முதல்வாசகத்தில் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துங்கள் என்ற வார்த்தைகள் தரப்பட்டுள்ளன.அதுவும் இன்றே நமது மீட்பு நாள் என்ற உள்ளுணர்வோடு நாம் பிறரை ஊக்கப்படுத்த வேண்டும். நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் பிறரை ஊக்கப்படுத்துகிறோமா? எச்செயல்களுக்காக ஊக்கப்படுத்துகிறோம்? என சிந்திக்க இன்று அழைக்கப்பட்டுள்ளோம். 

வாழ்வில் நம்பிக்கையற்று தளர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு நாம் தருகின்ற ஊக்கமும் உற்சாகமும், வீழ்ந்து கிடக்கும் அவர்களை எழுப்பி விடுவதாய் அமைய வேண்டும். தன்னுடைய திறமைகள், பதவிகள், பொறுப்புகள் போன்றவற்றை தனக்கு மட்டுமல்லாது மற்றவரின் நலனுக்காகவும் பயன்படுத்தும் நல்லவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுடன் துணைநிற்க வேண்டும். நல்லவை செய்வதால் அல்லலுறும் பணியாளர்களைத் திடப்படுத்தி தளர்ந்து போகா வண்ணம் அவர்களைத் தூக்கிவிட வேண்டும். நல்லவற்றையே நாமும் செய்து அதையே பிறரும் செய்யும் வண்ணம் ஒருவர் மற்றவரை ஒவ்வொரு நாளும் ஊக்கப்படுத்த வேண்டும். இதையே கடவுள் விரும்புகிறார். ஆனால் நாமோ நல்லன அல்லாதவற்றையும்,கடவுளைச் சாராமல் உலகம் சார்ந்தவற்றையுமல்லவா உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இந்நிலை மாற வேண்டும்.

இயேசு வாழ்ந்த காலத்தில் நல்வாழ்வை ஊக்குவிப்பவராகவே அவர் விளங்கினார். தன்னுடைய போதனைகள், அருஞ்செயல்கள் அனைத்தின் மூலமும் தனிமனித வாழ்வை மட்டும் அன்றி சமூக மாற்றத்தையும் ஊக்கப்படுத்தினார். ஆன்ம விடுதலை வாழ்வில் அனைவரும் வளர தந்தையின் பெயரால் மக்களை உற்சாகப்படுத்தினார். இன்றைய நற்செய்தியில் இயேசு தொழுநோயாளியைக் குணமாக்கிய நிகழ்வு அதற்கு ஒரு சிறந்த உதாரணம். "நீர் விரும்பினால் என்னை நலமாக்கும்" என்று கேட்ட தொழுநோயாளியை குணமாக்கி அவர் நம்பிக்கையை ஊக்குவிக்கும் இயேசு அதோடு நின்றுவிடாமல் சமூகத்தில் அவர் நன்மதிப்புடன் வாழ, அவர் செய்யவேண்டிய காரியங்களை நினைவுபடுத்தி வழிநடத்துகிறார். இயேசுவை பின்பற்றும் நாமும் அவ்வாறே நல்வாழ்வை ஊக்குவிக்கும் வினையூக்கிகளாக மாற வரம் கேட்போம். 

இன்று பொங்கல் விழா. நன்றியின் நாள். இயற்கையோடு இணைந்து இறைவனுக்கு நன்றிகூறுவோம். உணவளிக்கும் உழவர்களுக்கும் நன்றி கூறுவோம். அதே வேளையில் வேளான் சட்டத்திற்கு எதிராக அவர்கள் மேற்கொண்டுள்ள அறப்போராட்டத்தில், அவர்களை ஆதரித்து அவர்கள் வெற்றி பெறவும்,நல்வாழ்வு பெறவும் அவர்களை ஊக்கப்படுத்துவோம்.

இறைவேண்டல்

வாழ்வளிக்கும் இறைவா! உம்மைப்போல் நாங்களும் நல்வாழ்வை ஊக்குவிக்கப்பவர்களாக வாழும் வரம் தாரும். ஆமென்.

Add new comment

1 + 1 =