Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நம்பிக்கையால் அனைத்தும் நிகழுமா!
இன்றையவாசகங்கள் (04.12.2020)
திருவருகைக் காலத்தின் முதல் வெள்ளி
I: எசா: 29: 17-24
II: திபா: 27: 1. 4. 13-14
III: மத்: 9: 27-31
"நம்பிக்கையால் அனைத்தும் நிகழுமா! "
'நம்பிக்கை' என்பது மனித வாழ்வில் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது. நம்பிக்கையில்தான் ஒவ்வொரு மனிதரும் வாழ்கின்றோம். நம் அன்றாட உணவை சமைத்துத் தருபவர்களை நம்புவதால் மட்டுமே நாம் தைரியமாக உணவு உட்கொள்கிறோம். நாம் பேருந்தில் பயணம் செய்கின்ற பொழுது ஓட்டுனர் மீது கொண்ட நம்பிக்கையால்தான் தைரியமாக பயணம் செய்கிறோம். கோழிக்குஞ்சுகள் தனது தாய் தங்களைக் காக்கும் என்ற நம்பிக்கையோடு தான் அதன் பின்னாலேயே செல்கின்றன. இவ்வாறாக நம்பிக்கையின் மேன்மையை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆண்டவர் இயேசு தன்னுடைய வாழ்வில் எத்தனையோ வல்லச்செயல்களைச் செய்துள்ளார். அதுவும் நம்பிக்கை உள்ள இடத்தில் மட்டும் தான் அவரால் வல்லச்செயல்களைச் செய்ய முடிந்தது. நம்பிக்கை இல்லாத இடத்தில் அவரால் வல்ல செயல்களைச் செய்ய முடியவில்லை. இன்றைய நற்செய்தியில் "இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'' என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர்" என வாசிக்கிறோம். பார்வையற்ற நபர்களின் நம்பிக்கையே அவர்கள் பார்வையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை கொடுத்தது. பார்வையற்றோர் தங்கள் வாழ்வை ஒவ்வொரு நாளும் வாழ்வதென்பது சற்று சவாலான ஒன்றாகும். இன்றைய நற்செய்தியில் வருகின்ற இரண்டு பார்வையற்ற நபர்கள் பிறவிலேயே பார்வையற்றவர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இயேசு வாழ்ந்த காலக்கட்டத்தில் பல நபர்கள் பார்வையற்ற நிலையில் இருந்தனர். இதற்கு காரணங்களாக விவிலிய அறிஞர்கள் " பாலஸ்தீன நாட்டில் குருடர்களுக்கு குறைவில்லை. சுகாதாரக் குறைவும், சூரிய ஒளியின் தாக்குதலும் இதற்கு காரணம் " எனவும் கருதுகின்றனர். பார்வையை இழந்து துன்பத்தில் வாழ்ந்த இந்த பார்வையற்ற இருவர் நம்பிக்கையோடு இயேசுவை "தாவீதின் மகனே " என் அழைத்து குணம் பெற வேண்டினார். "தாவீதின் மகனே " என்பது "மெசியாவை" குறிக்கும் சொல்லாக இருக்கிறது. இயேசுவை தாவீதின் மகன் என்று பார்வையுள்ள மனிதர்களால் அறிந்து கொள்ள இயலவில்லை. ஏனென்றால், அவர்களின் அகக்கண்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால் குருடர்கள் பார்வையற்றவர்களாக இருந்தாலும் அவர்களின் அகக்கண்கள் திறந்திருந்தன. எனவே இயேசுவை தாவீதின் மகனாகவும், நம்மை மீட்க வந்த மீட்பராகவும் அடையாளம் காண முடிந்தது. நம்வாழ்வு இறைநம்பிக்கையில் வலுப்பெற்றால் மட்டுமே நம்முடைய அகக்கண்கள் திறக்கப்படும். பார்வையற்ற அந்த இருவர் "தாவீதின் மகனே " என்று நம்பிக்கையோடு இயேசுவை நோக்கிக் கதறி அழைத்தனர். இயேசுவும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் பொருட்டு, அவர்களுக்குப் பார்வையளித்தார்.
இறைவனுடைய ஆற்றலையும் வல்லமையையும் நாம் அனுபவித்திட இறைநம்பிக்கை மிகுந்தவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். அதற்கு நம்முடைய அகக் கண்களை தூய்மை படுத்துவோம். அகக் கண்கள் தூய்மையாக இருக்கும் பொழுது புறக் கண்களும் தூய்மையாக இருக்கும். அதன்வழியாக ஆண்டவர் இயேசுவினுடைய மீட்பின் செயல்களை முழுவதுமாக உணர்ந்து மீட்பின் கனியைச் சுவைக்க முடியும்.
பார்வையற்ற இருவர் தங்களுடைய அகக்கண்களைத் திறந்தவர்களாய் இறை நம்பிக்கையோடு இயேசுவிடம் நலம் பெற்றதைப் போல, தூய வாழ்வின் வழியாகவும் நம்மையே ஆயத்தப்படுத்துவதன் வழியாகவும் இயேசுவின் அருளையும், ஆசியையும் நிறைவாய் பெற்று புது வாழ்வை நாம் பெறுவோம். அப்பொழுது ஆண்டவர் இயேசுவைப் போல அக இருள் நீக்கும் இறை கருவிகளாக புனிதத்துவ வாழ்வுக்குச் சான்று பகர முடியும். எனவே ஒளியாகிய இயேசுவிடம் நம்மையே இணைத்துக் கொள்ள பாவம் என்னும் இருளை நம்மிடமிருந்து அகற்ற முன்வருவோம். அதன் வழியாக நாம் பிறருக்கு ஒளி கொடுக்கும் கருவியாக மாறமுடியும். இத்தகைய வாழ்வை நம்பிக்கையோடு வாழத்தான் திருவருகைக் காலம் நம்மைத் தயாரிப்புச் செய்கிறது.
எனவே நமது அன்றாட வாழ்வில் நம்முடைய இறை நம்பிக்கையை வளர்த்து 'இயேசு' என்னும் ஒளியை காணமுடியாமல் துன்பப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் அவரின் ஒளியைக் கொடுத்திட தேவையான அருளை வேண்டுவோம். இந்த திருவருகைக்காலம் இயேசு என்ற ஒளியை உலகிற்கு காட்ட வேண்டிய காலம். எனவே நம்முடைய அன்றாட நற்பணிகள் வழியாகவும், மனிதநேய செயல்பாடுகள் வழியாகவும், இறைநம்பிக்கையின் வழியாகவும், இயேசு என்ற ஒளியை பிறருக்க்கு கொடுத்து அவருடைய கண்களும் திறக்கப்பட்டு "மெசியா " எனும் மீட்பரின் அளப்பரிய அன்பைச் சுவைக்க முயற்சி செய்வோம். அதற்குத் தேவையான அருளை இன்றைய நாளில் வேண்டுவோம்.
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் பாவம் என்னும் இருளினால் எங்களுடைய அகக்கண்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே நீர் தரும் மீட்பை நாங்கள் உணர முடியாமல் இருக்கின்றோம். அதற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்கின்றோம். எங்களுடைய தூய்மையான வாழ்வின் வழியாகவும், மனமாற்றத்தின் வழியாகவும், எங்களையே தகுதிப்படுத்திக் கொண்டு உமக்கு உகந்த வகையில், நம்பிக்கையோடு கூடிய உண்மை வாழ்வை, உளமார வாழ்ந்திட அருளைத் தாரும். நீர் எங்களுக்கு ஒளியாய் இருந்தது போல உமது பிள்ளைகளாகிய நாங்களும் பிறருக்கு ஒளியாக இருக்க தேவையான அருளைத் தாரும். ஆமென்.
திருத்தொ.குழந்தை இயேசு பாபு
சிலாமேகநாடு பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment