அன்பில் அச்சத்திற்கு இடமில்லை! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


திருக்காட்சி பெருவிழாக்கு பின் வரும் புதன் 
I: 1யோவா:  4: 11-18
II: திபா: 72: 1-2. 10-11. 12-13
III: மாற்: 6: 45-52

ஒரு ஊரில் தாயும் அவருடைய பெண் குழந்தையும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். ஏழைக்குடும்பம். தாயானவள் தினமும் வேலைக்குச் சென்றால் தான் அவர்களுக்கு உணவு. தொடக்கத்தில் தாயானவள் வேலைக்குச் செல்லும் இடத்திற்கு தன் குழந்தையையும் கூட்டிச் செல்வது வழக்கம். ஆனால் நாளடைவில் முதலாளி குழந்தையை அழைத்துவர தடை விதித்தார். தனக்கு சொந்தமென்று  யாருமில்லா ஊரில் யாரிடம் குழந்தையை விட்டு வருவது என்று குழப்பத்தில் இருந்தார் . தன் மகளுக்குத் தேவையான உணவைத்    தினமும் வீட்டில் தயாரித்து வைத்து விட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு போய்விடாலாம் என திட்டமிட்டார். தன் மகளை அழைத்து " அம்மாவுக்கு உன்னை மிகவும் பிடிக்கும். நீ மற்றவரிடம் திட்டு வாங்குவது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் நீ வீட்டிலேயே இருந்து கொள்.  அம்மா உனக்குத் தேவையான அனைத்தையும் செய்து வைக்கிறேன். பபயப்படாமல் இரு . அம்மா எப்போதும் உன்னுடன் தான் இருப்பேன்" என்று  தன் மகளிடம் கூறினார். மகளும் தன் தாயிடம்"சரி அம்மா. நீங்கள் என்னை அன்பு செய்கிறீர்கள். எனக்கு நல்லதைத்தான் செய்வீர்கள். நான் பயப்படாமல் இருப்பேன்" என்று சொல்லி தன் அம்மாவை அணைத்துக் கொண்டாள்.

இது பல ஏழைக்குடும்பங்களில் நடைபெறும் எதார்த்தமான நிகழ்வு. ஆனால் நமக்குக் கூறும்  சிந்தனை  அன்பிருக்கும் இடத்தில் அச்சம் இல்லை என்பது தான்.இன்றைய நற்செய்தி வாசகத்தில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த தம் அன்பு சீடர்களைக் காப்பாற்ற கடல்மீது நடந்து வந்த தன்னைக் கண்டு பேய் என்று எண்ணி பயம் கொண்ட சீடர்களைப் பார்த்து "துணிவோடிருங்கள். நான்தான் அஞ்சாதீர்கள்" என்ற வார்த்தைகளைக் கூறுகிறார் இயேசு.  இங்கு இயேசுவின் மனநிலையையும் சீடர்களின் மனநிலையையும் நாம் ஒப்பிட்டுப்பார்ப்போம். 

இயேசு தன் சீடர்களை அன்புசெய்தார். எனவே தான் அவர்கள் துன்பத்தில் இருந்ததைக் கண்டு துணை செய்ய விரைந்து வந்தார். அவர்களின் பயத்தை தன்னுடைய அன்பான வார்த்தைகளால் நீக்குகிறார்.ஆனால் சீடர்களின் கண்களை  பயம் மறைத்ததால் வருவது இயேசுதான் என்பதைக்கூட அவர்களால் உணர இயலவில்லை.இது அவர்கள் இயேசுவின் மேல் கொண்ட குறைவான அன்பை தெளிவாகக் காட்டுகிறது. எங்கே அன்பு  ஆழமாக இருக்கிறதோ அங்கே முழுமையான நம்பிக்கை இருக்கும். பயம் அற்றுப்போகும். 

இன்றைய முதல்வாசகத்தில் திருத்தூதர் யோவான் மீண்டுமாக அன்பைப் பற்றிப் பேசுகிறார். அன்பு உள்ள இடத்தில் அச்த்திற்கு இடமில்லை என்று கூறுகிறார். நாம் கடவுளைக் கண்டதில்லை. இருப்பினும் அவர் நம்முடன் இருப்பதை உணர்கிறோம். அவர் நம்மை அன்பு செய்கிறார் என நம்புகிறோம். அந்நம்பிக்கையில் நம்மிடம் இருக்கின்ற அச்ச உணர்வுகள் அகன்று போகவேண்டும். கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்று நம்பினால் ,நம்மை அவர் மன்னிப்பாரா?நம்மை அப்படியே ஏற்றுக்கொள்வாரா? இல்லை நமம்மைத் தண்டிப்பாரா? போன்ற பய உணர்வுகளெல்லாம் நம்மிடம் இருக்கவே கூடாது. அதேபோல நாம் யாரையெல்லாம் அன்பு செய்கிறோமோ அவர்களிடத்தில் நம்மைப் பற்றிய எவ்வித அச்ச உணர்வுகளும் இல்லாத வண்ணம் நம்பிக்கையும் துணிச்சலும் அளிக்கக்கூடியதாய் நம் அன்பு அமைய வேண்டும். நம்மிடம் அத்தகைய அன்பு உள்ளதா என ஆராய்வோம். அதற்கான வரத்தை கடவுளிடம் கேட்போம்.

இறைவேண்டல் 

அன்பு இறைவா! நீர் எங்களை ஆழமாக அன்பு செய்கிறீர் என்பதை உணர்ந்து, அந்த அன்பு தரும் துணிச்சலில் வாழ்வின் தேவையற்ற பயங்களை நீக்கவும், அத்தகைய ஆழமான அன்பையும் நம்பிக்கையையும் மற்றவருக்கும் வழங்கவும் அருள் தாரும். ஆமென்.

 

 

Add new comment

12 + 0 =